

முதல் தமிழ் சினிமா பிறக்கும் முன்னரே திரையரங்குகள் முந்திரிக் கொட்டைகள் போல் முளைத்து விட்டன. அதற்குக் காரணம், பிரிட்டிஷ் ஆட்சியில் ஐரோப்பியச் சலனப் படங்கள் தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டதே.
முதலில் ஒலியின்றியும் 1909ஆம் ஆண்டு தொடங்கி ‘குரோனோ மெகாஃபோன்’ என்கிற சாதனத்தின் உதவியால் ஒலியுடனும் இவை திரையிடப்பட்டன. சென்னை நகரில் மட்டுமே திரையிடல் கண்டுவந்த சலனப் படங்களை, சென்னைக்கு வெளியே கொண்டு சென்று சாமானிய மக்களிடம் சினிமா என்கிற சாதனத்துக்குப் பெரும் அறிமுகத்தைப் பெற்றுக்கொடுத்தார் சாமிக்கண்ணு வின்செண்ட். அதுமட்டு மல்ல; ‘பதே’ நிறுவனத்தின் சேவல் சின்னம் பொறித்த திரையிடல் கருவியை (PathÉ KOK projector) விநியோகம் செய்வதற்கான முகவராக உரிமம் பெற்று, நிரந்தரத் திரையரங்குகள் அடுத்தடுத்து உருவாகக் காரணமாக அமைந்துபோனார்.
குறிப்பாக, சென்னையில் மவுண்ட் சாலை, வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை களின் சந்திப்பு, ரவுண்டானா பகுதியாக இருந்தது. அன்றைக்கு நரசிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட அப்பகுதியில் 1913இல் ‘கெயிட்டி’ நிரந்தரத் திரையரங்கைக் கட்டிய ரகுபதி வெங்கையாவுக்கு பதே புரஜெக்டர்களை விநியோகம் செய்தவர் சாமிக்கண்ணு வின்செண்ட். இதை உறுதி செய்திருக்கிறார், அவருடைய மகன் செல்வராஜ் எஸ்.வின்செண்ட்.
சென்னை ராஜதானிக்கு மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் அமைந்த திரையரங்குகளுக்கும் திரையிடல் கருவியை விற்றதுடன், வீட்டிலேயே திரையிட ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட பதே நிறுவனத்தின் ‘பேபி புரஜெக்டர்’களை செல்வந்தர்களுக்கும் ஆங்கிலேயக் கோமான்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார் வின்செண்ட்.
முகவர் ஆனதன் பின்னணி: மொழிப் பிரச்சினை இல்லாத ஐரோப் பியச் சலன சினிமாவின் தன்மை, பிரிட்டிஷ் இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று அவர் படம் காட்ட முக்கியக் காரணமாக அமைந்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாம்பே, பெஷாவார், லாகூர், லக்னோ ஆகிய நகரங்களுக்குச் சென்றும் ‘பின்னர், இரங்கூன், மலாயா (அப்போது சிங்கப்பூரை உள்ளடக்கியிருந்தது) நாடுகளுக்குச் சென்றும் திரையிட்டார்.
சென்ற இடங்களில், எளிய மக்களுடன் மேட்டுக்குடி வர்க்கமும் தயக்கமின்றிப் படம் பார்க்க வந்ததைக் கவனித்தார். சினிமா என்கிற காட்சி ஊடகத்தின் ஈர்ப்பு சக்தி, மக்களின் மனங்களில் மண்டிக் கிடந்த வேற்றுமைகளை அகற்றுவதைக் கண்டு அதன் எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதை உணர்ந்தார். அதுவே அவரை ஒரு நிரந்தரத் திரையரங்கை உருவாக்கும் முடிவைத் துணிந்து எடுக்க வைத்தது. அதற்கான பணத்தை அவருக்குக் கொட்டிக் கொடுத்தது சென்னைதான்.
