

தமிழின் முதல் சமூகத் திரைப்படமான ‘டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி’ வெளியான 1935இல் தொடங்கி, 1955 வரையிலான இரு பத்தாண்டுகளில் நான்கு விதமான புதிய போக்குகள் தமிழ் சினிமாவில் உருவாகின. புராண, இதிகாசக் கதாபாத்தி ரங்களில் சலிப்புற்று வெளியேறிய தமிழ் சினிமா, சமூகப் படங்களுக்கு நடுவே சண்டை மற்றும் சாகசப் படங்களிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியது முதல் போக்கு.
புராண, இதிகாசப் படங்களைக் கணிசமாகக் கைகழுவி விட்டாலும் வாய்மொழி இலக்கியத்தில் புகழ்பெற்று, குடத்திலிட்ட விளக்குபோல் மறைந்து கிடந்த நாட்டார் கதைகளையும் கடவுளர்கள் மீது கொண்ட தீவிர பக்தியால் மக்கள் வரலாற்றில் கலந்த புகழ்பெற்ற பக்தர்களின் கதையையும் தூசி தட்டிப் படமாக்கியது இரண்டாம் போக்கு. இதில் பக்தர்களின் கதைகளைப் பேசிய படங்கள் பெரும்பாலும் இசைப் படங்களாக இருந்தன.