

பல வருடங்களுக்கு முன் சிற்றிதழ் ஒன்றில், ‘கேரள மாநில அரசு நடத்திவரும் திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவை இந்தியாவின் ‘கான்’ பட விழா என்பேன்’ என்று வருணித்து எழுதினார் விஸ்வாமித்திரன் சிவகுமார். உலக அளவில் பல சர்வதேசப் படவிழாக்கள் புகழ்பெற்றிருக்கின்றன. ஆனால், எதுவொன்றும் ‘கான் பட விழா’ பெற்றுள்ள கீர்த்தியை எட்டவில்லை எனலாம்.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக ஹிட்லரும் முசோலினியும் திரைப்படக் கலையைப் பிரச்சாரச் சாதனமாக முன்னிறுத்தினர். 1938இல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் அரசியல்ரீதியாக அவர்கள் தலையீடும் செய்தனர். அப்போது, பிரெஞ்சு எழுத்தாளரும் ராஜதந்திரியுமான பிலிப் எர்லாங்கர் (Philippe Erlanger), ‘அதிகார மையத் தின் குறுக்கீடு அறவே இல்லாத ஒரு சர்வதேசப் பட விழாவை நடந்தும் சுயாதீன அமைப்பை, பிரெஞ்சு நாட்டின் அழகிய கடற்கரை நகரமான கானில் நிறுவினார்.
சினிமா என்பது ஒருபோதும் பிரச்சாரமாக இருக்க முடியாது என்பதை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும், சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் துலங்கும் மானுட வாழ்வைப் பேசும் அசலான படங்களைக் கண்டறிந்து கொண்டாட வேண்டும் ஆகிய நோக்கங்களை கானில் முன்னிறுத்தினார் பிலிப். 15 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து அதைச் சிறப்பாக நடத்தியும் காட்டினார்.
பிலிப் ஊன்றிய விதை: பிலிப் ஊன்றிய விதை, கான் சர்வதேசப் படவிழாவை இன்று உலக சினிமாவின் ஆலமரமாக வளர்த் தெடுத்துவிட்டது. கானில் ஒரு படம் அதிகாரபூர்வமாகத் திரையிடத் தேர்வாகிவிட்டாலே, அந்தப் படம் மற்ற முக்கிய சர்வதேசப் படவிழாக் களில் எவ்வித ஆட்சேபணையும் இன்றி அனுமதிக்கப்படுகிறது. கானின் தேர்வில் குறை இருக்க முடியாது என நம்பப்படுவதே இதற்குக் காரணம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் கானிலும் ‘லாபி’கள், தலைமை ஜூரியின் ஒருசார்பான முடிவு கள் போன்ற பல குறை பாடுகள் அரங்கேறவே செய்கின்றன.
அப்படி யிருந்தும் அங்கே அங்கீகாரமும் விருதும் பெறும் படங்கள், உலக சினிமா சந்தையில் கவனம் பெற்று வருவாய் ஈட்டுகின்றன. அத்துடன், கவனம் பெற்ற படத்தின் படைப்பாளி தொடர்ந்து முதலீடுகளைப் பெறவும் சிறந்த படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் கான் வலிமையைத் தந்துவிடுகிறது.
கானில் அங்கீகாரம் பெறும் படங்கள், சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பிற பெரிய படவிழாக்களில் பரிசு பெறும் என்றோ, ஆஸ்கர் போட்டியில் இடம்பெற்று விருது வரை முன்னேறும் என்றோ சொல்ல முடியாது. என்றாலும் ‘டாக்ஸி டிரைவர்’ ( Taxi Driver -1975), ‘அபோகலிப்ஸ் நவ்’ (Apocalypse Now -1979), ‘தி பியானோ’ (The Piano - 1993), ‘பல்ப் ஃபிக்ஷன்’ (Pulp Fiction - 1994) தொடங்கி 2019இல் வெளியான தென்கொரியப் படமான ‘பாராசைட்’ (Parasite) வரை காலந்தோறும் குறிப்பிடத்தக்கப் பல படங்கள் கானின் ‘தங்கப் பனை’ விருதை வென்ற பின்னர், ஆஸ்கர் விருதுகளை அள்ளியிருக்கின்றன.
