கிளைமாக்ஸ் பட்ஜெட் மட்டுமே 25 கோடி!

கிளைமாக்ஸ் பட்ஜெட் மட்டுமே 25 கோடி!
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக, அரசியலிலும் தனது சக்தியைக் காட்டியிருப்பவர் ‘பவர் ஸ்டார்’ என்று அவருடைய ரசிகர்களால் அழைக்கப்படும் பவன் கல்யாண். அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், அவருடைய மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பன்மொழித் திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘அசுர கானம்’ ஹைதராபாத்தில் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்புக் கான பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய். இப்படத்தில் நாசர், சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் படத்தின் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா நம்மிடம் பிரத்யேகமாகப் பேசினார்.

“பவன் கல்யாண் வரும் காட்சிகள் அனைத்தையும் 5 கேமராக்களை வைத்து ஷூட் செய்திருக்கிறேன். இரண்டு பாகங்களாகப் படம் வரவிருக்கிறது. மொத்தம் 200 நாள்கள் ஷூட் செய்தேன். இந்திய மற்றும் ஹாலிவுட்டில் உள்ள 25 நிறுவனங்களுக்கு கிராஃபிக்ஸ் பணிகளைப் பகிர்ந்து கொடுத்தோம். கிளைமாக்ஸுக்கு மட்டுமே 25 கோடி செலவிட்டிருக்கிறோம். நிதி அகர்வால், இந்தப் படத்துக்காக வேறு எந்தப் படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் பொறுமை காத்தார். அவருக்கு என் நன்றி.

இப்படத்தில் பவன் கல்யாண், வீர மல்லுவாக, ஔரங்கசீப்பைப் போன்ற ஒரு முகலாய அரசரின் ஆட்சியில் கொடுமைகளை அனுபவிக்கும் மண்ணின் மக்களைக் காப்பாற்ற வரும் ஒரு ராபின் ஹூட் வீரரைப் போல் வருகிறார். கதைப்படி அவர் ஒரு குற்றவாளி. மற்றொரு சூழ்நிலையில் கவியரசராகவும் வருகிறார்.

பாபி தியோல், வீர மல்லுவுடன் மோதும் முகலாய பேரரசராக வருகிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை அனைத்து மொழிப் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும். இவ்வளவு நாள்கள் காத்திருக்க வைத்ததற்கு ஏற்ப படம் இருக்கும்” என்றார்.

அகில இந்திய ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர், ஆஸ்கர் விருதுபெற்ற எம்.எம். கீரவாணி (தமிழ் சினிவுக்கு அவர் மரகத மணி), படத்தின் கதாநாயகி நிதி அகர்வால், பாடலாசிரியர்கள், பாடலைப் பாடிய பாடகர்கள் உள்படப் பலரும் கலந்துகொண்டனர். பவன் கல்யாண் கலந்துகொள்ள வில்லை. அவர் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வருவார் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in