

தமிழ் சினிமா பேசத் தொடங்கியிருந்தபோது, மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நாடகம், நடனம், இசைக் கச்சேரி ஆகிய வற்றுக்கு அச்சுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்தன. சினிமாவைக் கண்டு கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சுகுண விலாச சபாவின் பம்மல் சம்பந்தம், ரங்கவடிவேலு ஆகியோர், அவர்களின் புகழ்பெற்ற புராண நாடகமாகிய ‘காலவா ரிஷி’ (1932) திரைப்படமாவதில் ஈடுபடுகின்றனர் என்கிற தகவல், பத்திரிகைகளை சினிமாவின் பக்கம் தலையைத் திருப்ப வைத்தது.
‘தி இந்து’, ‘ஆனந்த விகடன்’, ‘மணிக்கொடி’ ஆகிய பத்திரிகைகள் அதைப் பற்றி படத்துடன் செய்தி வெளியிட்டன. ‘மணிக்கொடி’ ஒருபடி மேலே சென்று படப்பிடிப்பு நடந்த பாம்பாய்க்கே போய், ஸ்டுடியோவில் படத்தின் நாயகன் பி.பி.ரங்காச்சாரி என்ன செய்துகொண்டிருந்தார், படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என வருணனை செய்து எழுதியிருந்தது.