இறுகிய பிடி...  நொறுங்கிய நம்பிக்கை! | கண் விழித்த சினிமா 05

இறுகிய பிடி...  நொறுங்கிய நம்பிக்கை! | கண் விழித்த சினிமா 05
Updated on
3 min read

தமிழின் முதல் சலன சினிமாவான ‘கீசக வதம்’ படத்தை நடராஜ முதலியார் உரு வாக்குவதற்கு முன்னரே தமிழர்கள் பலர் சில பட முயற்சிகளைச் செய்திருக்கின்றனர். அவை சலன ஆவணப்படங்களாக இருந்தன. அவற்றைச் சலனத் துண்டுப் படங்களுடன் சேர்த்து ‘டூரிங்’ சினிமாக்களில் படங்காட்டிகள் திரையிட்டனர்.

அவை எதைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது வசன அட்டைகள் மூலம் விளக்கப்பட்டிருந்தன. ஆனால், அது பார்வையாளர்களுக்குப் போது மானதாக இல்லை. இதனால், ஆவணத் துண்டுப் படங்களைத் திரையிடும்போது அது பற்றி விவரித்துக் கூற வர்ணனை யாளர்கள் அமர்த்தப்பட்டனர். இந்த வழக்கமே பின்னர், சலனக் கதைப் படங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இப்படித் திரையிடப்பட்ட துண்டு ஆவணப் படங்களில் பல 1918இல் கொண்டுவரப்பட்ட சினிமாட்டோகிராப் சட்டத்தைப் பயன்படுத்தி மதராஸ் காவல் ஆணையரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பறிமுதலையும் தடையையும் மீறி பொதுப் பார்வைக்கு அனுமதிக்கப்பட்ட ஆவணப் படங்களில் பலவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைச் சீண்டாத படங்களே. அவற்றில் குறிப்பிட்ட சில ஆவணத் துண்டுப் படங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.

முதல் உலகப் போரின்போது, 1914, செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை துறைமுகம் நோக்கி நெருங்கி வந்த ஜெர்மானியப் போர்க் கப்பலான எஸ்.எம்.எஸ்.எம்டன், அங்கிருந்த பெட்ரோல் சேமிப்பு கலன்களின் மீது 125 குண்டுகளை வீசியதால் அவை இரண்டு நாள்கள் தீப்பிடித்து எரிந்தன. அதை பிரிட்டிஷ் கடற்படையினர் ஆவணப் படமாக எடுத்தனர். அதேபோல், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் இருவர், தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் 1922இல் நடந்த மலபார் புரட்சி கலவரத்தைப் படமாக்கினர்.

விமானம் பறந்தது! - இந்த இரண்டு முயற்சிகளுக்கும் முன்பாக, டூரிங் சினிமாக்களில் பல ஆவணத் துண்டு படங்கள் புகழ்பெற்று விளங்கின. அவற்றில் தஞ்சாவூரைச் சேர்ந்த மருதமுத்து மூப்பனார் எடுத்த ஆவணப் படங்களும் அடங்கும். 1910இல் சென்னையில் முதன்முதலாக விமானம் பறந்ததை ஆவணப் படமாக்கினார்.

சென்னை தீவுத் திடலில் மக்களின் பார்வைக்காகக் கட்டணம் வசூலித்து விமானம் ஓட்டிக் காட்டினார் ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் என்கிற பிரெஞ்சுக்காரர். இவர் அன்றைய சென்னையின் மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதியில் மேட்டுக்குடி மக்களுக்காக ‘டி-ஏஞ்சலீஸ்’ என்கிற புகழ்பெற்ற உணவகத்தை நடத்தி வந்தவர்.

காற்று புகுந்து செல்ல வசதியாக மேலும் கீழுமாக இரண்டு இறக்கைகள் கொண்ட ‘பைபிளேன்’ (Biplane) வகை விமானம் ஒன்றை, சென்னையில் இருந்த சிம்சன் நிறுவனத்திடம் செய்து வாங்கிய ஏஞ்சலிஸ், பத்திரிகை விளம்பரம் மூலம் மக்களுக்கு விமானம் ஓட்டிக்காட்டுவதாக அறிவித்தார். இந்தியாவில் முதன்முதலாக விமானம் பறந்த அந்த நிகழ்வை ஏஞ்சலிஸிடம் அனுமதி பெற்று அதைப் படமாக்கினார் மருதமுத்து மூப்பனார்.

தஞ்சை பெரிய கோயில் திருவிழா, கல்லணை ஆடிப்பெருக்கு, நாகப்பட்டினம் நாட்டுப் படகு கட்டும் தளம் ஆகியவற்றை அவர் ஆவணப்படுத்தினார். இவரைப் போலவே கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் டேவிட் என்பவர், மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலுடன் அங்குள்ள சிற்பங்களையும் ஆவணப்படமாக எடுத்தார். சென்னையில் நிரந்தரத் திரையரங்குகள் ஏற்பட்டபின் கதைப் படங்களுடன் தமிழ் ஆவணப்படங்களுக்கும் இடம் கிடைத்து வந்த நிலையில் 1918க்குப் பிறகு அவை புறம் தள்ளப்பட்டன. இந்தியாவில் தயாரான பிரிட்டிஷ் ஆவணப்படங்களும் ஐரோப்பிய ஆவணப்படங்களும் கதைப் படங்களுடன் திரையிடப்பட்டன.

வேலூரில் தமிழ் சினிமா: தமிழர்கள் உருவாக்கிய ஆவணப்படங் களும் ஆர்.நடராஜ முதலியாருக்கு ஊக்கம் தந்தன. அவரும் சில ஆவணப்படங்களையே முதலில் தயாரித்தார். ஆனால், அவற்றை வர்த்தக ரீதியாகத் திரையிட முடியாது என உணர்ந்த அவர், வட இந்தியாவில் தயாராகி சென்னை ராஜதானியில் வெளியான சலனக் கதைப் படங்களைப் போல் உருவாக்க நினைத்தே ‘கீசக வத’த்தை உருவாக்கினார். கேமரா நகர்வுகள் பற்றிய அறிவை பெற்றிருந்த நடராஜன், முதல் படத்தின் பெரும்பாலான ‘ஷாட்’களை நிலையாகப் பொருத்தப்பட்ட கையால் சுழற்றும் கேமராவை (ஒரு நொடிக்கு 16 பிரேம்கள்) இயக்கியே படம்பிடித்தார்.

ஒளிப்பதிவின் இலக்கணங்களை நன்கு கற்றிருந்த ஒளிப்பதிவாளர்கள் கல்கத்தாவில் கிடைத்தபோதும் அவர் யாரையும் அமர்த்திக் கொள்ளவில்லை. தந்திரக் காட்சிகள் பலவற்றை அவர் தனது படங்களில் உருவாக்கிய போதும், அவற்றை ‘போட்டோ நாடக’ங்களாகவே படமாக்கினார். 35 ஆயிரம் ரூபாய் தயாரிப்பில் உருவாக்கிய ‘கீசக வதம்’ (1916) கூடுதலாக 15 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தது. இது மிகவும் கௌரவமான லாபமாக இருந்ததால், இரண்டாவதாக ‘திரௌபதி மான சம்ரக்‌ஷணம்’ (1917) படத்தை உருவாக்கினார். தமிழ்ப் பெண்கள் யாரும் சினிமாவில் நடிக்க முன்வராத நிலையில், திரௌபதியாக நாடகங் களில் பெண் வேடமிடும் நடிகர்களையும் நடிக்க வைக்க அவருக்கு மனமில்லை.

இதனால், மரின் ஹில் என்கிற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை நடிக்க வைத்தார். அவருக்கு லியோச்சனா என்கிற பெயரையும் சூட்டினார். அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்க, ரங்கசாமி என்கிற ரயில்வே ஊழியரை அமர்த்தியதுடன் அவரையே துச்சாதனனாகவும் நடிக்க வைத்தார். மரின் ஹில் போலவே வயலெட் பெர்ரி என்கிற பெண்மணி ஒருவரையும் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார்.

இரண்டாவது படத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காமல் போகவே தொழில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. ஸ்டுடியோவை மற்ற ‘பார்ட்னர்’களுக்குக் கொடுத்துவிட்டு, ‘இண்டியன் பிலிம் கம்பெனி’ என்கிற பேனரை மட்டும் எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான வேலுருக்குப் போய் தனியாகப் படமெடுக்கத் தொடங்கினார்.

