

இந்திய ராணுவத்தில் விருப்பமுடன் இணைந்து, படிப்படியாக உயர்ந்து மேஜர் ஆனவர் முகுந்த் வரதராஜன். 2014, ஏப்ரலில் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பைத் தீவிரவாதிகள் கைப்பற்றி அங்கு வசித்து வந்த பொதுமக்களைப் பணயக் கைதிகள் ஆக்கினர்.
அவர்களை மீட்கச் சென்ற ஆபரேசனுக்கு தலைமைதாங்கி வெற்றிபெற்ற முகுந்த், அத்துயர நிகழ்வில் வீரமரணம் அடைந்தார். தேசத்தின் உயரிய விருதான அசோக் சக்ராவை, அவருக்காக அவருடைய மனைவி குடியரசு தின அணிவகுப்பில் பெற்றுக்கொண்டார். வீரம் செறிந்த முகுந்த்தின் வாழ்க்கைக் கதைதான் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இப்படத்துக்காக ராணுவ முகாமில், உண்மையான ஏகே 47 ரக இயந்திரத் துப்பாக்கியில் பயிற்சி பெற்று, முதன் முதலாக பயோபிக் கதாபாத்திரம் ஏற்றுள்ள சிவகார்த்திகேயன், இந்து தமிழ் திசைக்காக அளித்த பேட்டியின் சுருக்கமான வடிவம் இது.
ஒரு ராணுவ அதிகாரியின் கதாபாத்தி ரத்தை ஏற்று நடிக்க, நிஜ வாழ்க்கையில் ஒரு காவல் அதிகாரியின் மகனாக இருந்தது எந்த வகையில் உதவியது? - குணத்தின் அடிப்படையில் அப்பாவுக்கும் முகுந்துக்குமே நிறைய ஒத்துப்போகிறது. அது ஆபீசர்களுக்கென்றே இருக்கும் ஒரு ‘குவாலிட்டி’ என்று நினைக்கிறேன். 1500 கைதிகளைப் பாதுகாக்கும் சிறைக் கண்காணிப்பாளராக அப்பா இருந்தார். சிறு வயதில் அவரது அலுவலகத்துக்குப் போய், அவர் அமைதியான ஒருவராக இருந்ததையும் பார்த்திருக்கிறேன்.
மிகவும் கடினமான சூழ்நிலைகளை அவர் கையாண்ட தருணங்களையும் கவனித்து ஆச்சரியப்பட்டி ருக்கிறேன். கடந்த 21 வருடங்களாக அப்பாவின் நினைவுகளோடு மட்டும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அவரது பணி ஆளுமைதான் நான் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தை அணுகி நடிக்க உதவியது.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய போது பாதுகாப்பு இருந்ததா? தமிழ்நாட்டு வீரர்களைச் சந்திக்க முடிந்ததா? முக்கியமாகக் காஷ்மீர் பொதுமக்களைச் சந்தித்தீர்களா? - ‘ராஷ்ட்ரிய ரைபிள்’ என்கிற படை முகாமில் படப்பிடிப்பு நடந்தது. அதில் பணிபுரியும் வீரர்கள்தான் படத்திலும் நடித்துக்கொடுத்தார்கள். எங்களுக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருந்தார்கள். நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பு நடக்கும் படை முகாமுக்கு ‘புல்வாமா’ தாக்குதல் நடந்த அதே சாலையில் சுமார் 45 நாள்கள் போய், வந்துகொண்டிருந்தோம். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஆபரேசனுக்காகக் கிளம்பிச் செல்வார்கள். அப்போது நாங்கள் பதற்றமாவோம்.
தேனி, விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி என்று பல ஊர்களைச் சேர்ந்தவர்களையும் அங்கே ராணுவ வீரர்களாகச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் படப்பிடிப்பு நடத்தியது கோடைக் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. காஷ்மீர் மக்கள் தனியழகு மிக்கவர்கள்.
அவர்களின் முகத்தில் அன்பான புன்னகையும் ‘'இன்னொசென்'ஸும் இருக்கும். அவர்கள் பேசும் மொழி புரியாவிட்டாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சகோதரப் பிணைப்பு கொண்டவர்களாக நம்மோடு கலந்து விடுகிறார்கள். படப்பிடிப்புக்கு அவ்வளவு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். இல்லை யென்றால் அங்கே நாங்கள் 90 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்க முடியாது.
‘அமரன்’ படம் ராணுவ அதிகாரிகளுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதே? - ஆமாம்! படப்பிடிப்பில் இருந்தபோதுகூட எனக்குப் பதற்றம் இல்லை. ஆனால், ராணுவ அதிகாரிகள் படம் பார்க்கிறார்கள் என்றதும் ‘அவர்கள் என்ன சொல்வார்களோ? என்கிற பதற்றம் வந்துவிட்டது. இடைவேளை வரை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு மூத்த ராணுவ அதிகாரி என்னிடம் வந்து, ‘யூ ஆர் இன் ராங் ஃபுரொபெஷன்’ என்றார். இரண்டாம் பாதி படத்தைப் பார்த்துவிட்டு வந்த அவர், ‘மீண்டும் ஒரு ஆஃபர் தருகிறேன்; என்ன சொல்றீங்க?’ என்றார். “இதுதான் சார் நீங்க எனக்குத் தர்ற விருது” என்று அவருக்கு நன்றி சொன்னேன்.
நானும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவன். முகுந்தும் மிடில் கிளாஸிலிருந்து போய் மேஜராக உயர்ந்தவர். அதனால் எளிதாக அவரை என்னால் உள்வாங்க முடிந்தது. ‘எந்த இடத்திலும் சினிமா என்று நினைத்து நான் நடிக்கவில்லை’ என்று இயக்குநர் பாராட்டினார். அதைப் படம் பார்த்த ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தார்கள். என் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக ‘அமரன்’ என்னைக் கௌரவமாகவும் கம்பீரமாகவும் உணர வைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணையை ரசிகர்கள் இப்போதே கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியிருந்தது அவரது பங்களிப்பு? - ஒரு கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பது என்கிற உறுதியான முடிவுடன் இருப்பவர் சாய் பல்லவி. அதனால்தான் அவருக்கு ‘கல்ட்’ ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர் கேரக்டரை மட்டுமல்ல; ஒவ்வொரு ஷாட் டையும் அணுகும்விதம் அவ்வளவு ஆழமாக இருக்கும். அப்படிப்பட்டவருடன் நடித்தது உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது? - சில காட்சிகளும் கிளைமாக்ஸ் மட்டும் பாக்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் இணைந்து நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- jesudoss.c@hindutamil.co.in