பாலிவுட் வாசம்: ஜொலிக்கும் ஜோடி

பாலிவுட் வாசம்: ஜொலிக்கும் ஜோடி
Updated on
1 min read

மும்பை ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் வந்துவிடுகிறது மராட்டா மந்திர் திரையரங்கம். இங்கே கடந்த 1995-ம் ஆண்டு ஷாருக் கான் - கஜோல் நடிப்பில் வெளியானது ’தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’ திரைப்படம். முதலில் நான்கு காட்சிகள், பிறகு மூன்று காட்சிகள், அதன் பிறகு பிறகு இரண்டு காட்சிகள் என்று மூன்று ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. அதன் பிறகும் திரையரங்கைவிட்டு வெளியேறாத இந்தப் படம் தற்போது காலைக் காட்சியாக மட்டும் கடந்த 18 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது இங்கே.

இத்தனை விலைவாசிக்கு நடுவிலும் ஷாரூக் கான் - கஜோல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்தத் திரையரங்கின் உரிமையாளர் மனோஜ் தேசாய் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாட்களில் 20 ரூபாயும் மற்ற நாட்களில் 15 ரூபாயும் என்று குறைந்த கட்டணத்தை வசூல் செய்கிறார். ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ.4 கோடிதான். ஆனால் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தின் சாதனை வெற்றிக்குப் பிறகு ’கோல்டன் பேர் என்று கொண்டாடப்பட்டு வந்த ஷாரூக் கான் - கஜோல் ஜோடி மீண்டும் இதே படத்தின் இந்தி மறு ஆக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பாலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து வைத்து வருகிறார்கள்.

மறு ஆக்கத்தில் அவர்கள் எதிர்காலத்தில் நடிப்பார்களா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, 2010-ல் ’மை நேம் இஸ் கான்’ படத்துக்காக இந்த ஜோடி மீண்டும் இணைந்தது. 2017-ம் ஆண்டு ஷாரூக் -கஜோல் மறுபடியும் இணைகிறார்கள் என்பதுதான் தற்போதைய சூடான செய்தி. ‘மை நேம் ஈஸ் கான்’ படத்துக்குப் பிறகு பல பொழுதுபோக்குப் பத்திரிகைகளின் அட்டைகளையும் அலங்கரித்தது இந்த ஜோடி, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் இணைய இருக்கிறார்களாம். அடுத்த ஆண்டே இந்தப் படம் தொடங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்ற தகவலும் கிடைக்கிறது. இந்தச் செய்தியைச் சம்மந்தப்பட்ட மூவருமே மறுக்கவில்லை.

ஷாரூக் கான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஹாப்பி நியூ இயர்’ படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இதில் ஷாரூக்கின் நாயகி தீபிகா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in