

பல முன்னணி இதழ்களில் ‘போட்டோ ஜெர்னலிஸ்ட்’ ஆகப் பணிபுரிந்து பெயர் பெற்றவர் ‘வைட் ஆங்கிள் ரவிசங்கரன். பின்னர், சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக முன்னகர்ந்தார். அப்படத்தின் வெற்றிக்குப் பின் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ அவரைப் பாராட்டு மழையில் நனைத்தது.
தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடருக்கான ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார். அது பற்றி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
சுசி கணேசன் - மிஷ்கின் - வசந்த் சாய் - வசந்த பாலன் என்று ரசனையான இயக்குநர்களுடன் பயணித்து வருவது எதிர்பாராமல் அமைந்த வரிசையா? - எதிர்பாராமல் என்று சொல்ல மாட்டேன். இந்த வரிசையை நானே தேடி அமைத்துக்கொண்டேன். பிலிம் சுருள் காலத்தில் ஒளிப்பதிவு செய்யத் தொடங்கி, டிஜிட்டல் படப்பதிவுக்கு மாறி, தற்போது ஓடிடி யுகத்துக்கான தேவை, ரசனை இரண்டையும் பூர்த்தி செய்வது வரையில் என்னை நிரூபித்திருக்கிறேன். தொழில்நுட்பம் வளர வளர அதைத் தொடர்ந்து கற்றுக்கொள்வதும் நடந்துகொண்டே வருகிறது.
‘தலைமைச் செயலகம்’ தொடருக்காக வசந்த பாலனுடன் இணைந்த கதையைக் கூறுங்கள்.. ‘பிசாசு’ படம் பார்த்துவிட்டு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆந்தாலஜி படத்துக்குப் பணிபுரிய வாருங்கள்’ என்று வசந்த் அழைத்தார். “மூன்று வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களின் மூன்று கதைகள், அந்தக் கதைகள் வெளியான காலகட்டங்கள் வேறு.
கதையில் வரும் பெண்களின் நிலை ஒன்றுபோல் இருந்தாலும் காலகட்டம், வாழ்விடம் ஆகியவற்றை ஒளிப்பதிவில் கொண்டுவர வேண்டிய சவால் இருந்தது. அப்படம் ஜப்பான் தொடங்கி உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில், தமிழ்ப் படப் போட்டிப் பிரிவில் பங்குபெற்றுச் சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது.
அதற்கு நடுவர்களாக இயக்குநர்கள் வசந்தபாலன், சசி, எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் இருந்தார்கள். விழா அரங்கில் வசந்தபாலனைச் சந்தித்தபோது, ‘உங்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதா?’ என்றேன். அவர், “படம் பார்த்தேன்... உங்கள் ஒளிப்பதிவு என்னைக் கவர்ந்துவிட்டது.
இந்த முறை நாம் இணைந்து பணிபுரிவோம்” என்றார். சொன்னதுடன் நிற்கவில்லை. ஜீ5 தளத்துக்காக ராடான் நிறுவனம் ‘தலைமைச் செயலகம்’ தொடரைத் தயாரிக்கிறது என்று முடிவானதும் ராடான் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுபா வெங்கட்டிடம் ‘ரவிசங்கர்தான் எனது ஒளிப்பதிவாளர்’ என்று வசந்தபாலன் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சுபா, ‘நான் விகடனின் பத்திரிகையாளராக இணைந்தபோது அங்கே என்னுடைய முதல் அசைன்மெண்டுக்கு ரவிசங்கர் தான் போட்டோகிராபர். உங்கள் தொடருக்குச் சிறந்த தேர்வு” என்று உடனே ஓகே சொல்லிவிட்டார்.
இணையத் தொடர் எனும்போது ஜீ5 மாதிரியான நிறுவனங்களின் ‘கார்ப்பரேட் அணுகுமுறை’யை எப்படி எதிர்கொண்டீர்கள்? - முதலீடு தொடர்புடையது என்பதால் அவர்களுக் கென்று கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருக்கத்தானே செய்யும். இந்தத் தொடருக்குள் வந்தபிறகு நான் யார், எப்படிப்பட்ட ஒளிப்பதிவாளர் என்று, எனது ‘புரொஃபை’லை வாங்கிப் பார்த்தார்கள்.
