கடினமான நாள்களே கற்றுக் கொடுத்தன! - நித்திலன் சுவாமிநாதன் நேர்காணல்

கடினமான நாள்களே கற்றுக் கொடுத்தன! - நித்திலன் சுவாமிநாதன் நேர்காணல்

Published on

பாராட்டுகள், குட்டுகள் எனக் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது ‘மகாராஜா’ திரைப்படம். அவற்றைத் தாண்டி 100 கோடி ரூபாய் திரையரங்க வசூலை எட்டிப் பிடித்திருக்கும் இப்படம் குறித்து, ‘ஸ்பாய்லர் அலர்ட்’டுகளுடன் ‘தமிழின் அலாதியான நான் - லீனியர்’ எனச் சிலாகித்து வருகிறது ரசிகர்களால் நிரம்பியிருக்கும் சமூக வலைதளச் சமூகம்.

மற்றொரு பக்கம் முன்னணி இயக்குநர்களின் பாராட்டு மழை. பெரு வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருக்கும் ‘மகாராஜா’ படத்தின் எழுத்தாளர், இயக்குநர் நித்திலனைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

உங்களது முதல் படமான ‘குரங்கு பொம்மை’ வெளியானபோது பார்க்கத் தவறியவர்கள்; இப்போது அதைத் தேடிப் பார்க்கிறார்கள் இல்லையா? - உண்மைதான். ‘மகாராஜா’ ரிலீஸுக்குப் பிறகு ‘குரங்கு பொம்மை’யை யூடியூபில் புதிதாக 10 லட்சம் பேர் பார்த்திருக் கிறார்கள். ‘யாருக்கெல்லாம் ‘மஹாராஜா’ படத்தைப் பார்த்த பிறகு தான் ‘குரங்கு பொம்மை’ என்றொரு படம் வந்ததே தெரிந்தது?’ என்று ஒருவர் ‘கமெண்ட்’டில் கேட்டிருக்கிறார். இப்போது முதல் முறையாகப் பார்த்த பலரும் ‘தம்ஸ் அப்’ செய்திருக்கிறார்கள்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலுமகேந்திரா சார் சொன்னதாக வெற்றிமாறன் சார் சொன்ன ஒரு விஷயம் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. ‘படம் எடுப்பது மட்டும்தான் நம் வேலை; அதை அங்கீகரிப்பது, வெற்றியாக்குவது எதுவும் நம் கையில் இல்லை’. படங்களின் வெற்றியையும் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

12 வருடங்களுக்கு முன்பு நீங்கள் ‘நாளைய இயக்குநர் சீசன் 3’ நிகழ்ச்சியின் ‘டைட்டில் வின்னர்’ என்பது தெரியும். ஆனால், ‘குரங்கு பொம்மை’ உங்கள் கைவசமாகும் வரை உங்கள் சென்னை வாழ்க்கை எப்படியிருந்தது? - வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள ஒரு பெரிய ஊராட்சி பரதராமி. அதற்கு உள்பட்ட நல்லாகவனியூர் என்கிற சின்ன கிராமம்தான் நான் பிறந்து, வளர்ந்த ஊர். அப்பா என்னை அவரது கடின உழைப்பின் வழியாகப் படிக்க வைத்தார். அம்மா நான் சிறுவனாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.

சென்னை வந்து, ஆவடியில் உள்ள புனித பீட்டர்ஸ் கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்தேன். பிறகு பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். எதிலுமே டைட்டில் தரமாட்டார்கள். ஆனால், ஒவ்வொரு படத்திலிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டேன். ஒரு கட்டத்தில் படம் இயக்க வாய்ப்புத் தேடியபோது நிராகரிப்பைத் தவிர எதுவும் நடக்கவில்லை. அப்போதெல்லாம் நண்பர்கள்தான் பக்கபலமாக இருந்தார்கள்.

அவர்களில் ஊர் நண்பன் புருஷோத்தமன், சென்னையில் சசிகுமார், கல்கி, ஃபைசல் கான், மடோன் அஸ்வின், சயீப் முகமது, ஸ்ரீகணேஷ், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் யோகி எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பலர் உண்டு. சினிமாவால் ஈர்க்கப்பட்டு வந்ததால் கஷ்டங்களை விரும்பி ஏற்றுக்கொண்டேன். கடினமான நாள்கள்தான் என்னைக் கற்றுக்கொள்ளத் தூண்டின. அந்த நாள்களை நேசிக்கிறேன். பிறகு எனது வாழ்க்கையை மாற்றியமைத்தது ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிதான்.