சென்னை எஸ்பிளனேட்டில், புதிதாக வந்திருந்த மின்சாரக் கார்பன் குச்சிகள் உதவியுடன் 75 நாட்கள் தொடர்ந்து திரையிட்டார். இச்சமயத்தில் கார்பன் குச்சி எரிந்து உருவாக்கும் வெப்பத்தில் திரையிடல் கருவி 8 நிமிடங்களுக்குப் பின் இயங்க மறுத்தது. ஒரு படச்சுருள் சக்கரம் ஓடி முடியும் 8 நிமிடங்களுக்குப் பின்னர், திரையிடல் கருவியின் வெப்பம் தணிந்த பிறகே, இரண்டாவது படச்சுருள் சக்கரத்தைப் பொருத்தி இயக்க முடிந்தது. இந்த இடைவெளியில் பார்வையாளர்கள் பொறுமையிழந்தனர்.
அவர்களை ஆசுவாசப்படுத்த டெண்டு சினிமாவுக்குள் சோடா, பானங்கள், தின் பண்டங்களை விற்கத் தொடங்கினார் (திரையிடல் தொழிலுக்கான வணிக ‘இடைவேளை’ இப்படிக்கூடப் பிறந்திருக் கலாம்). கார்பன் குச்சிகள் உருவாக்கிய வெப்பத்தால் உருவான இப்பிரச்சினை, இரண்டாவது திரையிடல் கருவியின் தேவையை வின்செண்ட்டுக்கு உணர்த்தியது. கோவைக்குத் திரும்பும் முன் இரண்டாவது திரையிடல் கருவியை இறக்குமதி செய்துகொண்டார்.
ஒரு திரையிடல் கருவியில் படச்சுருள் சக்கரம் ஓடி முடிந்தபின், இரண்டாவது திரையிடல் கருவியை சட்டென முடுக்கியதும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் அதன் தொடர்ச்சி அடுத்த நொடியே திரையில் விரிந்து ‘திரை அனுபவம்’ தடங்கல் இன்றி கிடைத்தது. இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்ததைக் கண்டு வின்செண்ட் பெருமிதம் அடைந்தார்.
கோவை நகரின் நவீன வரலாறு: சென்னைத் திரையிடலுக்குப் பின்னர், ஒரு நாடோடிக் காட்சியாளராகத் தனது 6 ஆண்டுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அவர், கோவைக்குத் திரும்பினார். அங்கே 1913இல் கோட்டைமேடு பகுதியில் தனது முதல் நிரந்தரத் திரையரங்கைக் கட்டத் தொடங்கினார். மற்றொரு பக்கம், பதே புரஜெக்டர்களின் முகவராக அவற்றை விற்பனை செய்துவந்த அவர், அதே நிறுவனம் தயாரித்த துண்டுப் படங்களையும் இறக்குமதி செய்து திரையரங்குகளுக்கு விநியோகம் செய்த முதல் தமிழராகவும் விளங்கினார்.
கருப்பு - வெள்ளைச் சலனப் படங்களை மட்டுமல்ல, பதே உருவாக்கிய ‘பதே கலர்’ வகைச் சலனப் படங்களையும் இறக்குமதி செய்து விநியோகித்தார். 1914இல் ‘வெரைட்டி ஹால்’ திரையரங்கைத் திறந்தபோது வின்செண்ட் 29 வயதே ஆகியிருந்த இளைஞர். கோவை நகரின் 20ஆம் நூற்றாண்டு வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ் சினிமா வரலாற்றிலும் சாமிக்கண்ணு வின்செண்ட்டை பிதாமகராக இடம்பெறச் செய்துவிட்டது ‘வெரைட்டி ஹால்’ திரையரங்கம்.
அவர் தனது கனவுத் திரையரங்கைத் திறந்தபோது, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலிருந்து முழுநீளக் கதை களைக் கொண்ட 20 முதல் 40 நிமிடக் கதைப் படங்கள் இறக்குமதி ஆகத் தொடங்கியிருந்தன. ‘டிராமா பிலிம்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இப்படங்களைப் போலவே, இந்தியக் குடிமகன் ஒருவரால் கதைப்படம் தயாரிக்க முடியும் என்று காட்ட ஒருவர் இருந்தார். ஒரு சுதேசப் பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘ராஜா ஹரிச்சந்திரா’ (1913), ‘சத்யவான் சாவித்திரி’ (1914), ‘லங்கா தஹன்’ (1917), ‘கிருஷ்ண ஜன்மா (1918), ‘கலிய மர்தன்’ (1919) ஆகியப் படங்களை இயக்கித் தயாரித்த தாதா சாகேப் பால்கே.
