

வீ
ட்டுக்கொரு கவிஞர் உருவாகி கவிதை வளர்த்த காலம் ஒன்று இருந்தது. தற்போது வீட்டுக்கொரு சினிமா விமர்சகர் தோன்றிவிட்டார். இணையம் வழங்கிய ஜனநாயகம்! மணிரத்னம் தொடங்கி கிறிஸ்டோபர் நோலன்வரை யாருடைய படங்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. தயாரிப்பில் இருக்கும்போது “தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கதை” என்று வாய்கிழிய சவுண்ட் எஃபெக்ட் கொடுப்பவர்கள் சறுக்கி விழும்போது ‘முறைவாசல்’ செய்வதென்றால் இவர்களுக்கு ஜிகிர்தண்டா குடிக்கிற சந்தோஷம்.
“அரைத்த மாவு, புதிய பாட்டில்… பழைய ஒயின், காயலாங்கடைச் சரக்கு” எனச் சலிப்புடன் வறுத்தெடுப்பார்கள். ஒரே மாதிரிக் கதைகள், மீண்டும் மீண்டும் பார்த்த கதைகள் என்று நம் விமர்சகர்கள் இன்று சலித்துக்கொள்வது போல சுமார் 200 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் தேசத்தில் இளம் வாசகர் ஒருவர் சலித்துக்கொண்டார். அவரது பெயர் ஜார்ஜஸ் போல்டி (Georges Polti). மக்களின் தலை சிறந்த பொழுதுபோக்காக அப்போது நாடகக் கலை இருந்தது.
நிகழ்த்தும் விதம் அரங்க அமைப்பு ஆகியவற்றில் சோதனை முயற்சிகள் அங்கே உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆனால் ‘நிகழ்த்தப்படும் நாடகங்களின் கதைகள், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவற்றின் நோக்கங்கள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், அதையொட்டிய செயல்பாடுகள், முடிவுகள் ஆகியவற்றில் பெரிய வேறுபாடு இல்லையே’ என்று சலித்துக்கொண்டார் போல்டி.
ஒன்று காப்பாற்றுவது அல்லது பழிவாங்குவது, சதி செய்வது அதை முறியடிப்பது, காதலிப்பது, அதனால் குற்றங்கள் விளைவது எனக் காணும் நாடகங்களின் கதைகளில் மட்டும்தான் இந்த ஒற்றுமையா; இல்லை நாவல்களிலும் இதே நிலைதானா என ஆராய்ச்சியில் இறங்கினார். நூலகத்தில் பல ஆண்டுகள் கிடையாய்க் கிடந்தார். அதுவரை பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நாடகங்கள், நாவல்கள், கவிதை வடிவில் இயற்றப்பட்ட செவ்வியல் காவியங்கள் என எதையும் விட்டுவைக்காமல் படித்துப் படித்துக் குறித்துக்கொண்டார்.
அடுத்து கிரேக்கம், லத்தீன் மொழிகளில் வெளியான படைப்புகளையும் ஒன்றுவிடாமல் படித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். ‘இதுவரை இந்த உலகத்தில் எழுதப்பட்ட, இனி எழுதப்படப்போகிற எல்லாக் கதைகளும் வெறும் 36 சூழ்நிலைகளுக்குள் அடங்கிவிடும். இந்த 36 சூழ்நிலைகளைத் தாண்டி எந்தக் கொம்பனாலும் கதை எழுதிவிட முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறினார்.
தாம் படித்தறிந்த ஒவ்வொரு கதைச் சூழ்நிலையையும் ஒற்றை வரியில் (One liner) எழுதி, பின் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அத்தியாயமாக விவரித்து ‘முப்பத்தாறு நாடகச் சூழ்நிலைகள்’ (Thirty Six Dramatic Situations) என்ற புத்தகத்தை 1895-ல் எழுதி வெளியிட்டபோது போல்டிக்கு 28 வயது. போல்டியின் திட்டவட்டமான இந்த முடிவைப் பல மேதாவிகள் எதிர்த்தார்கள். ‘எனது கதை உனது வலையில் சிக்காது’ என்று விவாதித்தார்கள், பிறகு போல்டி அடுக்கிய உதாரணங்களைக் கண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். போல்டியின் புத்தகம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
நாடகம் தன் செல்வாக்கை இழந்து, திரைப்படக் கலை பிறந்து செழித்த பின்பும் போல்டியின் கணக்குத் தப்பவில்லை. இன்றளவும் ஜார்ஜஸ் போல்டி பட்டியலிட்ட 36 ஒன்லைனர்களை மீறி எந்தத் திரைப்படக் கதையும் எழுதப்படவில்லை. அவரது புத்தகம் உலகம் முழுவதும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கான வேதங்களில் ஒன்றாகப் புகழடைந்துவிட்டது.
