

பான் இந்திய நட்சத்தி ரங்களின் படையெடுப்பு இன்றைக்குப் பிரபலமாக இருக்கலாம். ஆனால், 25 வருடங்களுக்கு முன்பே தன்னுடைய நடனத்தின் வழியாக இந்தியர்களின் இதயங்களை வென்றெடுத்தவர் பத்மஸ்ரீ பிரபுதேவா. பரதம், ஃபோக், வெஸ்டர்ன் ஆகியவற்றின் அட்டகாசமான கலவையில் இவர் வடிவமைத்து ஆடும் நடனங்களில் ஊற்றெடுக்கும் ‘எனர்ஜி’, பார்க்கும் எவரையும் தீயெனப் பற்றிக்கொள்ளும். இவரின் கால்கள், கைகள், உடல், முகம் என ஒவ்வோர் அங்கமும் காட்டும் வேகமும் அவற்றின் வித்தைகளையும் பார்த்து, ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்று உலகத்தின் உதடுகள் உச்சரித்து மகிழ்கின்றன. ஆனால் இவர், மைக்கேல் ஜாக்சனையும் விஞ்சும் ‘திரவ அசைவு’களைத் (Fluid movements) தன் உடலில் வழியவிடுகிற ஜிலீர் கலைஞன்! இவருடைய நடனக் கற்பனையில் உருவான திரையிசைப் பாடல்களின் தாக்கம், இரண்டாம் தலைமுறையிலும் பல நூறு புதிய திறமையாளர்களை உருவாக்கியிருக்கிறது.
இப்போதுவரை இளமையாக, தன் நடன பாணியில் புதுமைகளைப் புகுத்தியபடி துளியளவும் துவளாமல் தன் கலை வாழ்வின் உச்சத்தில் இருக்கும் பிரபுதேவா, முதல் முறை யாகத் தன்னுடைய 3 மணிநேர ‘லைவ்’ நடன நிகழ்ச்சியை வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்காகக் கடந்த 1 மாத காலமாக நடன ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியை அருண் ஈவண்ட்ஸ் ஒருங்கிணைத்து நடத்துகிறது. ‘தி கிங் ஆஃப் டான்ஸ் - பிரபுதேவாவின் ‘வைப்’ (The King of Dance - Prabhudeva’s VIBE - Live in Dance Concert) எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை டிக்கெட் விற்பனையுடன் அறிமுகப்படுத்தும் ஊடகச் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் பிரபுதேவா, வேல்ஸ் கல்விக் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ், பட அதிபர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
200 சதவீதம் கொடுப்பேன்: இந்த நிகழ்வில் பிரபுதேவா பேசும்போது: “இது மிக இனிமையான தருணம். இப்படியொரு நிகழ்ச்சியை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அருண் ஈவண்ட்ஸுக்கு என் முதல் நன்றி. அவர்களது இந்த முயற்சிக்கு ஹரிகுமார் முதுகெலும்பாக இருக்கிறார். அவர்தான் இந்த நிகழ்ச்சியின் ஈவண்ட் டைரக்டர். இனி எல்லாம் ரசிகர்களாகிய உங்கள் ஆசீர்வாதம்தான். லைவ் நிகழ்ச்சி எனும் போது நீங்கள் சினிமாவில் பார்ப்பதுபோல் எதிர்பார்ப்பீர்கள். சினிமா படப் பிடிப்பில் ஒரு பாடலுக்கு கட் பண்ணி, கட் பண்ணி ஆடுவோம். மேடையில் அப்படி முடியாது; தொடர்ந்து 8 நிமிடம் வரை ஆட வேண்டும். அதற்கு ‘ஸ்டாமினா’ வேண்டும். அதைப் பெறுவதற்குத் தொடர்ந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறேன். நீங்கள் எதிர்பார்த்து வருவதைவிட 200 சதவீதம் கொடுப்பேன். இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
நடன நிகழ்ச்சியின் இயக்குநர் ஹரிகுமார் பேசும்போது: “திரையுலகில் 10 வருடம் கடந்தாலே பெரிய சம்பவம். ஆனால் பிரபுதேவா மாஸ்டர் 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருப்பது ஆசீர் வாதம். அதிலும் ஒரு நடன இயக்குநராக இருப்பதும் இப்போதும் ஆடத் தயாராக இருப்பதும் நடன அதிசயம்!. அவருடன் இவ்வளவு காலமாக நான் இணைந்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை. இந்த லைவ் நிகழ்ச்சியை ஒப்புக் கொண்ட கணத்திலிருந்து இப்போது வரை, இடைவிடாத ஒத்திகையில் ஈடுபட்டு வருவதுடன் தேர்ந்தெடுத்துள்ள ஒவ்வொரு பாடலையும் எப்படியெல்லாம் பிரசெண்ட் பண்ணலாம் என்று அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றிக் கூற இன்னும் ஏராளம் இருக்கிறது” என்றார்.
