

‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்துக்காகச் சிறந்த சிறார் நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் நாக விஷால். அவர் தற்போது சற்று வளர்ந்து இளைஞராகிவிட்டார். அவர் ஒரு ஃபேண்டஸி கதாபாத்திரத்தில் தோன்ற, நாடக ஆளுமையான ‘காத்தாடி’ ராமமூர்த்தி, சுனைனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, விஷ்வத் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ராக்கெட் டிரைவர்’. ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீ ராம் அனந்த சங்கர். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ள நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
தமிழில் ‘ஃபேண்டஸி காமெடி’ படங்கள் எடுக்க பெரிதாக முயலப்படவில்லை. அந்த வகைமையில் முதல் படம் என்று முடிவு செய்ய என்ன காரணம்?
குற்றப் புலன் விசாரணை, சீரியல் கில்லர், சிறார் பாலியல் வன்கொடுமை, பழி வாங்கும் ஆக்ஷன் கதை என்பதை விட்டால், வேறு களமோ, கதைகளோ இல்லை என்பதைப்போலவே தமிழில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் படம் எனும்போது அதில் வன்முறை இல்லாமல், விரசம் இல்லாமல் எல்லா வயதினரையும் திரையரங்கு நோக்கி அழைத்து வரவேண்டும் என்கிற எண்ணம்தான் இந்த வகையைத் தேர்வு செய்யக் காரணம்.
இது கால இயந்திரத்தை அடிப் படையாகக் கொண்ட ஃபேண்டஸி கதையா? கதையில் முதன்மைக் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சவால் என்ன?
இதில் கால இயந்திரத்துக்குப் பதிலாக, ரசிகர்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒரு ‘கான்செப்ட்’டை உருவாக்கியிருக்கிறோம். அதனுடன் மனத்தடை இல்லாமல் அனைவரும் ‘கனெக்ட்’ ஆகிவிடுவார்கள். ஏனென்றால், அதை நமது தற்கால வாழ்க்கையிலிருந்து உருவாக்கியிருக் கிறோம். சரி என நினைத்துத் தான் செய்த தவறுகளால், வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்றாக ஆகிவிட்டதாகப் புலம்பும் ஒரு ஆட்டோ ஓட்டும் இளைஞன்தான் இக்கதையின் நாயகன். அன்றாடம் சந்திக்கும் பயணிகள், போக்குவரத்துக் காவலர் ஆகியோருடன் வெள்ளந்தியான ஓர் உலகத்தை கட்டமைத்துக்கொண்டு வாழ்கிறான்.
அப்படிப்பட்டனுக்கு ஒரு லட்சியக் கனவு உண்டு. உலகையே மாற்ற வேண்டும் என்பதுதான் அது. ஆனால், தனது கனவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு அவனால் எதையும் செய்ய முடியவில்லை. இச்சமயத்தில், தன்னுடைய ரோல் மாடல், வழிகாட்டி என்று எப்போதும் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடும் ஒரு பிரபலமான ஆளுமையை, அவருடைய 17 வயதில் காணும் ஓர் ஆச்சரியமான சம்பவம் நிகழ்கிறது. தனது ரோல் மாடலைத் தன்னைவிடக் குறைவான வயதில் சந்திக்கும்போது அவரை எப்படிக் கையாள்வது என்பதில் நிகழும் களேபரம் நொடிக்கு நொடி ரசிகர்களைச் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திச் சிந்திக்கவும் வைக்கும். எதிர்பாராதவிதமாக, அந்த விசித்திரச் சந்திப்புச் சம்பவம் விபரீதத்தில் முடிகிறது.
என்ன நடந்தது, அவன் பயணித்த உலகம் எப்படிப்பட்டது, அவனது பயணத்தில் பங்குபெற்றவர்கள் அவனுக்கு என்ன செய்தார்கள், அவனது கனவு எல்லாருக்குமான ஒன்றா எனப் பல விஷயங்களைத் தொட்டுச் செல்லும் சுவாரசியமான ஃபேண்டஸி நகைச்சுவை ஓட்டமே திரைக்கதை. அந்த ஆளுமையின் 17 வயது தோற்றத்தில் நாக விஷாலும் ஆட்டோ இளைஞனாக விஷ்வத்தும் நடித்திருக்கிறார்கள். அக்ஷய் பொல்லா, பிரசாந்த்.எஸ் ஆகிய இரண்டு சிறந்த கதாசிரியர்களுடன் இணைந்து திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.
‘காத்தாடி’ ராமமூர்த்தி, சுனைனா. ஜெகன் ஆகிய மூவருக்கும் படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது?
கதையின் முக்கிய நிகழ்வு உள்பட அவர்களுக்குப் போதிய முக்கியத்துவம் இருக்கிறது. ‘காத்தாடி’ ராமமூர்த்தி சாரைப் பொருத்தவரை மேடையில் அவரது தரம் அனைவரும் அறிந்தது. இந்தப் படத்தில் அவரது ‘டைமிங் சென்ஸ்’, அவரது ‘கவுன்ட்டர்’களின் தரம் ஆகியன பேசப்படும். சுனைனா எந்தக் கதாபாத்திரத்திலும் ஒரு தேவதைத் தன்மையைக் கொண்டுவந்துவிடுவார். இதில் ஆட்டோ இளைஞனுக்கும் அவருக்குமான இணக்கமும் நட்பும் ரசிகர்களை நெகிழச் செய்யும். ஜெகன் தான் பங்குபெறும் கதாபாத்திரத்தின் உள்ளடக்கத்தைத் தாமாகவே முன்வந்து, கதைக்குப் பங்கம் இல்லாமல் செதுக்குவார். அதை இந்தப் படத்துக்கு ஸ்பெஷலாகவே செய்திருக்கிறார்.
தொழில்நுட்பக் குழு?
ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை இனியவன் பாண்டியனும் கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலையும் கவனித்திருக்கிறார்கள். கௌஷிக் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்டில் படத்தை ரிலீஸ் செய்யத் தயாராகிவிட்டோம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in