பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? - மீட்டருக்குள் நிற்காத பாரதிதாசன் பாடல்!

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? - மீட்டருக்குள் நிற்காத பாரதிதாசன் பாடல்!
Updated on
2 min read

இந்தச் சர்ச்சை காலங் காலமாகத் தொடர்ந்து வருவதுதான். திரையிசை இருக்கும் வரை இந்தச் சர்ச்சையும் இருக்கவே செய்யும் என்பது என் கருத்து. பேசும்படக் காலம் சற்று மேம் பட்ட பிறகு, எம்.கே. தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் போன்று கர்னாடக சங்கீதம் அறிந்த மேடைக் கலைஞர்கள் திரையில் நடிகர்களாகப் பெயர் பெற முடிந்தது.

அவர்கள் சங்கீதக் கீர்த்தனைகளைப் போல் அமைத்தப் பாடல்களை, சொந்தக் குரலில் பாடி நடித்த நாள்கள் அவை. அதன் பின்னர், பி.ஏ.பெரியநாயகி, திருச்சி லோகநாதன் தொடங்கி பின்னணிப் பாடகர்கள், நடிகர்கள் பாட வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்தார்கள்.

பாடலாசிரியர்கள் வித்தியாசமான சந்த நயத்துடன், மரபுக் கவிதைகளாக எழுதித்தரும் வரிகளுக்கு, இசையமைப்பாளர் மெட்டமைக்க மெல்லிசைப் பாடல்கள் உருவாகின. பிறகு மெட்டுக்குப் பாட்டெழுதும் மாற்றத்துக்குப் பாடலாசிரியர்கள் தயாரானார்கள்.

அவர்களில் உடுமலை நாராயண கவி, பாவேந்தர் பாரதிதாசன் போன்ற வர்கள் அந்த மாற்றத்துக்கு உடன்பட விரும்பவில்லை. கண்ணதாசன், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கவி. கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிர மணியம் (எனது அப்பா), கு.சா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் இசை யமைப்பாளர்கள் அமைத்துக் கொடுக்கும் மெட்டுகளுக்குப் பாட் டெழுதுவதிலும் வல்லவர்களாயினர்.

இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், ஒரு பாடல் சிறப்பாக அமைய “பாட்டுக்குத்தான் மெட் டமைக்க வேண்டும்” என்கிற கருத்து டையவராக இருந்தார். இசைமேதை ஜி.இராமநாதன் அமைத்த மெட்டு களுக்கு அப்பா நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார்.

கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.எஸ் தயாரித்த ‘அம்பிகாபதி’ படத்தில், முதலில் பாவேந்தர் பாரதிதாசன் தான் கதை, வசனம், பாடல் எழுத ஒப்பந்தமாகி எழுதியும் விட்டார். ஆனால், திரைக்கதையில் இயக்குநர் பி.நீலகண்டனும் தயாரிப்பாளரும் மாற்றங்கள் கோர, அப்போது ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் கோபித்துக் கொண்டு விலகிவிட்டார் பாவேந்தர்.

அவர் எழுதிய திரைக்கதையை அடிப்படையாக வைத்தே அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன. 30 பாடல் கள் இடம்பெற்ற அந்தப் படத்தில் இசை யமைப்பாளர் ஜி.இராமநாதன் போட்ட மெட்டுகளுக்குப் பாட்டெழுதப் பல பாடலாசிரியர்கள் அழைக்கப்பட்டனர். பாடல் கம்போசிங் நடந்தபோது எனது அப்பா கு.மா.பாலசுப்ரமணியத்தையும் ஜி.ராமநாதன் அழைத்திருக்கிறார். அப்போது அவரிடம், படத்திலிருந்து விலகும்முன் ஏற்கெனவே பாரதிதாசன் மெட்டுக்கு எழுதாமல் எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த ஒரு காதல் பாடல்:

“கண்ட கனவும் இன்று பலித்ததே! - என்

காதல் செல்வம் கைக்கு வந்ததே! (நான்)

கொண்ட கொள்கை தான் பரணி பாடுதே! (உள்ளம்)

கொள்ளா ஆனந்தம் கூத்தாடுதே!”

