

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ‘தங்கப்பதக்கம்’ படத்தின் படப்பிடிப்பு. தனது உதவி இயக்குநர்களை அழைத்தார் படத்தின் இயக்குநர் பி.மாதவன்: “நாளைக்கு சௌத்ரியோட மனைவி இறக்கிற சீன்பா.. எல்லாம் ரெடியா இருங்க. மகேந்திரன் டயலாக் எழுதிக்கிட்டு இருக்கார். நிறைய டயலாக் இருக்கும். செட் சைலண்டா இருக்கணும்” என்றார். மறுநாள் மகேந்திரன் வசனப் பேப்பருடன் செட்டுக்கு வந்தார். இயக்குநருடன் சிறிது நேரம் உரையாடிய பின் வசனப் பேப்பரைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். மாதவன் வியப்பாக மகேந்திரன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு படப்பிடிப்புத் தொடங்கியது.
மனைவி இறந்த செய்தியைக் கேள்விப்படும் சௌத்ரி அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார். அவர் வீட்டுக்குள் நுழைவதிலிருந்து ஷாட்களைப் படம் பிடிக்கத் தொடங்கினார் இயக்குநர். சௌத்ரி இறுக்கமான மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து, தனது காக்கிச் சீருடையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவது ஒரு ஷாட், அங்கிருந்து வீட்டின் ஹாலில் சோகத்துடன் குழுமி யிருக்கும் உறவினர்கள், நண்பர்களைக் கடந்து தடுமாற்றத்துடன் மாடிப் படியேறி முதல் மாடிக்குச் செல்வது இரண்டா வது ஷாட்.
மனைவியின் உடல் கிடத்தப் பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்து அவரது முகத்தைக் கூர்ந்து பார்ப்பது மூன்றாவது ஷாட். நான்காவது ஷாட்டில் சிவாஜி வசனம் பேசினார்: “லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு..ஏன் எங்கூடப் பேச மாட்டேங்கிற.. நான் யூனிஃபார்ம்ல இருக்கும்போது எங்கூடப் பேசப் பயப்படுவே.. இப்பப் பாரு.. நான் யூனிஃபார்ம் இல்லாம வந்திருக்கேன்.. பேசும்மா..!
நான் நேரங்கழிச்சு வருவேன்.. நீ எனக்காக தூங்காம காத்துகிட்டு இருப்பே… நான் நேரத்தோட வந்திருக்கேன், நீ தூங்கிட்டியே.. நான் என்னமா தப்பு பண்ணேன்? என்னைத் தனிமரமா ஆக்கிட்டுப் போயிட்டியே.. என்னால தாங்க முடியலம்மா?” என்று கூறிக் கதறி விழுவதுடன் ஷாட் முடிய.. “கட்! ஷாட் ஓகே” என்றார் மாதவன். அவருடைய உதவி இயக்குநர்களால் இதை நம்பவே முடியவில்லை!
மூன்று ஷாட்களின் மௌனம்: இந்தக் காட்சியில் பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். நடிகர் திலகத்தின் ரசிகர்களும்கூட திரையரங்கில் ஆச்சர்யமாகத்தான் அந்தக் காட்சியைப் பார்த்தார்கள். ஒரு சின்ன வசனத்துடன் முடிந்த அந்தக் காட்சியின் முதல் மூன்று ஷாட்களில் விரவிக் கிடந்த மௌனம், அங்கே நிகழ்ந்திருந்த மரணத்தின் துயரை, சௌத்ரி பேசிய அந்தச் சின்ன வசனத்தை விடவும் தீவிரமாக அவர்களுக்குக் கடத்தியிருந்தது.
பல படங்களுக்குப் பக்கம் பக்கமாக வசனம் எழுதிய கதை - வசன கர்த்தாவான மகேந்திரன், காட்சிமொழி யையும் கதாபாத்திர வார்ப்பையும் முதன்மைப்படுத்தி ‘முள்ளும் மலரும்’ என்கிற படத்தைக் கொடுப்பார் என்று பார்வையாளர்கள் எதிர் பார்க்கவே இல்லை. தங்களது அகங்காரத்தையும் ஆணாதிக்க மனோபாவத்தையும் எந்தச் சலசலப்பும் இல்லாத மிகக் குறைந்த வசனங்களைப் பேசும் கதா பாத்திரங்களில் அவர்கள் கண்டனர்.
