ஒரு ரத்தினமும் சில முத்துகளும் | தமிழ் சினிமா 2024

ஒரு ரத்தினமும் சில முத்துகளும் | தமிழ் சினிமா 2024
Updated on
2 min read

கடந்த ஆண்டில் ‘மனதில் நின்ற’ பத்து சிறந்த படங்களின் பட்டியல், டிசம்பர் 20ஆம் தேதியிட்ட இந்து டாக்கீஸ் பக்கத்தில் வெளியானது. அதனோடு, கவனம் ஈர்த்த படங்களையும் அடையாளம் காட்டியிருந்தோம். டிசம்பர் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் வெளியான படங்களில் ‘விடுதலை 2’ உள்பட சில படங்களின் முக்கியத்துவம் குறித்தும் காண்போம்:

இங்குள்ள அமைப்பின், ஆதிக்க, அழித்தொழிப்பு மனப்பான்மையின் மைய அச்சாக விளங்கும் உள்ளரசியலைத் திரைப்படங்களின் வழி பேசும் இந்திய இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் கலைநேர்த்தியுடன் தனது இருப்பைக் காட்டி வருபவர்.

அவரது எழுத்து, இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படத்தில், ‘இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களும் நிகழும் சம்பவங்களும் யாருடைய வாழ்க்கையையும் நினைவூட்டினால் அது தற்செயலானதே’ என்கிற பொறுப்புத் துறப்பு வாசகம் இடம்பெற்றிருந்தது. ஆனால், படத்தில் வரும் பெருமாள் வாத்தியாரின் போராட்ட வாழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 55 வருடங்களுக்கு முன்பு, ஆதிக்க, அதிகார வர்க்கத்துக்கு எதிராக வாழ்ந்து மறைந்த புலவர் கு.கலிய பெருமாளின் வாழ்கையை நினைவூட்டியது.

தனது ஆயுதப் போராட்ட அரசியல் வாழ்க்கைக்காக மரணத் தண்டனை பெற்று, அதன்பிறகு ஆயுள் தண்டனை, விடுதலை என வாழ்ந்து மறைந்தாலும் தமிழ் மனதிலிருந்து கலியபெருமாள் மறக்கப்பட்ட ஓர் ஆளுமையாக ஆனார்.

அவர், கையிலெடுத்தது, ‘பாப்புலர் பாலிடிக்ஸ்’ என்கிற ஓட்டு அரசியலுக்கு எதிர்நிலை. அவர் மறக்கப்பட்டதன் பின்னணிக்கு அதுவும் ஒரு காரணம். கலியபெருமாள் காலத்தில் நிலவிய பண்ணை அடிமை முறை வழக்கங்கள், விவசாயத் தொழிலாளர்களாக இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான கட்டற்ற வன்கொடுமைகள், படுகொலைகள், நிலங்களில், தொழிற்சாலைகளில் 12 மணி நேரத்துக்கும் அதிகமான உழைப்புச் சுரண்டல், அங்கே தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்ப முடியாமை எனும் சூழல் இன்று ஓரளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதில், எதிர் அரசியல் செய்து, ஆயுதமேந்தியவர்கள் உருவாக்கிய அழுத்தமும் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியதே.

அதற்காக, உரிமைகளுக்காக ‘ஆயுத மேந்துதல்’ என்பதை ‘விடுதலை 2’இல் மருந்துக்கும் வெற்றிமாறன் ஆதரிக்க வில்லை. வன்முறை ஒருபோதும் பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியாது என்பதை பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் வழியாகவே சொல்லியிருப்பது தான் ‘விடுதலை 2’ என்கிற படைப்பின் உன்னதம். காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மக்களில் இருந்தே வருப வர்கள்.

அவர்களைக் கொண்டே மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் அரச வன்முறையின் உள்ளரசியல், அரசு பெரும்பாலும் யாரின் பக்கம் சார்ந்து நிற்கிறது என்பதைச் சூரி, விஜய்சேதுபதி, ராஜீவ் மேனன் கதாபாத்திரங்களின் வழியாகச் சொன்ன விதம், தமிழ்நாட்டின் அரசியல், சமூக வரலாற்றை, தெளிவுறக் கற்றுப் புரிந்துகொண்டு ஓர் அரசியல் திரைப்படத்தை அணுகும் இயக்குநராக வெற்றிமாறனை அடையாளம் காட்டியிருக்கிறது.