இணையத்தில் இலவச ஈ-புத்தகமாகக் கிடைக்கும் போல்ட்டியின் புத்தகத்தைத் தரவிறக்கி, 36 கதைச் சூழ்நிலைகளைப் படித்துப் பாருங்கள். கூடவே சமீபத்தில் பார்த்த உங்கள் அபிமான ஹீரோ நடித்த மாஸ் மசாலா திரைப்படம் தொடங்கி உங்களைக் கவர்ந்துவிட்ட உலக சினிமா வரை எந்த மொழிப் படமாக இருந்தாலும் போல்டியின் 36 சூழ்நிலைகளுக்குள் அவற்றின் ‘ஒன்லைன்’ அடங்குகிறதா என்று பட்டியலிட்டு, puzzle பொருத்தி விளையாடுவதுபோல கதை விளையாட்டை விளையாடிப் பாருங்கள்.
ஆனால், கதை எழுதுவதை விளையாட்டுபோல செய்துவிட முடியாது. அது ஓர் அசலான சாகசம்! அதற்கான அடிப்படைத் தேவை, சொந்த அல்லது சக மனித வாழ்வில் நிகழும் அனுபவம் மற்றும் சம்பவங்களில் இருந்து பெறப்படும் ஒரு தாக்கம். இதைச் சமூக, கலாச்சார, இனரீதியான நிகழ்வுகளில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தாக்கம் தள்ளுபடி விலையில் விற்கப்படும் ஒரு நல்ல புத்தகத்திலிருந்துகூடக் கிடைக்கலாம். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒருவிதத்தில் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தாக்கம் உருவாக்கும் சம்பவங்களைக் கண்டு, இது நமது ‘கப் ஆஃப் காபி’ அல்ல என்று நினைப்பவர்கள், அவற்றை எளிதாய் கடந்துசென்றுவிடுகிறார்கள். ஆனால் ‘அவற்றுக்குள்ளேதான் எனக்குமான வாழ்க்கையும் இருக்கிறது, அது என்னைத் தொந்தரவு செய்கிறது. அதை நான் வெளிப்படுத்த வேண்டும்’ என்று உணர்பவர் அதைத் தனக்குப் பிடித்த கலை ஊடகத்தின் மூலம் படைப்பாக வடிக்கத் தொடங்குகிறார்.
அழகியலும் அரசியலும் வெளிப்படும் கவிதை, பாடல், இசை, ஓவியம், சிற்பம், நடனம், நாடகம் எனப் பல வடிவங்களில் வெளிப்படும் இந்தத் தாக்கம், வெளிப்படையான கருத்துகளைத் தாங்கி வரும்போது கட்டுரையாக வடிவெடுக்கிறது. ஆனால் கதையைப் புனைபவன் தாம் பெற்றுக்கொண்ட தாக்கத்திலிருந்து கதாபாத்திரங்களை உருவாக்குகிறான். அவை எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சம்பவங்களில், மனித வாழ்வின் முடிவு தெரியாத, எதிர்பாராத தன்மையைத் திருப்பங்களாகப் புனைந்து கதையாக வடிக்கிறான்.
உலகம் முழுவதும் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும், மனித வாழ்வு சோதனை முயற்சியின் களமாக இருக்கும் இந்தப் புதிர்த் தன்மையைப் புனைவின் முக்கிய அம்சமாக்கி சுவைபடவும் கட்டுக்கோப்புடனும் கதை சொல்ல, பல நூற்றாண்டுகளாகவே முயன்றுவந்திருக்கிறார்கள்.
இன்று புகழ்பெற்ற புனைவெழுத்தாளர்களாக இருக்கும் பலரும் தங்களுக்குப் பிடித்தமான அல்லது கதைக் கரு கோரும் ஏதாவதொரு கதை உத்தியைக் கையாண்டு தங்கள் நாவலையோ சிறுகதையையோ படைக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுத்தாளன், சம்பவங்களைக் காட்சிகளாக எழுத வேண்டிய தொழில்நுட்பத்தைக் கையாள்கிறான். அவனது எழுத்துமுறையில் காலமும் (Time) நேரமும் (Space) ஊடாடுகின்றன. ஒரு மாலுமியைப் போல அவன் அவற்றை ஆளாவிட்டால் அவனது பயணம் ஆளில்லாத் தீவில் தரைதட்டி நிற்கும் படகுபோல் ஆகிவிடும். காலமும் நேரமும் திரைக்கதையில் ஊடாடும் விதத்தை அடுத்த வகுப்பில் பார்ப்போம்.
(இடைவேளை)
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in