திரைப் பள்ளி 01: கதையின் கால்தடம் தேடி…

திரைப் பள்ளி 01: கதையின் கால்தடம் தேடி…
Updated on
2 min read

ந்திய சினிமாவில் ஓர் உலக சாதனையை நிகழ்த்திவிட்டது ‘பாகுபலி 2’. இந்தியாவைத் தாண்டி சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளில் 801 கோடி ரூபாய் வசூல்செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம், ‘ஒரு வெற்றித் திரைப்படத்துக்கான கதை எப்படி இருக்க வேண்டும்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“மனைவி அக்கறை கலந்து சமைத்த வீட்டுச் சாப்பாட்டுக்கும் பார்த்ததுமே சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் ஹோட்டல் சாப்பாட்டுக்குமான வேறுபாட்டிலிருந்து இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன். கணவனின் ஆரோக்கியம், அவரது ஆயுள் பற்றி அதிக அக்கறை கொண்டவர் மனைவி. கணவன் விரும்பிக்கேட்டாலும் அளவுக்கு அதிகமாக இனிப்பை அவர் உண்ண அனுமதிக்க மாட்டார். ஆனால் ஹோட்டல் உணவு எப்படிச் சமைக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே சுவைகூட்டப்படுகிறது, நிறமூட்டப்படுகிறது. அதைப் பார்த்ததுமே சாப்பிடத்துண்டும் விதமாக சமைத்த உணவு பார்வைக்காக அலங்கரிக்கப்படுகிறது. எனவே, ஒரு கதையை நீங்கள் எழுத அமர்ந்தால், இந்த வேறுபாட்டை மனதில் வைத்துக்கொண்டு தொடங்குங்கள். கதையின் அடிப்படை ஒரு மனைவியைப் போல நேர்மையாக இருக்க வேண்டும். கதையைச் சுற்றியுள்ள அனைத்து அலங்காரங்களும் ஹோட்டல் உணவின் வசீகர முனைப்புடன் இருக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

அப்பா கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம் இப்படிக் கேட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள், மற்றொரு கலந்துரையாடலில் அவருடைய மகன் எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் எழுப்பியது இதற்கு நேர்மாறான கேள்வி. ‘உங்களுக்குக் கதையை யோசிக்கத் தெரியாதா? இயக்குநர் என்றால் கதை எழுதத் தெரிந்திருக்க வேண்டாமா?’

புன்புறுவல் பூத்த ராஜமௌலி “கதைக்கான கரு எது என்பதைத் தீர்மானிப்பதும் அதைத் திரைக்கதையாக விரித்து, விவரித்து எழுதுவதும் திரை எழுத்தாளனின் ஏரியா. அதற்கு எப்படிக் காட்சியமைப்பது என்பதைக் கற்பனை செய்பவரே திரை இயக்குநர். ஒரு இயக்குநர், திரை எழுத்தாளராகவும் இருந்தே தீர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.” என்று பதில் அளித்தார்.

விஜயேந்திர பிரசாத்தின் பதிலில் ஒரு திரைக்கதைக்குரிய வடிவமும் சுவாரசியமும் இருந்தது. ஆனால், ராஜமௌலியின் பதிலில் நாம் பின்பற்ற வேண்டிய ஏற்றுக்கொள்ளபட்ட நடைமுறை வெளிப்பட்டது. இதுவரை 12 படங்களை இயக்கியிருக்கும் அவர், எந்தப் படத்துக்கும் கதை எழுதவில்லை. சில படங்களுக்கு அப்பாவுடன் இணைந்து திரைக்கதை எழுதியதோடு சரி. அவ்வளவு ஏன்! வசனம் எழுதுவதையும் அவர் இழுத்துப் போட்டுக்கொள்ளவில்லை. கதை, திரைக்கதை, வசனம் ஆகிய மூன்று முதன்மை அம்சங்கள் அடங்கிய திரை எழுத்து ஒரு சினிமாவுக்குத் தாய் என்றால், காகிதத்தில் எழுதப்பட்ட கதைக்குக் காட்சிகளில் வடிவம் கொடுப்பது அந்தத் தாயின் தலைப்பிள்ளை என்று வைத்துக்கொள்ளலாம். இருவருக்கும் ரத்தபந்தம் உண்டு. ஆனால், ‘கரு’வறையிலிருந்து வெளிவந்த பிறகு தாய் வேறு, பிள்ளை வேறு என்பதே யதார்த்தம். ‘தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு’ என்ற பழமொழியை இந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.

