

சூரியன் மறையாத அளவுக்குப் பூமிப் பந்தின் பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள். குறிப்பாக, விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் விரிந்த ராஜ் யத்தையும் ஆட்சி செய்த (1837-1901) காலக்கட்டம், உலக அளவில் கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது வரலாறு.
ரயில்பாதைகள் அமைப்பு, நகர்மயமாதல் ஆகிய வற்றுடன் பாராளுமன்றம் மற்றும் பத்திரிகைத் துறையிலும் மறு மலர்ச்சி ஏற்பட்டது. விக்டோரிய காலத்தில்தான், ஆங்கிலக் கவிதையில் ‘டிரமாட்டிக் மோனோ லாக்’ (Dramatic monologue) என்கிற நாடகத்தன்மை கொண்ட புதிய வடிவம் பிறந்து, மொழியையும் நிகழ்த்துக் கலையையும் இணைத்தது. நாடக அரங்குகளில் மோனோலாக்குகள் புகழ்பெற்று விளங்கின. நாடகத்தில் ‘மெலோ டிராமா’ என்கிற புதிய அணுகு முறையும் புகழ்பெறத் தொடங்கியது.