உலக சுற்றுலாவின் தொடக்கம்: நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தும் அருண் ஈவண்ட்ஸ் அருண் குமாரிடம் இப்படியொரு நிகழ்ச்சிக் கான யோசனை பிறந்தது பற்றிக் கேட்டதும் உற்சாகமாகப் பேசினார்: “சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களில் மட்டுமே இதுவரை 350 பிரம் மாண்ட லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். இசைஞானி இளைய ராஜா சாரின் பிரம்மாண்ட ‘லைவ்’கள் மட்டும் 7 நடத்தியிருக்கிறேன். எஸ்.பி.பியை வைத்து மட்டுமே 14 நிகழ்ச்சிகள். இப்படிப் பாடகர்களுக்கான பிரத் யேக ‘லைவ்’கள் என்று பார்த்தால் பி.பி.ஸ்ரீநினிவாஸ், ஜானகி அம்மா தொடங்கி இன்றைய சித் ஸ்ரீராம், ஜொனிட்டா காந்தி வரையில் யாரையும் விட்டு வைக்கவில்லை.
இசை நிகழ்ச்சியிலிருந்து மாறுதலாக ஒரு பிரம்மாண்ட நடன நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நினைத்தபோது பிரபுதேவா சாரைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை. எப்படி இசை என்றால் இளையராஜாவோ, நடனமென்றால் அது பிரபுதேவா என்கிற வசீகரம்தான். இன்றைக் கும் அவரது நடனத் தொழில் நுட்பம் நவீனம் நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாத் தலைமுறையிலும் இந்தியா முழுவதும் அவருக்கு மொழி கடந்த ரசிகர்கள் ஏராளம். அவர்களை மகிழ்விக்க இந்தியாவிலேயே முதல் முறையாக அதுவும் அவர் பிறந்து வளர்ந்த சென்னையில் அந்த லைவ் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று முடிவு செய்தே இதில் இறங்கினேன். இந்த நிகழ்ச்சியை, இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நடத்த இருப்பதுடன், ‘வேர்ல்டு டூர்’ ஆக உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லவும் இருக்கிறோம்.
எனக்கு முன், பலர் கேட்டும் பிரபுதேவா இதுபோன்ற ஒரு லைவ் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் இதுவரை நிகழ்ச்சி களை எப்படி நடத்தினேன், இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவேன் என்கிற நிகழ்ச்சித் தயாரிப்பு வடிவமைப்பை அவருக்குக் காட்டியதும் ஒப்புக்கொண்டார். அதில் முக்கியமான ஒன்று நிகழ்ச்சியின் தொடக்கப் பாடல். அதில், 100 பிரபுதேவாக்கள் ஒரே நேரத்தில் மேடையில் தோன்றி ஆடினால் எப்படியிருக்கும்! அதைச் சாத்தியமாக்குகிறோம். இந்த நிகழ்ச்சி நட்சத்திரங்களின் மாநாடாகவும் அமையப்போகிறது. பலர் பிரபுதேவா மாஸ்டருடன் ஆடவும் ஒப்புக்கொண்டு ஒத்திகை செய்து வருகிறார்கள்” என்றவர், இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய தன்னுடன் கைகோத்திருப்பவர்களைப் பற்றிச் சொன்னார்: “நூறு படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றியவர், ‘மதுரைச் சம்பவம்’ உள்பட 6 படங்களில் கதாநாயகனாக நடித்தவர், பிரபுதேவா மாஸ்டருடன் நீண்ட காலமாக உடன் பயணித்து வருபவருமான ஹரிகுமார் இந்த நிகழ்ச்சியின் ‘ஷோ டைரக்டர்’ ஆக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை என்னுடன் இணைந்து ஒருங்கிணைப்பதில் ‘கிளிண்டெல்’ வி.எம்.ஆர். ரமேஷ், ‘ஜீஸ்டார்’ உமாபதி - ஜெய்சங்கர் ஆகியோர் என்னை வலுப்படுத்துகிறார்கள். மேலும் வண்ணம் செலிபரேஷன் புனிதா - செந்தில் குமார், மொத்த டிக்கெட் விற்பனையாளர் ஐபா (Iba) அபிமன்னன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானது.
இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஸ்பான்சர்களில் வேல்ஸ் கல்விக் குழுமம் - எஸ்.எஸ்.ஐ - டிஎம்டி கம்பிகள் நிறுவனம் ஆகியோர் முக்கிய மானவர்கள். ஜிஸ்கொயர், ஐஸ்வர்யா மருத்துவமனை, துர்கா டி.எம்.டி. கம்பிகள் உள்ளிட்ட 20க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’, ‘விடுதலை’ உள்ளிட்ட பல பெரிய படங்களின் கலை இயக்குநர் கிரண்தான் இந்த நிகழ்ச்சிக்கும் ஆர்ட் டைரக்டர். இளையராஜாவின் லைவ் நிகழ்ச்சிகளுக்கு ஒலி - ஒளி வடிவமைத்த ஜே.டி.எச். ஜான்சன்தான் இந்த நிகழ்ச்சிக்கும் அதை வழங்குகிறார். இவ்வளவு பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் ஒரு சமூக நோக்கம் இருக்க வேண்டாமா? ‘பிளாண்ட் எ பில்லியன் ட்ரீஸ்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம், ரசிகர்களின் மனதில் பசுமைச் சிந்தனையை ஊக்குவிக்க, அதன் இன்றைய அவசரத் தேவையை வலியுறுத்த எங்களுடன் இணைந்திருக்கிறது. 2025ஆம் ஆண்டின் பிரம்மாண்ட வரலாற்றுக் கலை நிகழ்வாக ‘வைப்’ அமையும்” என்றார்.
- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in