

மலையாளப் படவுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ். அவரைக் கேரளத்துக்குத் தேடிப்போனார் மதுரையைச் சேர்ந்த மணி வர்மா என்கிற தமிழ் இளைஞர். தனது முதல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து தரும்படி மணி வர்மா கேட்க, கதையைக் கேட்ட ரத்தீஷ், ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டதுடன், ‘தயாரிப்பில் நானும் இணைந்துகொள்கிறேன்; ஒளிப்பதிவையும் செய்து தருகிறேன்’ என்றார். அந்தப் படம், தமன் குமார் நாயகனாக நடித்துள்ள ‘ஒரு நொடி’. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து..
என்ன கதை, எங்கே நடக்கிறது? - மதுரையின் பின்னணியில் கதை நடக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களைக் கோத்து புலனாய்வு த்ரில்லர் கதையாக எழுதினேன். சாமானிய மனிதர் ஒருவருக்கு நொடியில் நடக்கும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதை. இன்னும் சற்று விரித்துச் சொல்வதென்றால்; 55 வயது சேகரன் என்பவர் காணாமல் போகிறார்.
அவரது மனைவி சகுந்தலா காவல் நிலையத்துக்கு வந்து ‘என் கணவரைக் காணவில்லை’ என்று புகார் அளிக்கிறார். சேகரன் என்ன ஆனார் என்பதைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் இளம் காவல் அதிகாரி, தனது விசாரணையின் கண்ணிகளை எப்படி விரிக்கிறார், அதில் சிக்கியவர்கள் யார்? அவர்களின் வழியாகத் தெரியவந்த உண்மைகள் என்ன என்று படம் நகரும்.
வழக்கமான ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்ல’ராக இல்லாமல் படம் முடிந்து செல்லும்போது ரசிகர்கள் தங்களுடன் கொண்டுசெல்ல நிறைய, நிறைவான விஷயங்கள் இருக்கும்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் காதும் காதும் வைத்த மாதிரி கைப்பற்றினார் என்று செய்திகள் வெளியானதே? - ஆமாம்! படத்தின் ‘மிக்ஸிங்’ பணிகள் முடிந்து ‘டப்பிங்’ செய்துகொண்டிருந்தேன். அப்போது கிளைமாக்ஸில் வரும் ஒரு சிறு கதாபாத்திரத்துக்குக் கனிவும் தன்னம்பிக்கையும் கலந்த ஆண் குரல் தேவைப்பட்டது. கேபிள் சங்கர் நினைவுக்கு வந்தார். டப்பிங் பேச அழைத்ததும் வந்த அவர், சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, ‘யார் இந்த ஒளிப்பதிவாளர்? இப்படிப் பின்னியிருக்கிறாரே?’ என்றார்.
‘மலையாள சினிமாவிலிருந்து கே.ஜி.ரத்தீஷ்’ என்றேன். ‘அவருக்குத் தமிழ் படத்தில் என்ன வேலை?’ என்றார். அவர் ஒளிப்பதிவு செய்த படங்களின் பட்டியலைக் கூறி, இந்தக் கதைக்கு அவர் ஒளிப்பதிவு செய்தால் பலமாக இருக்கும் என்று அவரை அழைத்தேன். கதைக் கேட்டபின் ‘படத்தின் தயாரிப்பாளர்’களில் ஒருவராகவும் அவர் மாறிவிட்டார் என்றேன்.
உடனே அவர், ‘நாளை ஒரே ஒரு காட்சி மட்டும் போட்டுக் காட்டுங்கள்; நான் தனஞ்ஜெயன் சாரை அழைத்து வருகிறேன்’ என்றார். அடுத்த நாள் அவர்கள் இருவருக்கு மட்டும் முதல் காட்சியைத் திரையிட்டேன். படத்தைப் பார்த்த தனஞ்ஜெயன் சார்.. ‘வேறு யாருக்கும் நீங்கள் ஒரு ஷோ கூடப் போடக் கூடாது.
இந்தப் படத்தை நான் வாங்கி வெளியிடுகிறேன்; நாளை காலை அலுவலகத்துக்குத் தயாரிப்பாளருடன் வந்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள்” என்று அழைத்தார். அப்படித்தான் இந்தப் படத்தை அவர் அடுத்த நாளே கைப்பற்றினார்.
படக்குழு குறித்துக் கொஞ்சம்.. மதுரையைச் சேர்ந்த அழகரும் ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷும் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். நாயகனாக நடித்துள்ள தமன் குமாருக்கு இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். படத்தில் ஹீரோயின் கிடையாது. இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்.
நடிகர்களில் எம்.எஸ்.பாஸ்கர், ரஞ்சனி, வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, குரு சூர்யா ஆகியோர் மிக முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும் பேசப்படுவார்கள். திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது.