ஓர் அபூர்வக் காட்சி! | திரைவிழா
தொண்ணூறுகளில் பல திறமையான புதுமுக இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அவருக்குப் பிறகு அந்த ராஜபாட்டையைத் தன்னுடைய திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் மூலம் தொடர்ந்து வருபவர் சி.வி.குமார்.
இவரது தயாரிப்பில்தான் கார்த்திக் சுப்பராஜ், பா.ரஞ்சித், நலன் குமாரசாமி எனப் பல சூப்பர் ஹிட் இயக்குநர்கள் அறிமுகமானார்கள். சந்தோஷ் நாராயணனை ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதும் அவர்தான். ஒரு தயாரிப்பாளராக அவருக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்று ‘சூது கவ்வும்’. விஜய்சேதுபதியை ஒரு நட்சத்திரமாக உயர்த்திய அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் சி.வி.குமார் அறிமுகப் படுத்திய இவர்கள் அனைவரும் படையாக வந்து கலந்துகொண்டார்கள். ஒரே ஒரு படம் இணைந்து செய்தபிறகு தயாரிப்பாளரும் இயக்குநரும் சந்தித்துக்கொள்வதையே தவிர்க்கும் தமிழ் சினிமாவில் இதுவோர் அரிய, அபூர்வக் காட்சி எனலாம்.
‘சூது கவ்வும் 2’ படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தை சி.வி.குமார் - எஸ். தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கதைக்கரு நலன் குமாரசாமியுடையது என்றாலும் திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கிறார் எஸ்.ஜே. அர்ஜுன். ‘கலகலப்பு', ‘சென்னை 28’, ‘தமிழ் படம்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்து அவையும் ஹிட்டடித்த நிலையில் ‘சூது கவ்வும் 2’ படத்தின் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.
அவருடன் ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் - ஹரி எஸ். ஆர். இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். மூன்று பாகங்களாக உருவாக்கும் எண்ணத்துடன் நலன் குமாரசாமி இக்கதையை எழுதியதால் இதன் மூன்றாம் பாகத்தையும் தயாரிப்போம் என்று கூறியிருக்கிறார் சி.வி.குமார்.
நிகழ்ச்சியில் ‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் முதல் பாகத்தைச் சிருஷ்டித்த இயக்குநர் நலன் குமாரசாமி பேசும்போது: “சூது கவ்வும் படத்தை உருவாக்கும் போதே மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அதனை 47 நாள்களில் உருவாக்கினோம். அதன் பிறகு நீண்ட தூரம் பயணித்துவிட்டேன்.
அது ஒரு மேஜிக்போல் நடந்தது. சி.வி.குமார் சார் திரைக்கதையைப் படித்து அதனை நன்றாக ‘ஜட்ஜ்’ செய்யக்கூடிய திறமை பெற்றவர். அவர் திரைக்கதையை மட்டுமல்ல; இயக்குநரையும் ‘ஜட்ஜ்’ செய்யக்கூடியவர். திறமையான இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதில் அவருடைய கணிப்பும் இருக்கிறது. ‘சூது கவ்வும் 2’ படத்துக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்றார்.
