

நடிப்புக்காகத் தேசிய விருது பெற்ற பிறகு, வணிகப் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இணைகோடாக பெண் மையக் கதைகளிலும் நடித்துவருகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கும் கதைக் களத்துடன் உருவாகியிருக்கும் ‘ரகு தாத்தா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ஒரு முழு நீள அரசியல் நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இதை, பிரபலமான ‘தி ஃபேமிலி மேன்’ இந்தி இணையத் தொடரின் திரைக்கதை எழுத்தாளரான சுமன் குமார் எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த கீர்த்தி சுரேஷ், இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
உங்களுக்கு இந்தி தெரியுமா? - நான் படித்தது கேந்திரிய வித்யாலயா பள்ளியில்தான். நான் படித்தபோது ஆங்கிலம், இந்தி, சம்ஸ்கிரதம் இந்த மூன்று மொழிகள் மட்டும்தான். மலையாளம் கிடையாது. அதனால் இந்தியைப் படித்தே ஆகவேண்டிய சூழ்நிலை. நேட்டிவ் இந்தி பேசும் மாணவ, மாணவிகள் பள்ளியில் அதிகம் இருந்தனர். அதன் காரணமாக சரளமாக இந்தி பேசக் கற்றுக்கொண்டேன். ஆனால், இலக்கணச் சுத்தமாகப் பேசத் தெரியாது.
‘தெறி’ பட மறு ஆக்கம் மூலம் இந்திப் படவுலகில் அறிமுகமாகவிருக்கிறீர்கள்; இந்தி மொழிக்கு எதிரான ஒரு கதையில் நடித்திருப்பது பாலிவுட்டில் உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தாதா? - தெரியவில்லை! ‘ரகு தாத்தா’ ரிலீஸ் ஆன பிறகுதான் அங்கே எப்படி ‘ஃபீல்’ பண்ணுகிறார்கள் என்று தெரியும். இப்படத்தில் கயல்விழி என்கிற வங்கி ஊழியராக வருகிறேன். 70களில் கதை நடக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் என்னுடைய தாத்தா.
கிராமத்திலிருந்து சென்னைக்கு எதற்காக வருகிறேன் என்பதுதான் கதை. இந்தியை யாரும் எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். மொழியை மட்டுமல்ல; பெண்கள் மீது எதுவொன்றையும் வற்புறுத்தித் திணிக்காதீர்கள் என்பதுதான் படம் கூறும் செய்தி.
எம்.எஸ்.பாஸ்கர் போன்ற மூத்த நடிகருடன் இணைந்து நடித்தது எப்படியிருந்தது? - படத்தில் தாத்தா - பேத்தி இடையிலான பாசப் பிணைப்பு ரசிக்கும்படி இருக்கும். அவருக்கும் எனக்கும் நிறைய ‘காம்பினேஷன்’ காட்சிகள் படத்தில் இருக்கின்றன. வசனத்தை அவர் டெலிவரி செய்யும் மாடுலேஷனில் கேரக்டர் தெரியும்.
இயக்குநர் அவருக்குக் கொடுக்கும் வசனத்தை அனுபவ முதிர்ச்சியால் மேம்படுத்திக் கொடுப்பார். இப்போது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவரை எனது சொந்தத் தாத்தாவாக நினைக்கத் தொடங்கிவிட்டேன். படப்பிடிப்பு முழுவதும் என்னை ‘பொம்மை.. பொம்மை’ என்றுதான் அழைத்தார்.
விஜய் கட்சியில் இணையப் போவதாகத் தகவல்கள் உலவியபடி இருக்கிறதே? - அரசியலில் இப்போதைக்குச் சேரும் எண்ணம் இல்லை. அப்படிச் சேரும் நிலை வந்தால் அப்போது கண்டிப்பாகச் சொல்வேன்.
10 ஆண்டுகள் திரைப் பயணம் எப்படி உணர்கிறீர்கள்? - பத்து வருடம் ஆகிவிட்டதா என்று பிரமிப்பாக இருக்கிறது. அதேநேரம் பொறுப்பு கூடிவிட்டதாக நினைக்கிறேன். கமர்ஷியம் படங்கள் - ‘ஆஃப் பீட்’ படங்கள் என இரண்டையும் பண்ணுவது நல்ல ‘பேலன்சிங்’ ஆக இருக்கிறது.
தயாரிப்பில் இருக்கும் ‘கன்னி வெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’ வரை, ‘மகாநடி’ படத்துக்குப் பின் தானாகத் தேடி வந்து அமைந்த கதாபாத்திரங்கள். இனி நல்ல கதாபாத்திரங்களை நானும் தேடிச் செய்வது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். அதற்காக, இதுவரை யாரும் தொடாத ‘ஸோன்’ எது என்று தேடத் தொடங்கிவிட்டேன்.
திரையுலகில் உங்களுக்குப் போட்டி நயன்தாராவா? - எனக்குப் போட்டி நான் மட்டும்தான். எனது ஒரு படத்தை இன்னொரு படம் தாண்டிச் செல்ல வேண்டும் என்று நினைப்பவள்.
- jesudoss.c@hindutamil.co.in