

உலகப் புகழ்பெற்ற மாஸ்கோ பிரிக்ஸ் ( BRICS) சர்வதேசத் திரைப்பட விழா 2024 இல், மூன்று தமிழ்த் திரைப்படங்களும் ஒரு தமிழ் குறும்படமும் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அவை இயக்குநர் ராமின் ‘ஏழு மலை ஏழு கடல்’, எழுத்தாளர், இயக்குநர் குட்டி ரேவதியின் ‘கோடை இருள்’, உதயராஜ் இயக்கியிருக்கும் ‘காடு பூத்த வீடு’, சாய் பிரவின் இயக்கியிருக்கும் குறும்படமான ‘பிம்பம்’.
இவை அனைத்துமே ரஷ்யப் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் தொலைபேசி வழியாக நம்முடன் உரையாடினார் குட்டி ரேவதி. மருத்துவர், கவிஞர், பாடலாசிரியர், இதழாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமையாளரான அவர் மாஸ்கோவிலிருந்து இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
பெரும்பாலான இலக்கியவாதிகளுக்கு வணிக சினிமா மீது ஒவ்வாமை உண்டு. நீங்கள் ‘மரியான்’, ‘சிறகு’ படங்களின் மூலம் அதற்குள் நுழைந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி அமைந்தது? - திரைத்துறை ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டே இருக்கும் துறை. அதை நாளும் கற்றுக்கொள்வதற்கும் களமாடுவதற்கும் அத்துறையில் ஊக்கத்துடன் இயங்கும் கலைஞர்களுடன் நாம் இணைந்து பணிபுரிந்தாக வேண்டும். அப்படியிருக்கும்போது வணிக சினிமாவை ஒவ்வாமையுடன் நோக்க முடியாது.
‘மரியான்’ எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. அப்படத்தின் இயக்குநர் பரத்பாலா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் மார்க் கொனிங்ஸ், பார்வதி, தனுஷ் ஆகிய மிகப்பெரிய கலைஞர்களுடன் பணிபுரிந்தேன். அவையெல்லாம்தான் இன்றுவரை திரையுலகில் என்னை ‘அப்டேட்’டாக வைத்துக்கொள்வதற்கான எனது ‘ரிசோர்ஸ்’. டாடா நிறுவனம் நடத்திய ‘ஐபோன் பிலிம் மேக்கிங்’ போட்டியில் 30 கலைஞர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.
அதேபோல், ‘வணிக சினிமா - கலை சினிமா’ என்று வரும்போது, ஒரு படம் எப்படிப்பட்ட சினிமா என்பதைப் பார்வையாளர்களே முடிவு செய்கிறார்கள். எனக்குள் இருக்கும் கலை உணர்வு, கருப்பொருளை வெளிப்படுத்த ஒரு மீடியம் வேண்டும். அதற்கு இரண்டில் நான் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வேன்.
சிறிய முதலீட்டில், மனித குலத்துக்குத் தேவையான கருப்பொருள் கொண்ட சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று உலகம் முழுவதும் இயக்குநர்கள் இன்றுவரை நிறுவிக்கொண்டே யிருக்கிறார்கள். அந்தக் கடப்பாட்டுடந்தான் நான் இயக்கும் படங்களையும் அணுகுகிறேன், படைக்கிறேன்.
தற்போது இயக்கியிருக்கும் ‘கோடை இருள்’ ஒரு வெகுஜனத் திரைப்படமா? இருளர்கள் வாழ்வு பற்றி திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? - ‘கோடை இருள்’ இருளர்கள் வாழ்வியல் பற்றிய எளிய படைப்பு. அவர்களுடைய இனவரைவியலை ஆராய்ந்து ஆவணப்படுத்தும் முயற்சியில் நான், பேராசிரியர் கல்யாணி, அவருடைய நண்பர்கள் எனக் கடந்த 20 ஆண்டுகளாக அவர்களுடன் பழகி, பணிபுரிந்து வருகிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய ஒரு திரைப்படம் எடுக்கும் துணிவு எனக்கு இப்போதுதான் வந்தது.
இந்தக் கதையில் வரும் இருளர் இனப் பெண்ணின் வாழ்வு இந்தச் சமூகத்துக்குச் சொல்லப்பட வேண்டியது. இருளர்கள் மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறை குறித்து நாம் வெளிப்படுத்தினால் பொதுச் சமூகம் கொந்தளிக்கும். அடித்தட்டு சமூகம் குறித்து, இலக்கியத்திலும் சினிமாவில் நாம் உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். அந்தச் சமூகங் களில் எல்லாம் அடியில் அமுங்கிக்கிடக்கும் ஒரு சமூகம் இருளர்களுடையது.
அவர்கள் மீது நாம் இன்னமும் பாராமுகமாக இருக்கிறோம். அவர்கள் மீது நமது இளகிய அணுகுமுறை காலத்தின் தேவை என்பதை உணர்ந்ததால் இந்தப் படத்தை எடுத்தேன். பிரிக்ஸ் படவிழாவில் ‘கோடை இருள்’ தேர்வாகித் திரையிடப்பட்டதன் மூலம், இருளர் சமூகம் பற்றி உலக அரங்கில் எடுத்துச் சொல்லும் பெரும் வாய்ப்பாகப் பார்க்கிறேன்.
மாஸ்கோ பார்வையாளர்கள் இந்தப் படத்துக்குக் கொடுத்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் குட்டி ரேவதிக்கோ, பீம் மூவீஸ்மூலம் இதைத் தயாரித்திருக்கும் ஆர்.ஆர்.சீனிவாசனுக்கோ கிடைத்தவை அல்ல; இருளர் இன மக்களுக்குக் கிடைத்தவை.
‘கோடை இருள்’ படத்தில் தோன்றும் கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் இருளர் பழங்குடி மக்களா? படத்தின் ‘பிகைண்ட் த சீன்ஸ்’ பற்றிக் கூறுங்கள்.. மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஏழு நாள்கள் படப்பிடிப்பின் மூலம் படத்தை முடித்தோம். படக்குழுவில் மொத்தம் 10 பேர்தான். ஒருவேளை படக்குழு பெரிதாக இருந்திருந்தால் என்னால் இவ்வளவு கவனமாகப் படம் பண்ணியிருக்க முடியுமா என்று இப்போது தோன்றுகிறது..
முதன்மைக் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ருக்மணி என்கிற நாடகக் கலைஞரை அறிமுகப்படுத்துகிறேன். இரண்டாவது முதன்மை கதாபாத்திரமாக இளமாறனை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன். அவர் என்னிடம் துணை இயக்குநராகப் பணிபுரிய வந்தவர். படத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய், இந்த இருவரையும் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள் இருளர் மக்கள்.