இவர் 1912இல் தொடங்கிய பால்கே பிலிம் கம்பெனி, ஐரோப்பிய சினிமா இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேய வியாபாரிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. விளை வாக, இந்தியத் தயாரிப்புகளை மிரட்டும் விதமாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் 1918இல் ‘இந்தியன் சினிமட்டோகிராஃப் ஆக்ட்’ சட்டத்தைக் கொண்டுவந்து, மத்திய, மாநில தணிக்கைக் குழுக்களை உடனடியாக உருவாக்கியது பிரிட்டிஷ் அரசு. திரையிடல் தொழிலிலும் பலவழிகளில் தலையிட்டது.
ஒளியும் ஒலியும் கொண்டுவந்தார்! - இந்தக் கட்டுப்பாடான சூழ்நிலை உருவாவதற்கு சற்று முன்னரே, தன்னை வலிமையாக நிலை நிறுத்திக்கொண்டார் வின்செண்ட். 1916இல் வெரைட்டி ஹால் திரையரங்கின் அருகிலேயே முதல் மின்சார அச்சுக்கூடத்தை நிறுவினார். திரையரங்கில் வெளியாகும் திரைப் படங்கள் குறித்த துண்டறிக்கைகளை அச்சிட்டு மக்களுக்கு கொடுத்தார். திரையரங்கில் மின்சார புரஜெக்டரை இயக்கவும், அச்சகத்துக்கும் தேவையான மின்சாரத் துக்காகவும் 30 அடி உயரத்தில் தண்ணீர்த் தொட்டியைக் கட்டி ‘ஹைட்ரோ பவர்’ முறையில் மின் உற்பத்தி செய்தார்.
அப்போது சென்னை ராஜதானியின் உள்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர், வின்செண்ட்டின் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ‘பவர் ஹவுஸ்’ அமைத்து மின்சாரம் தயாரிக்க முறைப்படியான அரசின் அனுமதியை வழங்கினார். அரசின் ஆதரவைப் பயன்படுத்திக்கொண்ட வின்செண்ட், முதல் தனியார் மின் உற்பத்தியாளராக உருவெடுத்தார். தனது பவர் ஹவுஸிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் ஒரு பகுதியைத் தனது திரையரங்கு, அச்சகம், சோடா உள்ளிட்ட குளிர்பானத் தயாரிப்புக் கூடம், அரிசி, மாவு அரைக்கும் ஆலை ஆகியவற்றில் பயன்படுத்திக்கொண்டார்.
தனது வெரைட்டி ஹால் திரையரங்குச் சாலையில் சவுக்கு மரங்களை நட்டு, அவற்றில் மின்சாரத் தெருவிளக்குகளைப் பொருத்தினார். இதைக் கண்டு பாராட்டிய கோவை முனிசிபல் கவுன்சில், 10 மணிநேர உற்பத்தியில் கிடைத்த எஞ்சிய மின்சாரம் அனைத்தையும் வாங்கிக்கொண்டதுடன் வின்செண்டின் பவர் ஹவுஸை ஓட்டியிருந்த மேலும் சில தெருக்கள், புனித பிரான்சிஸ் பள்ளி, இங்கிலீஷ் கிளப், இம்பீரியல் பேங்க் ஆஃப் இண்டியா வளாகம் உள்ளிட்ட அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் மின்சார இணைப்புக் கொடுத்தது.
அந்த வகையில் கோவைக்கு ஒளியூட்டிய சாமிக்கண்ணு வின்செண்ட், தமிழில் பேசும் சினிமா தொடங்கும் முன்பே, தனது வெரைட்டி ஹால் திரையரங்கில் ஒலியமைப்பு சாதனங்களை 1928இல் பொருத்தி, நவீனத் திரை அனுபவத்துக்குப் பார்வையாளர்களைத் தயார் செய்தார். அதனடிப்படையில் சினிமா திரையிடலின் தலைநகராக அவர் கோவையை மாற்றி, சென்னையைப் பின்னுக்குத் தள்ளினார் எனலாம்.