அந்த நிகழ்ச்சியில் கவனம் பெற்ற உங்களது ‘புதிர்’ குறும்படத்திலும்கூட ‘நான் - லீனியர்’ திரைக்கதை யைத்தான் கையாண்டிருந்தீர்கள் இல்லையா? - ஆமாம்! அந்தக் குறும்படத்துக்குப் பயன்படுத்திய அதே ‘நான் லீனியர்’ பாணியைத்தான் ‘குரங்கு பொம்மை’க்கும் இப்போது ‘மகாராஜா’வுக்கும் ‘அப்ளை’ பண்ணினேன். ‘நாளைய இயக்குநர்’ தந்த அங்கீகாரத்துப் பிறகு என்னை வலைவீசித் தேடினார்கள்.

இம்முறை தேர்ந்தெடுக்கிற வாய்ப்பைக் காலம் எனக்குக் கொடுத்தது. இச்சமயத்தில் நடிகர் விதார்த்தை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். எனது குறும்படத்தைப் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து கூப்பிட்டு ‘நாம் படம் பண்ணலாம்’ என்று அழைத்தார். ’குரங்கு பொம்மை’ அப்படித்தான் உருவானது.

‘நான்-லீனியர்’ கதை சொல்லல் முறை மீது பிடிப்பை உருவாக்கியது எது? - அதிலிருக்கும் சுவாரஸ்யம்தான் காரணம். அதேநேரம் அதில் ஆபத்தும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் மீது ஜெல்லாகி கதையோட்டத்தில் ஒன்றியிருக்கும் நேரத்தில், அதிலிருந்து வெட்டிச் சென்று வேறொரு கதாபாத்திரத்தின் கதையைப் பார் என்று கூறும்போது அந்த விலகலைப் பார்வையாளர்கள் சகித்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தத் துண்டிப்பைச் சரிசெய்ய எல்லாக் கதைக் கருவாலும் முடியாது.

என்னளவில் தேர்ந்துகொள்ளும் கதைக் கருதான் தனது வெளிப்பாட்டு முறையைத் தேர்வு செய்யும். அதுவே ‘டிமாண்ட்’ பண்ணும். எல்லாக் கதைக் கருவையும் ‘நான் - லீனிய’ரில் சொல்லமுடியும் என்று முயன்றால் அது சரியாக வராது. ‘நான் - லீனியர் ‘திரைக்கதையாக்கம் ஒரு ‘டஃப்பான ஜாப்’தான். குரோசவாவின் ‘ரஷோமான்’, இனாரிட்டுவின் ‘அமோரெஸ் பெரோஸ்’ தொடங்கி டாரண்டினோ படங்கள் வரையில் எனது தலைமுறைக்குத் தாக்கம் தந்த இயக்குநர்கள் ஏராளம்.

விஜய் சேதுபதியை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினீர்களா? - இல்லை. அதேநேரம் ஒரு கதையையும் முதன்மைக் கதாபாத்திரத்தையும் எழுதும்போதே இதை இந்த நடிகர் ஏற்று நடித்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றும்; பலசமயம் அப்படித் தோன்றாமலும் போகலாம். எழுதிய பிறகு பொருத்தமான நடிகர்களை அணுகுவதே வழக்கம்.

அப்படி ஒரு நடிகர் அமையும்போது அவருக்காகச் சில விஷயங்களைக் கதையில் மாற்றுவோம் இல்லையா? அப்படி விஜய்சேதுபதி சாருக்காக இதில் மாற்றிய விஷயங்கள் பல. அதில் ஒன்று, பள்ளி முதல்வரின் அறையில் உள்ள ஸ்டீல் தூணைப் பிடித்து அசைப்பது, காவல் நிலையத்தில் சுவரில் பொருத்திய மர ஸ்டாண்டைப் பிடித்து அசைப்பது எல்லாம்.

சிங்கம்புலி அம்பலப்பட்டு நிற்கும் காட்சி எப்படிக் கருவானது? - நாயகன் கண்டுபிடித்துவிடுவான் என்கிற நினைப்பில் ‘ஆடியன்ஸ்’ இருக்கும்போது, குற்றம் செய்தவன் தானாகவே வந்து மாட்டிக்கொள்ளும் விதமாக ஒரு பொறியைப் போல் அந்தக் காட்சியை அமைக்க நினைத்தேன். நிஜ வாழ்க்கையில் பொய்யான மனிதர்கள் ஒரு கட்டத்தில் வெளிப்பட்டே தீருவார்கள் என்பதை அந்தக் காட்சி உணர்த்த வேண்டும் என்பதுதான் ‘மோட்டிவ்’.

அடுத்து? - ‘மகாராஜா’ வேலைகள் முடிந்த பிறகு அடுத்து ஒரு கதைக் கருவை விரித்து எழுதத் தொடங்கினேன். முதல் பாதி முடிந்துவிட்டது. அதன் இரண்டாம் பாதியை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது முடிந்துவிட்டால் அறிவிப்பை வெளியிட்டுவிட வேண்டியதுதான்.

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in