வணிக சினிமாவின் மசாலா கூறுகளை இறுகப்பிடித்துக்கொண்டு இன்னமும் தொங்கிக்கொண்டிருக்கும் தெலுங்குத் திரையுலகில்கூடத் திரை எழுத்தாளர்களுக்கு இடமிருக்கிறது. அருகிலிருக்கும் மலையாளப் பட உலகம் இந்த விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளைக் கடந்து இந்தியா சினிமாவுக்கே வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. அங்கே மக்கள் கொண்டாடிவந்திருக்கும் மாபெரும் இயக்குநர்கள் எவரும் தங்கள் படங்களுக்கான கதைக்கு மண்டையை உடைத்துக்கொண்டதில்லை. ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, மாபெரும் இயக்குநர்களுக்கு அங்கே கதாசிரியர்களாக மிளிர்ந்தவர்கள், மிளிர்ந்துகொண்டு இருப்பவர்கள் திரைப்பட இயக்கம் என்ற எல்லைக்குள் பிரவேசித்தது இல்லை. ஒரு திரைப்படத்தை உருவாக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை எனக் குறைந்தது 24 கலைப் பிரிவுகளின் பங்களிப்பையும் கூட்டுழைப்பையும் ஒரு இயக்குநர் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட திரை எழுத்தையும் இயக்குநர் இதேமுறையில் வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் அந்தக் கதையை அவர் சமரசமற்றுக் கையாள முடியும். ‘என் படத்துக்குச் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் சமரசமற்ற தரமும் கற்பனையும் இருக்க வேண்டும்’ என்று விரும்பும் இயக்குநர், கதையை மட்டும் தானே எழுதிவிடத் துடிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இயக்குநரிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்கள் ஒரு வர்க்கம். சில குறும்படங்களை எடுத்து கவனம் பெற்றவர்கள் இன்னொரு வர்க்கம். இந்த இரண்டு வகைமையில் எந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேவந்து இயக்குநர் ஆகத் துடித்தாலும் அவர்களிடம் பட முதலாளிகள் கேட்கும் கேள்வி, ‘உங்களிடம் நல்ல கதை இருக்கிறதா?, எந்த ஹீரோவுக்குக் கதை வைத்திருக்கிறீர்கள்” என்பதுதான். தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான திரைப்படக் கதைகளின் கால்தடத்தைத் தேடினால் தயாரிப்பளர்களுக்குச் சொல்லவும் கதாநாயகர்களுக்குச் சொல்லி அவர்களது கால்ஷீட்டைப் பெறுவதற்குமான நாயக வழிபாட்டுக் களங்களாகத் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றுடன் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என்று போட்டுக்கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பும் நாமே கதை எழுதிவிட்டால் அதன் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிறமொழி மறுஆக்க உரிமைகள் வழியே கிடைக்கும் விலையில் கணிசமான பங்குண்டு என்பதாலும் இங்கே திரை எழுத்து இயக்குநரின் சிறையில் தவித்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு திரைப்படத்துக்கான விதை எழுத்தாளனின் கற்பனையிலிருந்து முளைவிடுகிறது. பின்னர் திரைக்கதை என்ற செடியாகக் கிளைக்கிறது. அதன்பிறகு இயக்குநரின் காட்சிக்கற்பனையில் (விஷுவலைசேஷன்) அது திரைப்படமாகத் தழைக்கிறது. எங்கே? காலம் காலமாக நாம் கற்றுக்கொண்டிருக்கும் ஹாலிவுட்டில். கதை கிடைத்த பிறகே அதைத் திரைப்படமாக்க இயக்குநர் அமர்த்தப்படுகிறார். இதை ஹாலிவுட்டிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறிய நாம், திரை எழுத்தின் அரிச்சுவடி பற்றி அடுத்த வகுப்பில் பயிலலாம்.

(இடைவேளை)

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in