ஒலியமைப்பு சாதனங்களை அவர் இறக்குமதி செய்து பொருத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை அவருக்கு உருவாக்கிய படம், 1927ல் வெளியான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer (1927). பிரான்சிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் இந்தியாவிலும் சலனப்பட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அந்தப் படத்தின் வெற்றியை அறிந்த விண்செண்ட், அதை, வெரைட்டி ஹாலில் திரையிடும் முன், சவுண்ட் நெகட்டிவ் புரெஜெக்டரையும் ஒலியமைப்பு சாதனங்களை இறக்குமதி செய்து பொருத்தி, அப்படத்தைத் திரையிட்டார்.
உலகின் முதல் பேசும் படத்தை சென்னை ராஜதானியில் முதலில் கண்டது கோவை மக்கள் என்பது தமிழ் சினிமா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. கோவையில் சினிமா ஸ்டுடியோக்கள் பின்னால் தோன்றி, தமிழ் சினிமாவின் முதல் கோடம்பாக்கமாக உருவெடுக்க திரை யிடல் தொழிலை தரம் குறையாமல் வின்செண்ட் வளர்த்தது முக்கியமான காரணம்.
மறக்கப்பட்டது ஏன்? - இதன்பின்னர், கோவையில் 1927இல் எடிசன், 1939இல் பேலஸ் ஆகிய இரண்டு திரையரங்குகளை விலைக்கு வாங்கினார். இப்படி அவர் கோவையில் மட்டுமே 12 திரையரங்குகளை வாங்கி நடத்தினார். கோவைக்கு வெளியே, நீலகிரி, மதுக்கரை, ஈரோடு, அரக்கோணம், சென்னையின் மீனம்பாக்கம், கேரளத்தின் மலபார், மஞ்சேரி, எர்ணாகுளம் ஆகிய இடங் களிலும் திரையரங்குகளைக் கட்டி நடத்தினார்.
சலனப் படங்களைத் தயாரிக்காத சாமிக்கண்ணு வின்செண்ட், கல்கத்தா வின் பயோனியர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்த பேசும்படங்களில் ‘வள்ளித் திருமணம்’ (1933) தமிழ் சினிமாவின் முதல் ‘பிளாக்பஸ்டர்’ வெற்றிப் படமாக அமைந்து வசூலைக் குவித்தது. இதன்பின்னர், 1937இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோ தொடங்கப்பட்டபோது அதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்து ஸ்டுடியோவை உருவாக்கினார். பின்னர் ஸ்டுடியோ செயல்படத் தொடங்கியதும் அதிலிருந்து விலகினார்.
ஆழமாக அவர் பதித்துச் சென்றிருக்கும் சுவடுகளில் முதன்மையானதும், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்ததும் என்றால், அது ‘வெரைட்டி ஹால்’ திரையரங்கம். அது தன்னுடைய 100 வயதைக் கொண்டாடும் முன்பே, கடந்த பிப்ரவரியில் இடிக்கப் பட்டது. 1944இல் அவருக்கு அந்தத் திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்ட சிலை எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
முதல் மலையாள சினிமாவை உரு வாக்கிய ஜே.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்து அவரை பெருமைப்படுத்தியிருக்கிறது கேரளம். சென்னையில் ‘கெயிட்டி’ திரையரங்கை உருவாக்கிய ரகுபதி வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறது ஆந்திரா. ஆனால், சாமிக்கண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கத் தமிழ் நாட்டுக்கு இன்னும் மனம் வரவில்லை.
அவரைக் குறித்து சிறிய பேசும் ஆவணப்படம் ஒன்றை, தஞ்சையைச் சேர்ந்த செந்தமிழன் ‘பேசாமொழி’ என்கிற தலைப்பில் உருவாக்கியிருக்கிறார். திரை ஆர்வலர்கள் அவரது பிறந்த தினத்தை, ‘திரையரங்கு தினமாக’ கடந்த சில ஆண்டுகளாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். ஆனால், அரசுகள் என்ன செய்தன? அல்லது என்ன செய்திருக்க வேண்டும்?
(விழிகள் விரியும்)
- jesudoss.c@hindutamil.co.in