

சென்னை, அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தலைமை அஞ்சலக அலுவலக வளாகத்தில், பழைமையான தோற்றம் மாறாமல் இன்னமும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது ‘எலெக்ட்ரிக் தியேட்டர்’. அது சென்னையின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் ஒன்று என்பதறிந்து, அதைப் பாதுகாக்கும் முன்முயற்சியை எடுத்தவர்களில், தமிழ் சினிமாவின் வரலாற்றை அக்கறையுடன் ஆய்வு செய்து பதிந்த தியடோர் பாஸ்கரன், ராண்டார் கை ஆகிய இரண்டு முன்னத்தி ஏர்களுக்கும் கணிசமான பங்குண்டு.
இருபதாம் நூற்றாண்டின் வைகறையில் இயங்கத் தொடங்கிய அத்திரையரங்கு, ஆங்கிலேய அதிகாரிகள், மதராஸின் செல்வந்தர்கள் ஒன்று கூடிச் சலனக் குறும்படங்களைக் காணும் இடமாகவும் மது அருந்தி, நடனமாடிக் களிக்கும் கேளிக்கை விடுதியாகவும் இருந்தது. ஏனென்றால் மேட்டுக்குடி வர்க்கத்தினர் காணும் அரிய சாதனமாகச் சலன சினிமாவைப் பார்த்தார் வார்விக் மேஜர்.
அவர், ஏற்கெனவே அங்கிருந்த கட்டிடத்தைக் குத்தகைக்கு எடுத்து, அதை, ‘பால் ரூம்’ மற்றும் ‘பார்’ உடன் கூடிய எலெக்ட்ரிக் தியேட்டராக மாற்றி யமைத்தவர். ஆனால், இந்த மேட்டிமைத்தனத்திலிருந்து சலன சினிமாவை விடுதலை செய்தார் ஒரு ரயில்வே தொழிலாளி. அவர்தான் கோவையின் கோட்டைமேட்டில் பிறந்து, வளர்ந்து, திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாக வேலைபார்த்து வந்த சாமிக்கண்ணு வின்செண்ட்!
சந்தைக்கு நடுவே விந்தை: தென்னிந்தியச் சாமானியர்கள் மத்தியில் மட்டுமல்ல; தெற்காசியாவில் பல நகரங்களுக்குப் பயணித்து எளிய மக்களிடம் சலன சினிமாவைக் கொண்டு சென்றார். அவர் தனது ‘டெண்ட் சினிமா’வை, மக்கள் பொருட்களை வாங்கவும் விற்கவும் கூடும் சந்தைப் பகுதிகளில் அமைத்துப் படம் காட்டினார்.
பிரெஞ்சு நிறுவனமான ‘பதே’ (Path Frres) தயாரித்த ஒரு படம் காட்டும் கருவி, அதைப் பொருத்துவதற்கு வசதியாக 4 அடி உயரத்தில் ஒரு மேஜை, பருத்தித் துணியினால் தைக்கப்பட்ட வெண்திரை, துணைக் கருவிகளுடன் கூடிய படச்சுருள் தட்டுக்கள் அடங்கிய பெட்டி, திரையில் ஒளியெறிதல் செய்யப் புதிதாக அறிமுகமாகி யிருந்த கார்பன் குச்சிகள், கூடாரம் அமைப்பதற்கான
துணிகள், மூங்கில் கழிகள் இவற்றுடன் திரையில் விழும் ஒளியில் உருத்துலங்கும் வெள்ளை நிற மனிதர்களின் நடவடிக்கைகள், அவர்கள் செய்யும் செயல்கள், அதிலிருக்கும் ஐரோப்பியத் தன்மை கொண்ட கதைகளை ஓலிப் பெருக்கியில் விவரிக்க ஒருவர், ஒரு துண்டுப்படம் ஓடி முடிந்ததும் பிலிம் சக்கரத்தில் படச்சுருளாகச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் மற்றொன்றைப் பொருத்தப் பயிற்சி பெற்ற இரண்டு உதவியாளர்கள் ஆகியோருடன் அவரது நாடோடிக் கலைப் பயணம் தொடங்கியது 1905இல்.
முதல் மூன்று ஆண்டுகள் சாமிக் கண்ணுவுக்கு பெரும் சவாலாக அமைந்தன. 3 முதல் 7 நிமிடங்களே கொண்ட 5 துண்டுச் சலனப் படங்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் பல பெரிய நகரங்கள், சிற்றூர்கள் எனக் கூடாரம் அமைத்துப் படம் காட்டியபோது, ‘போட்டோ பிளே (Photo play - அப்போது சலன சினிமாவை அந்தப் பெயரில்தான் பிரபலப்படுத்தினார் சாமிக்கண்ணு) பார்த்தால் கண்கள் குருடாகிவிடும்’ என்று சாமானிய மக்களில் பலரும் பயந்து விலகினார்கள்.