அங்கே ஸ்டுடியோ வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் ‘மஹிராவணன்’, ‘லவகுசா’ (1918-19) ஆகிய இரண்டு படங்களைத் திறந்தவெளியில், ஊரின் பல இடங்களில் படமாக்கினார். இம்முறை கேமராவை ஒரே இடத்தில் வைத்து படமாக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தினார். குளோஸ் ஆப் காட்சிகளுக்கு நடிகர்களை அருகில் அழைத்து நிறுத்திக்கொண்டார்.

அமெரிக்கப் படங்களின் ஆதிக்கம் வேலூரில் எடுத்து, பெங்களூருவில் உருத்துலக்கிய தனது படங்களின் பிரதிகளுடன் அவர் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அமெரிக்கப் படங்களை இறக்குமதி செய்து விநியோகித்து வந்த முகவர்கள், தங்கள் பிடியில் இருந்த நிரந்தரத் திரையரங்குகளில் அவரது படங்களுக்கு இடமளிக்க மறுத்தனர். ரகுபதி வெங்கையாவின் மூன்று திரையரங்குகளும் கூட அவர்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தன.

கோவை, தஞ்சை, மதுரை, திருநெல்வேலியில் மட்டும் இரண்டு படங்களும் திரையிடப்பட்டன. மனம் தளராத நடராஜன், தனது மற்றோர் உறவினரான டி.பி.நடராஜன் துணையுடன் புரஜெக்டர்களை எடுத்துக்கொண்டு ஒரு படங்காட்டியாகக் களமிறங்கினார். சென்னை ராஜதானியின் மலபார் மாவட்டம், திருவிதாங்கூர் ராஜ்யம், தெலுங்கு பேசும் மாவட்டங்களுக்குப் பயணப்பட்டு டூரிங் சினிமா வழியே தனது படங்களைத் திரையிட்டார்.

மொத்த லாபமும் கைக்கு வந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் தனது புதிய ஸ்டுடியோவை அமைத்தார். அங்கே ‘காளிங்க மர்த்தனம்’ (1920), ‘ருக்மணி கல்யாணம்’ (1921), ‘மார்க்கண்டேயா’ (1923) ஆகிய படங்களை எடுத்தார். முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் அமெரிக்கப் படங்களும் வட இந்தியப் படங்களும் சென்னை ராஜதானியில் குவிந்தன. ‘இண்டியா பிலிம் கம்பெனி’ என்கிற பெயர் ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தியது.

அமெரிக்க, இங்கிலாந்து படங் களுக்கு சுதேசிப் போட்டியாளராக நடராஜனைப் பார்த்தார்கள். அதே நேரம், நடராஜனின் ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீவிபத்து ‘செட் பிராப்பர்டி’களை நாசம் செய்தது. அவரின் மூத்த மகன் விபத்தொன்றில் மரண மடைந்தார். இவற்றால் மனமுடைந்த நடராஜன், படத் தொழிலிலிருந்து விலகி, மீண்டும் மிதி வண்டி, கார் உதிரிப் பாகங்கள் விற்பனை எனப் புறப்பட்ட இடத்துக்கே வந்து நின்றார்.

இதற்கிடையில் 1920இல் வெளியான ‘ராஜசேகரா’ உள்ளிட்ட சில தமிழ் சலனப் படங்களைச் சென்னை தணிக்கைக் குழு தடை செய்து தனது பிடியை இறுக்கியது. இதனால் படத் தயாரிப்பில் இறங்கிய பல தமிழர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்க்க விரும்பாமல் அதிலிருந்து வெளியேறினார்கள்.

இன்னொரு பக்கம், சலன சினிமாவுக்குக் கிடைத்த வசூலைவிடப் பல மடங்கு அதிகமாக நாடகங்களுக்கு வசூலானது. ஏனென்றால் இருபதுகளின் காலக்கட்டம் என்பது தமிழ் நாடகக் கலையின் பொற்காலமாக விளங்கியது. அது தமிழ் சினிமாவுக்கு எவ்வாறு அடித்தளமானது என்பதை அடுத்துக் காண்போம்.

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in