ஆண்டுதோறும் வந்து குவியும் 2000 புதிய படங்களிலிருந்து 50 முழுநீளத் திரைப்படங்களையும் 15 குறும்படங்களையும் போட்டிப் பிரிவுகளுக்கு கான் தேர்வுக் குழு வடிகட்டித் தூக்குகிறது. அதில் கடந்த 12 மாதங்களுக்குள் தயாராகி, திரையரங்க வெளியீடு செய்யப்படாத, வேறு எந்தப் பட விழாவிலும் திரையிடப்படாத புதிய படங்களாக அவை இருக்க வேண்டும் என்பது கான் போட்டிப் பிரிவுகளுக்கான மிக முக்கியமான தகுதி.
மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்துடன் உலகின் எந்த நாட்டிலிருந்தும் யாரும் தங்களுடைய புத்தம் புதிய படத்தை கானின் தேர்வுக்கு அனுப்பலாம். 50 படங்களில் ஒன்றாகத் தேர்வானாலே அந்தப் படம் உலக சினிமா சந்தையில் கவனம் பெற்று மீட்சி பெற்றுவிடும் நிலையில், அங்கே விருது பெற்று விட்டால் அந்த நாடும் சினிமா ஆர்வலர்களும் அதைக் கொண்டாடித் தீர்க்கின்றனர்.
‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ - புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவரான பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ (All We Imagine as Light) என்கிற புதிய திரைப்படம், முக்கியப் போட்டிப் பிரிவுக்குத் தேர்வு பெற்று, இறுதியில் அதன் அசலான தன்மைக்காக ‘கிராண்ட் பிரி’ என்கிற நடுவர் குழுவின் விருதைப் பெற்றிருக்கிறது.
இது தங்கப் பனை விருதுக்குச் சற்றும் குறைந்ததல்ல. பணியின் நிமித்தம் மும்பைக்குக் குடிபெயர்ந்து வாழும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு செவிலியர் பெண்களின் வசிப்பிடப் பிரச்சினைதான் படத்தின் மையம். அது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பேசும் படமாக உருவாகியிருக்கிறது.
ஏற்கெனவே 2017இல் இந்தியாவி லிருந்து கானுக்குத் தேர்வான படங் களில் ஒன்றாக பாயல் கபாடியா இயக்கிய ‘ஆப்டர்நூன் கிளவுட்ஸ்’ இருந்தது. அதன் பின்னர் 2021இல் இவரது ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்கிற ஆவணப்படம் கானில் ‘தங்கக் கண்’ விருதைப் பெற்றது. இப்போது ‘கிராண்ட் பிரி’ விருது. தொடர்ந்து கபாடியா கானில் கவனம் பெற்றிருந்தாலும் “அறியப்படாத இயக்குநர்களுக்குக் கூட கானில் இடமிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் பாலிவுட்டின் மூத்த நட்சத்திரமான அனுபம் கெர்.
‘புதிய இயக்குநர்’ என்று சொல்லி இருக்கலாமே எதற்காக ‘Unknown filmmaker’ என்று சொல்ல வேண்டும் என நெட்டிசன்கள் அனுபம் கெர்ரை ஒரு காட்டுக் காட்டியிருக்கிறார்கள். எப்படியிருப்பினும் கானில் இந்தியத் திறமைகள் கவனம் பெறுவது, வணிக சினிமாவை மீறி அசலான திரைப்படங்களின் தொட்டிலாகவும் இந்தியா விளங்குகிறது என்பதையே 77வது கான் படவிழா நமக்குச் சொல்லியிருக்கிறது. புதிய இந்தியத் திறமைகளைக் கனவு ‘கான்’ணுங்கள் என்று பாயல் கபாடியா தூண்டியிருக்கிறார்.