

‘நாயகன்’ படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கூட்டணியின் மகத்தான இணை என ரசிகர்கள் கொண்டாடும் மணி ரத்னம் - கமல் இருவரும் இணைந்திருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. கொண்டாட்டத்துக்கு மூன்றாவதாக ஒரு முக்கிய காரணமும் உண்டு.
அவர், சிலம்பரசன் டி.ஆர். கமலுடன் முதல் முறையாகவும் மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாகவும் நடித்தி ருக்கும் எஸ்.டி.ஆர்., ‘தக் லைஃப்’ படத்தில் கமலுக்கு ஈடுகொடுக்கும் முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றில், முற்றிலும் புதிய தோற்றத்தில் நடித்திருப்பதைப் பற்றி அவருடைய ரசிகர்கள் தீவிரமாகப் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரம், தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்கிற பாராட்டையும் பெற்று, இன்று, ‘நல்ல கதை, அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்பதில் உறுதியாக இருக்கும் அவரது திரையுலகப் பயணத்தின் 40 ஆண்டுகள் நிறைவுக்கும் இணையவாசிகள் அவரை வாழ்த்து மழையில் நனைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சிலம்பரசனின் சினிமா பயணத்தில் சிறார் நட்சத்திரம், காதல் கதைகளில் ஒளிர்ந்த இளம் நாயகன், ஆக்ஷன் கதைகளின் அதிரடி நாயகன், அதையெல்லாம் கடந்து, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற ‘கிளாசிக்’ காதல் தோல்வி கதையில் ஏற்ற கார்த்திக் போன்ற ஜென்டில் இளைஞன் பிரதிபிம்பக் கதாபாத்திரங்கள், புதுயுக அறிவியல் புனைவாக வெளிவந்த ‘மாநாடு’ படத்தில் ‘டைம் லூப்’பில் சிக்கி மீளும் புத்திசாலி நாயகன், அதற்கும் பின்னர், சாமானியனாக இருந்து தாதாவாக உருவெடுக்கும் கதாபாத்திரங்கள் என மாஸ் காட்டி வரும் திரைப் பயணத்தில் எஸ்.டி.ஆரை வெறும் நடிகராக மட்டும் சுருக்கிவிட முடியாது.
தன்னை ஒரு சிறந்த பாடகராகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். மாஸ் கதாநாயகர்களுக்காகப் பாடுவது, துள்ளலான பாடல்களைப் பாடிக்கொடுப்பது என்று ஆண்டுக்கு 5 பாடல்களை யாவது மற்றவர்களுக்காகப் பாடிக் கொடுக்கிறார். பாடும் அதேநேரம், இசையமைப்பாளரும் இயக்குநரும் கேட்டுக்கொண்டால் பாடல் எழுதுவதிலும் தன் திறமையைக் காட்டியிருக்கிறார். ஒரு முழு திரைப் படத்தையும் உருவாக்குவதில், கதை, திரைக்கதை, இசை, இயக்கம் எனத் தன்னுடைய அப்பா டி.ஆருக்குச் சற்றும் சளைக்காத பன்முகம் கொண்ட கலைஞனாகத் தன்னை அடையாளப்படுத்திக் காட்டியதில் முழு வெற்றி பெற்றவர்.
தனது 40 ஆண்டு திரைப் பயணத்தில் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த சிலம்பரசன், ரசிகர்களின் அன்பைச் சம்பாதிப்பதில் இன்று வரை ஏறுமுகமாகவே இருக்கிறார். ‘பான் இந்திய நட்சத்திர’ மாகவும் உயர்ந்து நிற்கும் அவரை ‘ஆத்மன்’ என அவருடைய ரசிகர்கள் தற்போது அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கும் அவருக்குமான பிணைப்பைக் காட்டுகிறது.