

வலிந்து நடிக்காமல், அதேநேரம் கதாபாத்திரமாக உணர வைத்துவிடும் வெளிப்பாட்டு முறையாகத் திரை நடிப்பு இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அறிமுக நடிகர்கள்கூட இன்று அளவாகவும் இயல்பாகவும் நடிப்பதன் பின்னணியில், அவர்கள் நவீன நாடகத் தளத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சியே காரணமாக இருக்கிறது. கோடம்பாக்கத்தில் பல பிரபலமான அரங்க நடிப்பாசிரியர்கள் இருந்தாலும், சோழன் வாலறிவன் தனித்துவமானவர். பயிற்சிக் கட்டணம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, உண்மையான ஆர்வத்துடன் வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சமூக அரசியலைப் பயிற்றுவிப்பதில் தொடங்கி, கேமராவுக்கு முன்னால் தற்சார்பு மிக்கவர் களாக மாற்றுவது வரையிலான முழுமையான நடிப்புப் பயிற்சியைத் தனது ‘அரங்கம்’ (Actor's Zone) பயிற்சிப் பட்டறையின் வழியாக அளித்து வருபவர் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையிலிருந்து தான் உங்களது பயணமும் தொடங்குகிறது இல்லையா?
ஆமாம்! ந.முத்துசாமியின் நேரடி மாணவனாக இருந்து பயின்றேன். அங்கே, அலுவல கத்தைக் கூட்டிப் பெருக்குவது, தரையைச் சுத்தம் செய்வது, துணி துவைப்பது, சுவையாகச் சமைப்பது என்பதுதான் தொடக்கப் பயிற்சியே.. 5 முழுமையான ஆண்டுகளை அங்கேயே தங்கிப் பயிற்சி பெற்றேன். நடிப்புப் பயிற்சியுடன் நாடகப் பிரதிகளை அணுகுவது, நாடகங்களை எழுதுவது, குழுவாக ஒரு நாடகத்தைப் பயிற்றுவிப்பது, நாடக இயக்கம், தயாரிப்பு எனப் பல நிலைகளில் பயிற்சியும் அனுபவமும் கிடைத்தன. ந.முத்துசாமியின் பரிந்துரையில் பல பள்ளிகள், கல்லூரிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்காகப் பல பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறேன். இப்போது ‘அரங்கம்’ (Actor's Zone) என்பதுதான் என் அடையாளம்.
நவீன நாடகம் என்பதே இன்று திரையுலகத்துக்கு நடிகர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு களம் என்பதுபோல் ஆகிவிட்டதல்லவா? தமிழ்த் திரையுலகில் நீங்கள் யாருக்கெல்லாம் பயிற்சி அளித்தீர்கள்?
வங்காளிகள், மராத்திகளுக்குச் சற்று உயர்ந்த தரத்தில்தான் இன்றைக்குத் தமிழ் நவீன நாடகத் துறை இருக் கிறது. அதில் சிறார்களுக்கான நவீன நாடகத் துறை இன்னும் சிறப்பாக இயங்கி வருகிறது. நவீன நாடக முயற்சிகளுக்குப் பார்வையாளர் களைத் தேடிக் கண்டடைவது, இந்தத் திறன்பேசி யுகத்தில் பெரிய சவாலாக இருக்கிறது. ஒரு மாற்றாக மாநில அரசு நடத்தும் கலாச்சாரத் திருவிழாக்களில் நவீன நாடகங் களுக்கும் இடமளிக்கும் போது, அந்த வடிவம் இன்னும் அதிகப் பார்வையாளர்களைச் சென்றடைய நிறையவே வாய்ப்புள்ளது. நவீன நாடகங் களை ஒளிப்பதிவு செய்து யூடியூபில் போடுவது அபத்தமானது. அவற்றின் வழி, நிகழ்த்து கலையின் முக்கிய அம்சமாக இருக்கக்கூடிய அரங்க உத்திகளை, நடிகர் களின் வெளிப்பாட்டு முயற்சிகளைப் பார்வை அனுபவமாகப் பார்வையாளர்கள் பெற முடியாது. பார்வையாளர்களுக்காக ஏங்கிக் கிடப்பதைவிட, சிறந்த நடிகர்களை இன்று திரையுலகத்துக்குக் கொடுக்கும் வேலையைத் தொழில்முறையில் செய்துகொண்டிருக்கிறது இன்றைய நவீனத் தமிழ் நாடகத் துறை. அதற்கு நானும் ஓர் எடுத்துக்காட்டு. தேசிய நாடகப் பள்ளிகள், கூத்துப்பட்டறை போன்ற தனிமனித ஆளுமைகளால் தொடங்கப்பட்ட அரசுசாரா நாடக அறக்கட்டளைகளால்தாம் இன்றைக்கு இந்தியா வின் பல மொழி சினிமாக்களுக்கும் சிறந்த நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். நான் இன்று பிரபலமாக இருக்கும் பல பெரிய நடிகர்களுக்கு அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்துக்காகப் பயிற்சி அளித்திருக்கிறேன். இவ்வாறு பயிற்சி அளிக்கும் பணியில் இணைகோடாக, உதவி, துணை இயக்குநராகப் பல படங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.
பொதுவாக ‘அரங்க’ முறையில் நீங்கள் அளிக்கும் அடிப்படைப் பயிற்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?