சூரியை முதன்மைப்படுத்தி வெளியான ‘விடுதலை’ முதல் பாகத்தில், காவலர் குமரேசன் அதிகாரத்தின் சேவகனாக இருந்துகொண்டு, அதன் ஏவல்களைக் கேள்வியின்றிச் செய்தவர். அப்போது, அதே ஒடுக்குதலைத் தன் துறைக்குள்ளேயும் தன் உலகத்தில் சஞ்சரிக்கும் குரலற்ற மனிதர்களும் சந்திக்கும்போது, அரசதிகாரத்தின் உண்மை முகத்தைப் புரிந்துகொண்டு விழிப்படையும் கதாபாத்திரமாகப் பரிமாணம் பெற்றது.

இரண்டாம் பாகத்தில்: “யாரை, யார்கிட்டருந்து காப்பாத்த, யாரால எங்களுக்குத் துப்பாக்கிக் கொடுக்கப்பட்டுச்சுன்னு யோசிச்சிக்கிட்டு இருந் தேன்மா!” எனத் தனது அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிடும் குமரேசன், இந்தக் கேள்வியின் வழியாக முதலாளித்துவம், மக்கள், அரசாங்கம் ஆகிய மூன்று வர்க் கங்களின் மோதலில் அதிக சேதாரத்தைச் சந்திப்பது யார் என்பதை புலப்படுத்தும் இடம், இப்படம் நிகழ்த்தும் மைய உரையாடலாக அமைந்துவிட்டது.

அதேபோல் ஆயுதப் போராட்டம் என்பது எப்போதும் எளிய மக்களுக்கு எதிரானதாக மட்டுமே முடிந்திருக்கிறது என்பதை வாத்தியார் கதாபாத்திரத்தின் மனமாற்றத்தின் வழியாக முன்வைத் திருக்கிறார் இயக்குநர். அழித்தொழிப்பும் ஆயுதமேந்துவதும் தற்காலிகத் தீர்வுபோல் தோன்றினாலும் ‘மக்களைத் திரட்டிப் போராடுவதே நிரந்தரத் தீர்வு நோக்கி நகர்த்தும்’ என்பதைத் தன் தரப்பில் நேரும் பல உயிரிழப்புகளுக்குப் பின் உணர்கிறார் வாத்தியார். இறுதியில் அவர், ‘மொழிவழி தேசிய இன உரிமை’ மீட்பு என்கிற இடத்துக்கு வந்துசேர்கிறார். அதிகாரத்தைப் பிடிக்க அற ஒழுங்குகள் அனைத்தையும் மீறும் அரசியல் கட்சிகளால் விளைந்த வளச்சுரண்டல், அதைத் தொடர்ந்து செய்வதற்கான

அரசதிகாரம், அதற்காக அது காவல் துறையைக் கையாளும் விதம் என முழுத் திரைப் படத்தையும் அரசியல் உரையாடலாக மாற்றியிருக்கும் இயக்குநரின் கலைத் துணிவு, ‘விடுதலை 2’ படத்தைத் தமிழ் சினிமாவின் ரத்தினங்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது.

கடந்த பட்டியலில் இடம்பெறாமல் விடுபட்ட ‘பைரி’ படம், குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் பந்தயப் புறா வளர்ப்பு, அதன் பின்னணியில் ரத்தமும் சதையுமான நாட்டார் வாழ்க்கையை அசல் வட்டார வழக்குடன் சித்திரித்தது. அந்த மண்ணில் சிறப்புப் பெற்று விளங்கும் வில்லுப்பாட்டுக் கலையின் வழியாகவே கதை சொல்லிக் கவர்ந்தார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி.

உதய் கார்த்திக் எழுத்து, இயக்கத்தில் டிசம்பர் இறுதியில் வெளியான ‘பேமிலி படம்’, ஒரு பாசமான குடும்பத்தில் கடைக் குட்டி வாரிசாக இருக்கும் இளைஞனின் சினிமா இயக்குநர் கனவை நிறைவேற்றக் குடும்பத்தினரே தயாரிப்பாளர்கள் ஆகும் கதையாக விரிந்தது. அதில், திரையுலகின் உண்மையான தகிடுதத்தங்கள், குடும்பப் பாசம், காதல் என நம்பகமாக ஒவ்வொரு காட்சியும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

இறுதியாக, எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘அலங்கு’, கடந்த ஆண்டின் முத்துகளில் ஒன்று. சொந்தக் காரணத்துக் காக நாய்களைக் கொல்பவனுக்கும் அதை நேசிப்பவனுக்குமான போராட்டமாக விரிந்த இப்படம், மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதலில் விலங்குகளின் உயிருக்கான மதிப்பைச் சிறுமைப்படுத்தாத உயிர்நேயத்தைத் தூக்கிப்பிடித்தது.

- jesudoss.c@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in