கதாபாத்திரங்களின் செயல்களுடன் தங்களின் நினைவுகளைப் பொருத்திப் பார்க்க வைத்த திரை அனுபவம் கிடைத்தபோது, மேடு பள்ளங்களைத் தாண்டிய வாழ்க்கையின் உன்னதம் குறித்த புரிதலை ‘முள்ளும் மலரும்’ கொடுத்து அனுப்பியது. இதுவரை பார்த்து வந்திருக்கும் பெரும்பாலான திரைப் படங்கள், பாடல்களின் கொண் டாட்டமாக, சண்டை, நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட கேளிக்கை அம்சங் கள் தரும் களிப்பாக, கதாபாத்திரத்தை மீறிய நடிகர்களின் நீண்ட ‘வசன’ நடிப்பாகத் தேங்கி நின்றிருந்ததை அவர்கள் பிரித்துப் பார்த்தனர்.
ஒளியே தொடக்கம்; ஒலி அல்ல! - சினிமாவைக் கண்டறிந்த பிரெஞ்சு தேசத்தின் லூமியே சகோதரர்கள், ஒளியின் வடிவமாகவும் ‘ஆவணப் பட’ தன்மையோடும் அதை உலகின் முன் கொண்டு வந்தனர். அவர்கள் படமாக்கி பாரிஸின் கிராண்ட் கஃபே விடுதியின் பொது அரங்கில், டிசம்பர் 28, 1885இல் திரையிட்ட ‘ரயிலின் வருகை’ (Arrival of the Train), ‘தொழிற்சாலையை விட்டுப் புறப்படுதல்’ (Leaving the Factory) ஆகிய இரண்டு சலனப்படத் துண்டுக் காட்சிகளைப் பார்த்த மேட்டுக்குடி மக்கள், இது உலகெங்கும் வாழும் மக்களின் கலாச்சார, அரசியல் வாழ்வில் பெரும் தாக்கத்தை உருவாக்கப்போகும் ஒரு கலையாக உருவெடுக்கும் என்றோ, இனம், மொழி, வர்க்கம் கடந்து அனைவருக்குமான ஒரு வெகுமக்கள் கலையாகத் தன்னை விரிவு செய்துகொள்ளும் என்றோ நினைத்திருக்க மாட்டார்கள்.
ஏனென் றால், லூமியே சகோதரர்கள் தொடர்ந்து ஆவணப்படத் தன்மையோடுதான் சலனப்படங்களை எடுத்தனர். சினிமா கேமரா கண்டுபிடிப்பின் படிநிலைகளில் பங்களித்த எடிசனும் உண்மை நிகழ்வுகளை ஒரே ஷாட்டாக ஒளிப்பதிவு செய்து தனது ‘எடிசன் மேனுஃபேக்சரிங் கம்பெனி’ மூலம் பொதுமக்களுக்குக் காட்டி வந்தார்.
ஆனால் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம், சினிமாவை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்தியது. கதை சொல்லும் ஊடகமாக அதைப் பயன்படுத்த முடியும் என்பதை பிரெஞ்சு தேசமே உலகுக்குக் காட்டியது. பிரெஞ்சு நடிகரும் இயக்குநருமான ஜார்ஜ் மெலியாஸ் எழுதி, இயக்கி, நடித்து, படத்தொகுப்பு செய்த ‘நிலவுக்கு ஒரு பயணம்’ (A Trip to the Moon) என்கிற 18 நிமிடச் சலனக் குறும்படம் 1902, செப்டம்பரில் மக்களை மயக்கியதுடன் உலகம் முழுவதும் சென்று அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
வானியல் சங்கத்தின் தலைவரும் அவருடன் பயணப்படும் மேலும் ஐந்து சகாக்களும் விண்வெளி ஓடத்தில் ஏறிக்கொள்ள, அதை விண்வெளி தொழில்நுட்பக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண்கள்(!) ஒரு பெரிய துப்பாக்கி மூலம் வானில் ஏவுகின்றனர். விரைந்து செல்லும் விண்கலக் குப்பி, நிலவின் வலது கண்ணில் சென்று பாய்கிறது. அங்கே வானியல் குழுவுக்கு நேரும் அனுபவங்களும் அதன் பின்னர் அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவதும்தான் கதை. ‘இப்போதும் இந்தப் படத்தை யூடியூப் வலையொளியில் காணலாம்)
சினிமாவில் கதை சொல்லலாம் என்பது மட்டுமல்ல, அதை அறிவியல் புனைக்கதையாகவும் சொல்லலாம் என்பதையும் காட்சிமொழியில் பல தந்திர விளைவுகளை உருவாக்கலாம், ஒரே ஷாட்டாக இல்லாமல், பல ஷாட்களை படத்தொகுப்பின் வழியாக இணைத்து கதையோட்டத்தைச் சீராக்கிக் காட்ட முடியும் என்பதையும் ஜார்ஜ் மெலியாஸும் அவரது குழுவின ரும் உலகத்துக்குக் காட்டினார்கள்.