நான் எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று 25 பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல் அனுப்பினார்கள். 2 மணி நேரம் ‘ஜூம் மீட்டிங்’ போட்டு ‘நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று டீமாக உட்கார்ந்து என்னிடம் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டார்கள்.
இந்த அனுபவம் எனக்குப் புதியதுதான். ஆனால், நான் பெரிய ஒளிப்பதிவாளர் என்று அவர்களிடம் கெத்துக் காட்டவில்லை. நிறுவனம் இயங்கும் முறையை மதித்து அதற்குள் என்னை உள்ளடக்கிக் கொண்டேன்., முதல் நாள் படப்பிடிப்பில் ஒளிப்பதிவு செய்த காட்சிகளைப் போட்டுக்காட்டியதும் அவர்கள் எனது திறமையைப் புரிந்துகொண்டு என் பணிகளில் முழுச் சுதந்திரம் கொடுத்தார்கள்.
இந்த இடத்தில் இயக்குநர் வசந்தபாலனைக் குறித்தும் சொல்ல வேண்டும். இயக்குநர் ஷங்கரிடம் அவர் பணிபுரிந்திருந்தாலும் ‘வெயில்’, ‘அங்காடித்தெரு’ தொடங்கி ‘அநீதி’ வரை, உணர்வுகளின் தொகுப்பாக, சுவாரஸ்யம் குறையாமல் கதைசொல்வதில் வல்லவர். இந்தக் கதைக்கு ‘லைட் அண்ட் ஷேட் முறையில் அவைலெபிள் லைட்’டில் படம் பிடிப்போம் என்று சொன்னேன். ‘கதைக்களத்துக்கும் அதுவே சரியாக இருக்கும்’ என்று சொல்லி என்னைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார். அவருடன் பணியாற்றிய 70 நாள்களை என்றைக்கும் மறக்க முடியாது.
பத்திரிகைத் துறையில் ஒளிப்படக் கலைஞராகப் பணிபுரிந்த அனுபவம் இந்தத் தொடரெங்கும் தெரிகிறது. இந்தத் தொடரின் கதையைக் கேட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்? - சுமார் 15 ஆண்டுகள் பத்திரிகை ஒளிப்படக் காரனாக கலைஞர் மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா போன்ற பெரிய பெரிய தலைவர்களை நெருங்கிப் படமெடுத்திருக்கிறேன். பல கவர் ஸ்டோரிகளுக் காகப் பல மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். இந்த அனுபவங்கள் அத்தனையும் ‘தலைமைச் செயலகம்’ கதைக்குப் பயன்படப்போகிறது என்று மனம் குதூகலித்தது.
ஏனென்றால் ‘தலைமைச் செயலக’த்தின் கதைக் களம், தமிழ்நாட்டின் அரசியல், டெல்லி அரசியல், நக்சல்கள் வாழ்க்கை, அதிகாரத்தை அடைவதற்கான போட்டியில் நடக்கும் உள்ளடிகள் என்று நான் நேரில் பார்த்து வியந்த பல தருணங்களின், தலைவர்களின் சாயலைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக ஜெயலலிதா சட்டசபையில் தாக்கப்பட்டு வெளியேறிய சம்பவத்தின்போது நேரில் படமெடுத்தவர்களில் நானும் ஒருவன்.
அதுபோல், எனது பல கடந்த கால அனுபவங்கள் இந்தத் தொடரில் காட்சிகளைச் சிறப்பாக உருவாக்கக் கைகொடுத்தன. இருக்கை நுனி அரசியல் த்ரில்லர் என்று சொல்வார்கள் அல்லவா? அதைத்தான் கொடுத்திருக்கிறார் வசந்தபாலன். அந்த த்ரில் அனுபவத்தை காட்சியில் கொண்டுவர அவரது கண்களாக மாறியிருக்கிறேன்.