

தீபாவளி உற்சாகம் ரசிகர்களைத் தொற்றிக்கொள்வதற்கு முன் கோடம்பாக்கத்தில் இப்போதே களை கட்டுகிறது வாண வேடிக்கை. முதல் திரியைக் கொளுத்தியிருக்கிறார் ‘ஐ’ படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஷங்கரின் இயக்கம், விக்ரமின் அபார அர்ப்பணிப்பு ஆகிய இரண்டு பெரிய தோரணைகளுடன், இரண்டு வருட அவகாசத்தில் உருவாகியிருக்கும் ‘ஐ’ திரைப்படம் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் எனத் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே வெற்றிக் கூட்டணியாகப் பெயர் வாங்கியிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று ஆரம்பம் முதலே சொல்லி வருகிறார் அதன் இயக்குநர்.
உஷார் உத்தம வில்லன்!
இந்த இரண்டு மெகா யானை வெடிகள். இருக்க, விஸ்வரூபம் என்ற மெகா வெற்றியை ருசித்த கமல், அதன் சூடு ஆறுவதற்குள் ‘உத்தம வில்லன்’ எனும் ஆயிரம் வாலா காமெடி சரவெடியைத் தீபாவளிக்கு வெடிக்கும் அதிரடியுடன் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் . தற்போது ‘ஐ’யும் ‘கத்தி’யும் கச்சை கட்டிக் களத்தில் நிற்பதால், உஷாரான ‘உத்தம வில்ல’னைத் தீபாவளிக்கு 20 நாட்கள் முன்னதாகவே காந்தி பிறந்த நாளில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
அப்படியானால் கமலின் விஸ்வரூபம்-2 என்னவானது? தீபாவளிக்கு ‘ஐ’ வெளியாகும் அத்தனை திரையரங்குகளிலும் ‘ஐ’ வெளியான மூன்று வாரங்கள் கழித்து விஸ்வரூபத்தை வெளியிடத் திரையரங்குகளுடன் பேசிவருகிறாராம் ரவிச்சந்திரன். விஸ்வரூபம் 2-க்கும் அவர்தான் தயாரிப்பாளர் என்பதால் இந்த ஏற்பாடாம்.
மோதலா, விலகலா?
உத்தம வில்லன் முந்திக்கொண்டு வெளியாகும்போது தீபாவளியைக் குறிவைத்துத் தயாராகியிருக்கும் விஷாலின் ‘பூஜை’யும், தனுஷின் ‘அநேக’னும் விலகிச் செல்வார்களா இல்லை, இந்த மலைகளோடு மோதுவார்களா என்பதை விரைவில் தெரிந்துகொள்ளலாம். ‘ஐ’யின் பிரமாண்டத்துக்கு, முன்னால் கத்தியே வழிவிட்டு ஒதுங்கினால் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள். ஆனால் விஜய் ரசிகர்கள் தரப்பிலோ “எதிரும் புதிருமாகப் பார்க்கப்படும் அஜித் - விஜய் நடிப்பில் வெளியான ஜில்லாவும் - வீரமும், கடந்த பொங்கலுக்கு வெளியானதே? அதேபோல விக்ரமின் ‘ஐ’ யும் எங்கள் விஜயின் கத்தியும் வெளியாவதில் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை. தியேட்டர்கள் ஒதுக்குவதிலும் பிரச்சினையும் ஏற்படாது . ஏனென்றால் விக்ரமும் விஜயும் நெருக்கமான நண்பர்கள்” என்று கத்திக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.
ஆனால் கத்தியின் தயாரிப்பு நிறுவனம் குறித்த சர்ச்சை, இன்னும் சமாதானத்தை எட்டாத நிலையே தொடர்வதால், தியேட்டர் உரிமையாளர்கள் கத்தி விஷயத்தில் தெளிவு பிறக்கும் வரை காத தூரத்தில் தள்ளி நிற்கவே விரும்புகிறார்களாம். ஆக, கத்தி எந்த நேரத்திலும் தீபாவளிப் போட்டியிலிருந்து விலகலாம் என்பதே யதார்த்தம். கத்தியின் தனிப்பட்ட பிரச்சினையுடன் ‘ஐ’யின் பிரமாண்டமும் இதற்குக் காரணமாக இருக்கும் என்கிறார்கள்.
‘ஐ’யின் பிரமாண்டம்
தமிழ் சினிமா வரலாற்றில் பிரமாண்டத் தயாரிப்பு என்ற சாதனையை ‘எந்திரன்’ படம் ஏற்படுத்தியது. ஆனால் ‘ஐ’ அதை முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சுமார் ரூ.180 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது இந்தியா, சீனா உட்படக் குறைந்தது 8 ஆயிரம் திரையரங்குகளில் படத்தை வெளியிட்டுத் தயாரிப்புச் செலவைப் போல இரண்டு மடங்கு லாபத்தை ஈட்ட வேண்டும் என்று திட்டமிட்டு மார்க்கெட்டிங்கில் இறங்கியிருக்கிறார்களாம். சீனாவிலும் படத்தை வெளியிட முக்கியக் காரணம், ஐ படத்தின் கதையில் சீனாவுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதும், அங்கே பாதிப் படம் எடுக்கப்பட்டிருப்பதும் என்கிறார்கள். ஐ படத்தில் விக்ரமின் உழைப்பும், அதன் மேக்-அப் பிரமாண்டமும் ஒருபுறம் இருக்க, இந்தப் படம், தனது காதலன், ஜீன்ஸ் படங்களின் வரிசையில் காதலைப் பேசும் படம்தான் என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர். இது சமூகப் பிரச்சினையைப் பேசும் படமல்ல என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் கதாநாயகன் ரசாயனத் தாக்குதலுக்கு ஆளான ஒரு கதாபாத்திரம் என்று காதைக் கடிக்கிறார்கள் ஷங்கர் வட்டாரத்தில். ஐ படத்துக்குப் பிறகு ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் அவருக்கு ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு அமையும் என்பது படத்தில் பணியாற்றிய பலரது ஊகம்.
கத்தியின் அரசியல் களம்
கடந்த 2012-ல் தீபாவளி தினத்தில் வெளியாகி விஜய்-முருகதாஸ் முதல்முறையாகக் கூட்டணியமைத்த ‘துப்பாக்கி’ வசூல் சாதனை செய்தது. அதே செண்டிமெண்டில் கத்தி படம் உருவானது. ஆனால் இம்முறை முருகதாஸ் கதைக்களமாகத் தேர்ந்துகொண்டிருப்பது அரசியலும் ஊழலும் என்று தெரியவருகிறது. அழகிய தமிழ் மகன் படத்துக்குப் பிறகு இரட்டை வேடங்கள் ஏற்றிருக்கிறார் விஜய். ஒருவர் ஊழல் அரசியல்வாதி. மற்றவர், அவரை எதிர்த்து மக்களுக்காகப் போராடுபவர் எனத் தெரிகிறது. மாற்று அரசியலைப் பேசப்போகும் கத்திக்கு எதிராக நிஜமான அரசியல் களத்திலிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது.
எதிர்ப்பை வென்று கத்தி தீபாவளிக்கு வெளியாகுமா? விரைவில் தெரிந்துவிடும்.