உடல், குரல், மனம் இம்மூன்றுதான் நடிகனின் பிரதானக் கருவிகள். உடலுக்கும் குரலுக்கும் அடிப்படையான சில பயிற்சிகளைத் தந்தாலும் அரங்க நடிப்பு முறை நடிகனின் மனதில்தான் பிரதானமாக வேலை செய்கிறது. ‘உன் பார்வையே உன் விதி’ என்று கவிஞர் சுகுமாரனின் ஒரு கவிதை உண்டு. ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்று திருமூலர் பாடியிருக்கிறார். நடிகன் கதாபாத்திரத்தை அறிந்து, புரிந்து உணர்ந்து தன் வழியாக வெளிப்படுத்த வேண்டும் இல்லையா? இன்னொரு கதாபாத்திரத்தை அறிவதற்கு முன் தன்னை அறிந்திருக்க வேண்டும். தன்னையே அறிய முடியாத நடிகன், தான் ஏற்கும் கதாபாத்திரத்தை மட்டும் எப்படி அறிய முடியும்? அதனால்தான் அரங்கம் நடிகனின் மனதில் வேலை செய்கிறது என்று சொல்கிறேன். கூடுதலாக, தன்னை அறிதல் என்பது நடிகன் தான் வாழும் சமூகம், பண்பாடு, அரசியல், கலாச்சாரம், தத்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை அறிவது. இது அரங்க நடிப்புப் பயிற்சியின் அடிப்படையான நிலை எனலாம்.
அப்படியானால் திரைக்கான நடிப்புக்கு? நீங்கள் பயிற்சியளித்த பிரபலமான நடிகர்களைப் பற்றியும் கூறுங்களேன்..
நடிகன் எப்போதும் பிரக்ஞையோடு (consciousness) இருக்க வேண்டும். சுயம் என்பது அதுதானே. முழு விழிப்படைந்த அறிவுணர்வோடு (Fully awakened awareness) இயங்கும் நடிகன் திரைக்கதையின் ஆன்மாவைச் சாராம்சத்தோடு புரிந்துகொண்டு, கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவின் சரடு அறுபடாமல் தனது கதாபாத்திரத்தை உயிர்ப்போடு உருவாக்கி லென்ஸுக்கு முன் படைக்க முடியும்.
நாடகத்திலோ நடிகன்தான் பிரதானம். சினிமாவில் 25 கிராஃப்ட்டுகளில் நடிப்பும் ஒன்று. சினிமாவில் மாஸ்டர் ஷாட் முடிந்ததும் நடிகன் தனியனாகி விடுகிறான். மேடையில் அப்படியல்ல. தொழில்நுட்ப ரீதியாகவே நடிகன் பெரும்பாலும் லென்ஸைத் தனியாக எதிர்கொள்ள வேண்டும். வணிக சினிமாவில் பிரபலமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர் எல்லாரும் முன் திட்டமிடல் பணிகளில் சேர்ந்து வேலை செய்வது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. அதனால், நாயக நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர்களை வைத்துப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் பயிற்சி கொடுத்த முதல் படம் ‘நான்’. அதில் விஜய் ஆண்டனிக்கும் ‘பீட்சா’வில் விஜய் சேதுபதிக்கும் ‘பொறியாளன்’ படத்துக்காக ஹரீஷ் கல்யாணுக்கும் என்று பல முன்னணி நடிகர்களுக்காக வேலை செய்திருக்கிறேன். பெரிய நடிகர்களுக்குக் கொடுக்கும் அதே பயிற்சி யைத்தான் புதியவர்களுக்கும் கொடுக்கிறேன்.
‘பத்து உளவியல் உத்திகள், பத்து மாதங்கள், பத்து வகுப்புகள்’ என்று ஒரு பயிற்சியை நடத்துகிறீர்களே.. அது பற்றி..
தொடர்ச்சியான நடிப்புப் பயிற்சியில் ஈடுபட நேரமில்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயிற்சி அது. டிஸ்கவரியுடன் இணைந்து மிகக் குறைந்த கட்டணத்தில் அதை நடத்துகிறோம். நவீன நடிப்புக் கோட்பாடுகள் எல்லாமே 19ஆம் நூற்றாண்டின் இணையற்ற ரஷ்ய நாடக ஆளுமையான ஸ்தானிஸ்லாவ்ஸ்கியிடமிருந்து தொடங்குகின்றன. இன்றைய சூழலில் அவரை மறுத்தும் ஏற்றும் பல நடிப்புமுறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆச்சர்யகரமாக ஸ்தானிஸ்லாவ்ஸ்கி ‘மெத்தட் ஆக்டிங்’ என்கிற இன்றைய உலகப் புகழ்பெற்ற உத்தியை அவர் கண்டறிந்து பயிற்றுவித்தபோது, அதைச் செழுமைப்படுத்த நம்மிடமிருந்து சில விஷயங் களை அவர் பெற்றிருக்கிறார். நம்மூர் ராம சரகா எழுதிய ‘மூச்சுக் கலை’ ஸ்தானிஸ்லாவ்ஸ்கிக்கு உதவியிருக்கிறது. கதாபாத்திரத்தை அதன் உண்மைத் தன்மையோடு வெளிப்படுத்துவதற்கு ஸ்தானிஸ்லாவ்ஸ்கி பத்து உளவியல் உத்திகளைத் தன் நடிகர் மீது கையாண்டு, அதில் வெற்றியும் கண்டு, அதை பயிற்றுவிக்க வாழ்நாள் இறுதிவரை வேலை செய்திருக்கிறார். அந்தப் பத்து உளவியல் உத்திகளை இந்தப் பத்து மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாள் பயிற்சியாக ‘அரங்கம்’ வழி மிக எளிமையாகப் பயிற்றுவிக்கிறேன்.