ஆனால், ‘ரிஸ்க்’ எடுத்துவிடலாம் என்று நினைத்தவர்கள் காலணா, அரையணா கொடுத்தும், பலர் ஒரு படி நெல், அரைப்படி அரிசி, இரண்டு ஆழாக்கு தானியங்கள், பயறு வகைகள் எனக் கொடுத்து சினிமா எனும் அற்புதத்தைக் கண்டு வியந்தனர். தனது சொந்த ஊரான கோவையில் வெள்ளிக்கிழமை அன்று கூடும் சந்தையின் நடுவே கூடாரம் அமைத்தார் வின்செண்ட். கூட்டம் அள்ளியது. அதுமுதல் எந்த ஊரில் முகாமிட்டிருந்தாலும் வெள்ளிக் கிழமை சந்தையில் படம் காட்டச் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.
வாழ்க்கையை மாற்றிய படம்: மூன்று ஆண்டு களின் முடிவில் கைவசமிருந்த துண்டுப் படங்கள் எல்லாம் தேய்ந்து கோடு விழுந்தன. போகுமிடமெல்லாம் ‘புதுப்படம் இருக்கா?’ என மக்கள் கேட்கத் தொடங்கினர். கூட்டமும் குறைந்தது! விழித்துக்கொண்ட விண்செண்ட், புதிய திரையிடல் கருவியைத் தருவித்துக்கொண்டதுடன் ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ (La Vie du Christ) என்கிற 33 நிமிடச் சலனத் திரைப்படத்தை 1908இல் தருவித்தார். அதில் 25 காட்சிகள் இருந்தன.1906இல் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வெளியான அந்தப் படம்தான், தொழிலாளியாக இருந்த அவரை ஒரு முதலாளியாக மாற்றியது. இந்தப் படத்தை இயக்கியவர் ஆலீஸ் கி (Alice Guy-Blach) என்கிற பெண் இயக்குநர்.
தமிழின் முதல் சலனப் படமான ‘கீசகவத’த்திலும் (1917) முதல் பேசும் படம் என ஏற்றுக் கொள்ளப்படும் ‘காளிதா’ஸிலும் (1931) நடித்த தமிழ்ப் பெண்ணான டி.பி.ராஜலட்சுமிதான், ‘மிஸ் கமலா’ (1936 ) என்கிற சமூகக் கதையாக்கம் கொண்ட படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து தமிழ் சினிமாவின் முதல் பெண் திரைக்கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்கிற பெருமையைத் தட்டிக்கொண்டுபோனார். நம் ‘சினிமா ராணி’ படம் இயக்குவதற்குச் சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு, 1926இல் ‘புல் புல் இ - பாரிஸ்டான்’ (Bulbul-e-Paristan) என்கிற சலனப் படத்தை நடித்து, தந்திரக் காட்சிகள் நிறைந்த படமாகத் தயாரித்து, இயக்கி, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் ஆனார் ஃபாத்திமா பேகம்.
அதற்கும் சரியாக 30 ஆண்டு களுக்கு முன்பு ஐரோப்பாவுக்குப் பயணித்தால், சினிமா பிறந்த அடுத்த ஆண்டில் (1896) தொடங்கி 700 சலனப் படங்களை இயக்கியும், எழுதியும், பல பரிசோதனை முயற்சிகளைச் செய்தும் உலகின் முதல் பெண் திரைப்பட இயக்குநராக ‘பிரெஞ்சு - ஹாலிவுட்’ சினிமா வரலாற்றை ஆக்கிரமித்திருக்கிறார் ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ என்கிற பிரம்மாண்டச் சலனப் படத்தை இயக்கிய ஆலீஸ் கி.
திரையிடல் கருவியைத் தயாரித்து விற்பனை செய்வதில் ‘பதே’ நிறு வனத்துக்குப் போட்டியாக விளங்கிய மற்றொரு பிரெஞ்சு நிறுவனம் ‘கௌமோண்ட்’ (Gaumont). அதில் அலுவலகச் செயலாளராகச் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, தனது நிறு வனத்துக்காக படங்களை எழுதி, இயக்கித் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தார் ஆலீஸ் கி. சலனப் படங்களுக்கு ஒலியைக் கொடுக்க வேண்டி 1907இல் குரோனோபோன் (Chronophone sync-sound system) கண்டறியப்பட்டபோது, அதன் உரிமை பெற்று, அக்கருவியையும் ஒலி வட்டுகளையும் கௌமோண்ட் நிறுவனம் தயாரித்தபோது, அதைத் தனதுச் சலனப் படங்களுக்கு முதன் முதலாகப் பயன்படுத்தினார் ஆலீஸ் கி.
