

‘அன்பே..!’ என்பான் காதலன். ‘ஆரமுதே..!’ என்பாள் காதலி. ‘கண்ணே..!’ என்றழைப்பான் கணவன். ‘பிராண நாதா..!’ என்பாள் மனைவி. காதலி ஒரு மரத்தைத் தொட்டப்படி நின்றால், பத்தடி தூரத்திலிருக்கும் மற்றொரு மரத்தைப் பிடித்தபடி நிற்பான் காதலன். கணவன் - மனைவி என்றால் வீட்டின் முற்றத்துத் தூண்களைப் பிடித்துக் கொள்வார்கள்.
1931இல் தொடங்கி தமிழ் சினிமாவில் நான்கு ஆண்டுகள் இடம்பெற்று வந்த காதல் காட்சி களில் அவ்வளவு ‘தீண்டாமை’ இருந்தது. ஆனால், ராஜா சாண்டோ தாம் இயக்கிய ‘மேனகா’ (1935) படத்தில், காதலின் நெருக்கம், வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று மாற்றிச் சித்தரித்தார். ஸ்ரீ சண்முகானந்தா சபாவை வெற்றிகரமாக நடத்திக்கொண்டி ருந்த டி.கே.எஸ் சகோதரர்களின் முதல் திரைப்பிரவேசம்தான் ‘மேனகா’. பிற்காலத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் என்கிற ஸ்டுடியோ சாம்ராஜ் யத்தை நிறுவிய மொய்தீன் - சோமசுந்தரம் இருவருக்கு ‘மேனகா’தான் முதல் தயாரிப்பு. அதன் படப்பிடிப்புக் காக சபாவின் மொத்த நடிகர்களும் மும்பை போய்ச் சேர்ந்தனர்.