

தமிழ் நாடகத்தின் பொற்காலம் என்று 19ஆம் நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் 30 ஆண்டுகளையும் வரையறுத்துவிடலாம். பேசும் படங்களுக்குக் கிடைக்கத் தொடங்கிய அதிதீவிர வரவேற்பால், நகரங்கள் தோறும் தோன்றியிருந்த நாடக அரங்குகள், திரையரங்குகளாக மாற்றம் கண்டன.
கந்தசாமி முதலியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற டி.கே.எஸ். சகோதரர்களின் பால சண்முகானந்த சபா போன்ற வெகு சில குழுக்களைத் தவிர, துரதிர்ஷ்டவசமாக எழுபதுக்கும் அதிகமான கம்பெனி நாடகக் குழுக்கள் 30களில் வரிசையாக மூடப்பட்டன. சில நாடகக் குழுக்கள் தங்களின் சபா பெயரில் ‘டாக்கீஸ்’ என்கிற பெயரைச் சேர்த்துக்கொண்டு பட நிறுவன மாக மாறிப் பிழைக்க வேண்டிய நிலையும் உருவானது.