சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்

சட்டமும் நீதியும் - நீதியின் மீது பாயும் ஒளி! | ஓடிடி உலகம்
Updated on
1 min read

நீதி எல்லா உயிர்களுக்குமானது. எனவேதான் நீதியை நிலை நாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற நிலையை அரசமைப்பு உறுதிபட வரையறுத்து. அப்படிப்பட்ட நீதியை நிலைநாட்டவே நீதி மன்றங்கள் இருக்கின்றன. ஆனால், சாமானியர்களுக்குப் பெரும்பாலான சூழ்நிலையில் நீதி தேவதையின் கடைக்கண் பார்வை கிடைப்பதில்லை. அதற்குத் தடையாகச் சட்டப் பரிபாலனம் செய்யும் காவல் துறையும், அதை மயக்கத்தில் ஆழ்த்திவிடும் ஊழலும் காரணமாக இருக்கின்றன.

நீதி கிடைக்கும் என நம்பி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து, தீக்குளித்து மாண்டுபோகிறார் குப்புசாமி என்கிற ஓர் ஏழைத் தந்தை. அடையாள மற்றவர் என்று காரணம் காட்டி, இறந்தவரைப் பற்றிய எந்த விசாரணையும் செய்யாமல் காவல் துறையே அவரது எரிந்த உடலை எரியூட்டிவிடுகிறது. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளத்தையே அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறது.

ஒரு சாமானியனுக்காக மற்றொரு சாமானியன் தான் வர வேண்டும் என்கிற யதார்த்தக் கோட்பாட்டின்படி இதையொரு பொதுநல வழக்காக்குகிறார் ‘நோட்டரி பப்ளிக்’ வழக்கறிஞரான சுந்தரமூர்த்தி.

அவரால் குப்புசாமியின் வாழ்க்கைப் பக்கங்களில் புதைக்கப்பட்ட அநீதியை அடையாளம் கண்டு, அதை வெளிக்கொண்டு வர முடிந்ததா? அவருக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பெற்றுத் தர முடிந்ததா என்பது தான் ஜீ 5 தளத்தின் அசல் உள்ளடக்கங்களின் வரிசையில் வெளியாகியிருக்கும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடரின் கதை.

இதைக் கதை என்பதைவிட, சமூகத்தில் காணும் அன்றாடக் காட்சி என்றே கூறிவிடலாம். நீதிமன்றம் ஏறி வாதாட வாய்ப்பின்றி, வளாகத்துள், ஆவணங்களுக்குச் சான்றளிக்கும் ‘நோட்டரி பப்ளிக்’ ஆக வாழ்க்கையை நகர்த்திவரும் சுந்தரமூர்த்தி கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம், 7 எபிசோட்களையும் கண்களை நகர்த்தாமல் காண வைக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிட கால அளவு என்பதும் ஒரு முக்கியக் காரணம்.

முதன்மைக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் சரவணன், சுந்தரமூர்த்தியாக வாழ்ந்திருக்கிறார். சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ள அக்கதாபாத்திரம், வாழ்க்கையை அதன் போக்கில் யதார்த்தமாக அணுகுவது, அதன் நம்பகத்தன்மையைக் கூட்டியிருகிறது.

சுந்தரமூர்த்தி, குப்புசாமியின் மரணத்துக்கு எவ்வாறு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் போராடுகிறார் என்பதை, நீதியின் மீது ஒளி பாய்ச்சும் விதமாக இத்தொடரை எழுதியிருக்கிறார் சூர்ய பிரதாப். ஒவ்வொரு எபிசோடையும் சிறு தொய்வும் இல்லாமல் இயக்கியிருக்கிறார் பாலாஜி செல்வராஜ்.

இத்தொடரில் நடிகர்களாக வரும் அனைவரும் சிறந்த பங்களிப்பைத் தந்திருந்தாலும் சுந்தரமூர்த்தியின் உதவியாளராக வரும் நம்ரிதா, குப்புசாமியாக வருபவர், அரசுத் தரப்புக்கு வாதாடும் ஆரோன் ஆகியோர் மனதில் பதிகிறார்கள்.

இத்தொடரை உயிருள்ள ஒன்றாக மாற்றுவதில் உள்ளடக்கத்துக்கு முதலிடம் என்றால், இரண்டாம் இடத்தில் விபின் பாஸ்கரின் அற்புதமான இசையை வைக்கலாம். தமிழ்த் திரையுலகம் ஒரு சிறந்த இசையமைப்பாளரை இத்தொடரின் மூலம் பெற்றிருக்கிறது. நேரத்தின் மதிப்பைப் பெரிதும் மதித்துள்ள இத்தொடரை ஒரே மூச்சில் கண்டு மனம் கசியலாம்.

- jesudoss.c@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in