‘மின்மினி’க்கு எல்லாம் கூடிவந்தது! - ஹலிதா ஷமீம் நேர்காணல்
தமிழில் அசலான ‘சிறுவர் சினிமா’ அல்லது ‘சிறார் சினிமா’ என்று பேசும்போது ‘பூவரசம் பீப்பி’க்கு கௌரவமான இடம் இருக்கிறது. அதை எழுதி இயக்கிய ஹலிதா ஷமீம் தமிழ் சினிமாவின் கவனத்துக்குரிய படைப்பாளிகளில் ஒருவர். அவரது ‘சில்லுக் கருப்பட்டி’ தமிழின் சிறந்த தொகுப்புத் திரைப்படங்களில் ஒன்றாகப் பார்வையாளர்கள், விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பையும் கவர்ந்தது.
தற்போது, இந்திய சினிமாவில் யாரும் முயன்றிராத வண்ணம், பள்ளிக் காலத்தையும் பதின்மம் கடந்த இளமைப் பருவத்தையும் இணைக்கும் கதையில் ஒரே சிறார் நடிகர்களையே நடிக்க வைத்து ‘மின்மினி’ படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இதற்காக படத்தின் முதல் பாதியைச் சிறார் நடிகர்களின் 15 வயதிலும் பின்னர் அவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆகும் வரை 8 ஆண்டுகள் காத்திருந்து இரண்டாம் பகுதியையும் படம்பிடித்து முடித்திருக்கிறார். இப் படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா. படம் விரைவில் வெளி யாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘மின்மினி’யும் ஒரு சிறார் சினிமாவா? - இல்லை. இதில் பத்தாம் வகுப்பில் பயிலும் பள்ளிப் பருவக் கதாபாத்தி ரங்களை 7 ஆண்டுகள் கழித்து அவர்கள் வளர்ந்த இளைஞர்களாகக் காட்டுகிறேன். எனவே இதைச் சிறார் திரைப்படமாகக் கருத முடியாது.
பள்ளிப் பருவம் - இளமைப் பருவம் ஆகியவற்றில் ஒரே நடிகர்களை நடிக்க வைப்பது என்கிற ஐடியாவை ‘எக்ஸிக்யூட்’ செய்ததில் எதிர்கொண்ட சவால்களை வரிசைப்படுத்துங்கள். பள்ளிப் பருவப் படப்பிடிப்பை முடித்த பிறகு வந்த இரண்டு மூன்று வருடங்கள், நடித்த பிள்ளைகள் எப்போது வளர்வார்கள் என்று ‘ரெஸ்ட்லெஸ்’ஆக உணர்ந்தேன். அதேபோல் வளர வளர அவர்களின் தோற்றத்தில் அதிகம் வேறுபட்டு விடுவார்களோ, இப்போது நடிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டேன்.
அதேபோல், தயாரிப் பாளர், இந்தக் கதை வேண்டாம், வேறொரு கதையைப் படம் பண்ணிவிட்டுப் போய் விடலாம் என்று சொல்லிவிடுவாரோ என்கிற பயமும் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் எதிர்பார்த்ததுபோலவே அவர்களின் தோற்றம், இரண்டாம் கட்டத்தில் நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் அப்படியே இருந்தது. தயாரிப்பாளருக்கோ கதையின் மீதான ‘இண்ட்ரஸ்ட்’ சிறிதும் குறைய வில்லை. இப்படி எல்லாமே கூடி வந்து இந்தப் படத்தைச் சாத்தியமாக்கியது.
‘மின்மினி’யின் கதாபாத்திரங்கள், அவற்றில் நடித்துள்ள நடிகர்கள் பற்றிக் கூறுங்கள்? - இதில் மூன்று முதன்மைக் கதா பாத்திரங்கள். தன்னலமற்ற ஒரு பெண்.அவள், நட்பின் மேன்மையை உணர்ந்த வள். நண்பர்களின் கனவைத் தன்னு டையதாக மதிப்பவள். எங்கோ ஓரிடத் தில் சறுக்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு,பிடிமானமில்லாமல் இருக்கும் ஒருவன்.
அவனுக்கு நேர்மாறாக ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் துடிப்பாக எதிர் கொள்பவன் மற்றொருவன். துடிப்பான பாரி முகிலன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் கௌரவ் காளை. சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் பிரவீன் கிஷோர். இந்த இருவரும் எனது ‘பூவரசம் பீப்பி’ படத்தில் நடித்தவர்கள். பிரவீணா நாசராக வரும் பெண் எஸ்தர் அனில்.
படம் தொடங்கிய காலக்கட்டத்தில் திரைக்கதையில் இருந்த விஷயங்களில் ஒரு பத்தாண்டின் வாழ்க்கை மாற்றங்களுக்காக எதையும் மாற்ற வேண்டியிருந்ததா? - சமூக ஊடகங்களின் வளர்ச்சி உள்படப் பலவற்றைத் திரைக்கதையில் மாற்றி இருக்க முடியும். ஆனால், நான் அதை செய்யவில்லை. படம் தொடங்கியபோது திரைக்கதையில் என்ன இருந்ததோ, முடிக்கும்போது அதை மீண்டும் மீண்டும் வாசித்தேன்.
திரைக்கதை அப்படியே ‘ஃபியூர்’ ஆக இருந்தது. அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்படி மாற்றுவது அந்தக் கதைக்கும் கதா பாத்திரங்களுக்கும் செய்யும் நியாயமாக இருக்காது என்று உறுதியாக நம்பினேன். தற்காலத்தில் கதை நடைபெறுகிறது என்பதைத் தெரிவிக்க ஒன்று, இரண்டு விஷயங்களை மட்டும் மாற்றினேன்.
குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்துவிட்ட பகுதி முழுவதையும் காஷ்மீரின் லடாக்கில் படம் பிடித்திருக்கிறீர்கள். எப்படியிருந்தது அனுபவம்? - லடாக் ஒரு சொர்க்கப் பூமி! ‘சீனிக் பியூட்டி’ மட்டுமல்ல; அங்கே வாழும் மனிதர்கள் வெள்ளந்தியானவர்கள். இரண்டு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கண்டறிய முடியாது. யார் ஏழை, யார் செல்வந்தர் என்று கண்டறிய முடியாது.
கடினமான உழைப்பாளிகள். அனைவரையும் அன்பாக அரவணைத்துக் கொள்கிறவர்களும்தான். அப்படிப்பட்ட மனிதர்கள் கதைக் களத்தின் இரண்டாம் பாதி முழுவதும் உலவுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் சபரி எப்படிக் குணமாகிறான் என்பதும் கதையில் ஒரு முக்கிய இழையாக இருக்கும். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா லடாக்கின் நிலப்பரப்பையும் அதிலிருக்கும் ஆன்மாவையும் அப்படியே நமக்குக் கொடுத்திருக்கிறார்.
- jesudoss.c@hindutamil.co.in