உலகின் முதல் மாஸ் மசாலா: இந்தப் பெரும் நகர்வு ஒரு பக்கம் இருக்க, ‘எ ட்ரிப் டு தி மூன்’திரைப்படத்தை விஞ்சும் விதமாகஒரு சாகசக் கதையைத் திரைப் படமாக்கிக் காட்ட நினைத்தது எடிசன் மேனுஃபேக்சரிங் கம்பெனி. அதற்காக, அமெரிக்க நாடகாசிரியர் ஸ்காட் மார்பிள் எழுதி மேடைகளில் நிகழ்த்தப்பட்டு வந்த ‘மாபெரும் ரயில் கொள்ளை’ (The Great Train Robbery) என்கிற நாடகத்தின் கதையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அந்த நாடகத்தின் நிகழும் சம்பவங்கள் ஒரே கால வரிசையில் அமைந்திருந்தன. ரயில் நீரேற்று நிலையத்துடன் கூடிய ஒரு டெலிகிராப் அலுவலகம், துப்பாக்கி முனையில் பணிய வைக்கும் கௌபாய் தோற்றம் கொண்ட கொள்ளையர்கள், அவர்கள் பயணி களைப் பணிய வைக்கச் செய்யும் ஒரு கொலை, இன்ஜின் அறையிலும் ரயில் பெட்டியின் மேலும் சண்டை, பயணிகளிடம் கொள்ளை அடித்த பின் தப்பிச் செல்ல ரயிலிலிருந்து இன்ஜினை தனியே பிரித்து ஓட்டிச் செல்வது, பிறகு அவர்கள் பிடிபடுவது, கொல்லப்படுவது என அதுவொரு பெரும் குற்றச் சம்பவத்தின் சாகச ‘மெலோ டிராமா’வாக கதை அமைந்து போனது.
இந்த 12 நிமிடக் குறும்படம் பல விதங்களில் மக்களைக் கவர்ந்து கொண்டதுடன் சினிமா கதை சொல்லலில் (Cinematic storytelling) பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஒரு கதையைச் சொல்ல பலவித கேமரா கோணங்களைப் பயன்படுத்துவது திரை அனுபவத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்பதைக் காட்டியது. அதற்குக் கதையின் நிகழ் நேரத்திலிருந்து விலகிவிடாத (Cross-cutting editing) படத்தொகுப்பு முறை கையாளப்பட்டிருந்தது (யூடியூபில் இந்தப் படத்தையும் காணலாம்).
நாடகத்தின் தலைப்பிலேயே 1903 டிசம்பரில் வெளியான ‘த கிரேட் டிரெய்ன் ராபரி’யை இயக்கியவர் அமெரிக்கச் சலனப் பட காலத்தின் மேதையாகக் கொண்டாடப்பட்ட எட்வின் எஸ்.போர்டர். அமெரிக்காவின் முதல் கதைப் படமே உலகின் முதல் ‘மாஸ் மசாலா’ படமாகவும் அமைந்துபோனது. பலமுறை மீண்டும் படமாக்கப்பட்டது.
சென்னையின் முதல் திரையரங்கு களில் ஒன்றாக வார்விக் மேஜர் என்கிற ஆங்கிலேயர் சென்னையின் அண்ணா சாலையில் கட்டிய ‘எலெக்ட்ரிக் தியேட்ட’ரில் ‘த கிரேட் டிரெய்ன் ராபரி’ 1913இல் திரையிடப்பட்டது. சலன சினிமாவை கதை சொல்லும் ஊடகமாக முன்னகர்த்திய அதே அமெரிக்காதான் அதை வரலாற்றின் ஆவணமாக, அரசியல் ஆயுதமாக கையிலெடுத்தது. அமெரிக்கா எனும் தேசம் பிறந்த வரலாற்றை ‘த பர்த் ஆஃப் எ நேஷன்’ (The Birth of a Nation) என்கிற 193 நிமிடங்கள் கொண்ட முழுநீள சலனத் திரைப்படமாக 1915இல் காவியத் தன்மையுடன் உலகுக்குக் காட்டியது. அப்போது தமிழ் சினிமா பிறந்திருக்கவில்லை.
(விழிகள் விரியும்)
- jesudoss.c@hindutamil.co.in