என்கிற பல்லவியுடன் தொடங்கியது. அந்தப் பாடலுக்கு இசையமைக்க முனைந்த ஜி.இராமநாதன், தனது மெட்டின் தத்தக்கார மீட்டருக்குத் தகுந்தபடி பாவேந்தர் எழுதிய பாடலில் பல சொற்களை மாற்றி எழுதித் தரும்படி அப்பாவிடம் கேட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கையைக் கேட்ட மாத்திரத்தில் திடுக்கிட்ட கவிஞர்; “பாவேந்தர் எழுதியபாடலைத் தொட்டுக் கும்பிட வேண்டியவன் நான்! இதை மெட்டுக்காகத் தொட்டுத் திருத்த எனக்குத் தகுதி யில்லை” என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறார்.

பாட்டெழுத வந்து விரைவில் அப்பா வெளிவரு வதைப் பார்த்த தயாரிப்பு நிர்வாகி: “என்னய்யா பிழைக்கத் தெரியாத புலவராக இருக்கிறீர்கள்? மெட்டுக்குக் கச்சிதமாக வார்த்தைகள் பொருந்தா விட்டால் எவ்வளவு பெரிய கவிஞர் எழுதியதாக இருந்தாலும் அதை மாற்றுவதுதானே இசைக்கு அழகு! இதைப் புரிந்து வைத்திருக்கும் புலவர்தானே நீங்கள்.

இந்தப் பாட்டைத் திருத்திக் கொடுத்தால் குறைந்து போய் விடுவீரா என்ன? இதைச் செய்தால் இனிமேல் கம்பெனியின் எல்லாப் படங்களுக்கும் எழுகிற வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிட்டீரா?” என்று தந்திரமாகமடக்கியிருக்கிறார்.

அதற்கு அப்பா: “பாவேந்தர் என்று ஏன் அவரை அழைக்கிறோம்? பாடலுக்கும் கவிதைக்கும் அவர் வேந்தராக இருப்பதால் தானே! அவர் உள்ளத்திலிருந்து தெள்ளத்தெளிவாக வந்து விழுந்தசொற்களையும் வரிகளில் இயற்கையாகக் கூடி வந்திருக்கும் இசை நேர்த்தி யையும் சிதைத்து, அடித்துத் திருத்தி அதன்மூலம் நான் சம்பாதிப்பதைவிட, பட்டினி கிடந்து சாவது மேல்!” என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.

இதைத் தெரிந்துகொண்ட ஏ.எல்.எஸ்., அப்பாவின் மீது கோபம் கொள் ளாமல், அடுத்த நாளே “கு.மா.பாவை கூட்டி வந்து அவரையே புதிதாகக் காதல் பாடலை எழுதச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார். இப்போது புதிதாகப் போடப்பட்ட மெட்டுக்கு அப்பா எழுதிய பாடல்தான், டி.எம்.எஸ் - பி.பானுமதி இணைந்து பாடிய ‘மாசில்லா நிலவே நம்..

காதலை மகிழ்வோடு.. மாநிலம் கொண்டாடுதே…’ என்கிற ‘அம்பிகாபதி’ படப் பாடல். மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்கிற சண்டையில் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் - பாடலாசிரியர் இடையே மண்டைகள் உடைந்ததில்லை. என்றாலும் இருதரப்பின் ‘ஈகோ’வால் தமிழ்த் திரையிசை ரசிகர்கள் இழந்த இசையும் வரிகளும் ஏராளம். அதுவொரு நெடுங்கணக்கு.

- கட்டுரையாளர், முதுபெரும் பாடலாசிரியர் கு.மா.பாலசுப்ரமணியத்தின் மகன்.

(அடுத்த வாரம் எம்.எஸ்.வி. - கண்ணதாசன் மோதல்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in