மும்பை கேட்: புதிய களத்தில் விஷ்ணுவர்தன்!

மும்பை கேட்: புதிய களத்தில் விஷ்ணுவர்தன்!
Updated on
1 min read

நடிகர் ஆர்யாவை ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, படங்களின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாகவும் அடையாளப்படுத்தியவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களைக் கொடுத்தவர் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘யட்சன்’ படத்தில் ஆர்யாவும் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடித்திருந்தனர். அந்தப் படத்துக்குப் பின் படம் இயக்காமல் இருந்துவந்த விஷ்ணுவர்தன் முதல்முறையாக பாலிவுட்டில் நுழைகிறார்.

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரர்களில் ஒருவர் விக்ரம் பத்ரா. இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் விஷ்ணுவர்தன் இந்தியில் படமாக்க இருக்கிறார்.

விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்துக்கான திரைக்கதையை எழுதியிருப்பவர் ஸ்ரீவஸ்தவா.

தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து இந்தியில் உருவான ‘ராஞ்சணா’, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’யாக வெளியானது. அந்தப் படம் உட்படத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பல இந்திப் படங்களின் மூலம், பாலிவுட்டைத் தாண்டி தமிழ் ரசிகர்களுக்கும் சோனம் கபூர் பரிச்சயமானவர். இவரது ஆடை, அலங்கார பாணிக்கு இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

விதவிதமாக அடைகளை அணிந்து ஃபாஷன் பரேடுகளில் முதன்மையாக வந்து கவனம் ஈர்த்து வந்த சோனம் கபூருக்குக் கடந்த புதன் அன்று திருமணம் நடந்தேறியது. சோனம் கபூரின் மணமகன் யார் என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்டதால் அதுபற்றி எதிர்பார்ப்பின்றி, சோனம் அணிந்த திருமண ஆடையை அவரது ஃபாஷன் ஃபாலோயர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து திருப்தி அடைந்துவருகிறார்கள்.

திருமண ஆடையாக அடர் சிவப்பில் லெஹெங்கா அணிந்திருந்தார் சோனம் கபூர். கழுத்து நிறைய நகைகள், கை நிறையப் பாரம்பரிய வளையல்கள், அழகு சேர்க்க மெகந்தி என நேர்த்தியாகத் தன்னைத் தயார் செய்திருந்தார்.

சோனம் கபூரின் சகோதரி ரியா கபூர் இன்ஸ்டாகிராமில் சோனம் கபூர் - மணமகன் ஆனந்த் அஹூஜாவின் திருமணப் புகைப்படத்தைப் பகிர அது சமூக வலைத்தளங்களில் ஏற்கெனவே வைரலாகிவிட்டது. மணமகன் ஆனந்த் அஹூஜா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in