| படங்கள் உதவி: ஞானம் |
இந்து டாக்கீஸ்
‘இந்தி’ய சினிமாவுக்கும் இவர் முன்னோடி! | கண் விழித்த சினிமா 23
ஒரு புதிய கலை, தோற்றம் பெற்று வளரத் தொடங்கிய காலத்திலும், அது ‘பேசும் பட’மாக, அடுத்த பெரிய பாய்ச்சலுக்குத் தயாரான காலத்திலும், இந்தி, தமிழ் ஆகிய இரு படவுலகங்களுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைத் தந்தவர் ராஜா சாண்டோ. அவர் ஒரு நடிகராக, இயக்குநராக, இந்தி, தமிழ் சலன சினிமாவில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த காலத்தில்தான், ஒலித் தொழில்நுட்பம் அறிமுகமானது.
பேசும் படங்களில் நடிப்பதும் அதை இயக்குவதும் பல மடங்கு சவாலாக அமைந்தது. தீவிர ஒத்திகைக்குப் பின், லைவ் சவுண்ட், லைவ் இசை ஆகியவற்றுடன் படம் பிடிக்க வேண்டியிருந்தது. ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் படச் சுருள் வீண். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இயக்குநரின் ஆளுமை என்பது, ஒரு படத்தின் பல நிலைகளில் பணியாற்றும் கலைஞர்களை ஒருங்கி ணைக்கும் கடினமான, அதேநேரம் கற்பனைத்திறன் தேவைப்படும் பணியாக மாறியது.