அதுமட்டுமல்ல, உருவங்களுக்குப் பகுதி வண்ணங்கள் கொடுக்க முயன்றது, பிரெஞ்சு நாட்டுப்புறக் கதைகளைச் சலனப் படங்களில் நுழைத்தது, சிறார்களுக்கான சலனப் படங்களை எடுத்தது, பிரெஞ்சு சினிமாவிலிருந்து அமெரிக்கா சென்று ஹாலிவுட் உருவாகும் முன்பே அப்பகுதியில் ஸ்டுடியோ அமைத்து கால்கோள் இட்டது, ஹாலிவுட்டின் சலனப்பட யுகத்திலும் வெற்றிக்கொடி நாட்டியது என ஆலிஸ் கியின் சாதனைகள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கின்றன. அதனால்தான் சினிமா வரலாற்றாசிரியர்கள் அவரை ‘மதர் ஆஃப் சினிமா’ என்று புகழ்கிறார்கள்.
சாமிக்கண்ணு வின்செண்ட் ஆலீஸ் கியின் ‘கிறிஸ்துவின் வாழ்க்கை’ படத்தைத் தருவித்தபின், மதராஸ் ராஜதானியில் இருந்த பல தென்னிந்திய நகரங்களிலும் கிறித்துவ பள்ளிகளிலும் அதைத் திரையிட்டார். 1909இல் அன்றைய மதராஸ் நகரத்துக்கு வந்து மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்த எஸ்பிளனேட்டில் காலி இடம் ஒன்றை வாடகைக்குப் பிடித்து அங்கே 150 பேர் அமர்ந்து காணும் விதமாகத் தற்காலிகக் கீற்றுக் கொட்டகை அமைத்து அப்படத்தைத் திரையிட்டார். உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் கூடி வந்து தரையில் அமர்ந்து படத்தைப் பார்த்தனர்.
படத்தில், மரியாளுக்கு தேவதூதன் தோன்றுவது, ஆடு மேய்க்கும் ஆயர்களுக்கு தேவதூதன் தோன்றி நற்செய்தி கூறுவது, இறந்துபோன தனது நண்பர் லாசரை இயேசு உயிருடன் எழுப்புவது, இயேசு கல்லறையிலிருந்து உயிர்த் தெழுவது, பின்னர் அவர் சீடர்களுக்குக் காட்சி தருவது ஆகிய காட்சிளைப் பார்த்து ‘திரைக்குப் பின்னால் ஆவி வருகிறது’ என்று ஒவ்வொரு திரையிடலிலும் பலர் பயந்து எழுந்து ஓடினார்கள்.
‘பார்த்து பரவசப்பட தருணங்கள் உண்டு; பயப்பட ஏதுமில்லை’ என்கிற வாசகங்களுடன் ‘எடிசன்ஸ் கிராண்ட் சினிமாமெகாஃபோனில் இயேசுவின் அதி அற்புத தியாக ஜீவியத்தைக் காண வாருங்கள்' எனத் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விளம்பரம் செய்தார். கறுப்பர் நகரத்தின் உழைக்கும் மக்களுடன் இணைந்து படம் பார்க்க விரும்பி வந்த செல்வந்தர்களுக்குத் திரையிடல் கருவியை ஒட்டி இருமருங்கிலும் தலா 10 நாற்காலிகளைப் போட்டு, அதில் அமர்ந்து பார்க்க ஒருவருக்கு எட்டு அணாக்கள் கட்டணம் வசூலித்தார்.
கோயிலுக்குள் நுழையக் கூடாது, பொதுத் தெருக்களையும் கிணறுகளையும் பயன்படுத்தக் கூடாது, தலையில் துண்டைக் கட்டக்கூடாது என்று எந்த மக்களை ஒடுக்கினார்களோ.. அந்த மக்களுடன் தீண்டாமையை மறந்து, அவர்களின் வியர்வை வாசனைக்கு நடுவே செல் வந்தர்களும் ஆதிக்க சாதியினரும் படத்தைப் பார்த்தார்கள். அப்போது தான் சாமிக்கண்ணு வின்செண்டுக்கு அந்த எண்ணம் பிறந்தது.
(விழிகள் விரியும்)