

நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட எம்.எஸ்.பாஸ்கரை, முக்கியக் கதாபாத்திரங்களுக்குத் தடம் மாற்றிய படம் ‘மொழி’. அதன்பிறகு ‘8 தோட்டாக்கள்’ அவரது நடிப்பின் திறமைக்குச் சான்று பகர்ந்தது. சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ வரை, கதையை நகர்த்திச் செல்லும் இணை நாயகன் கதாபாத்திரங்களில் திறமையைக் காட்டி வருகிறார். அவரை முதல் முறையாக ‘அக்கரன்’ படத்தின் மூலம் கதையின் நாயகன் ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கே. பிரசாத். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
எம்.எஸ்.பாஸ்கரை முதன்மைக் கதா பாத்திரமாக வைத்து ஒரு கதையை எழுத வேண்டும் என ஏன் நினைத்தீர்கள்? - அவரது நடிப்புத் திறமைதான் ஒரே காரணம். ‘அஞ்சாதே’ படத்தில் நாயகன் நரேனைக் காலணி கொண்டு அடித்துவிட்டு வரும் காட்சியில் ஒரு தந்தையின் கோபம் கலந்த வலியை முகத்தில் அவ்வளவு கச்சிதமாகக் காட்டியிருப்பார்.
அதையெல்லாம் விடுங்கள்! 1994இல் வெளியாகி தோல்வி அடைந்த ஹாலிவுட் கதைப் படம் ‘த ஷாஷங்க் ரிடெம்ப்ஷன்’. பிறகு 10 ஆண்டுகள் கழித்து 2004இல் இப்படம் டிவியில் திரும்பத் திரும்ப உலகம் முழுவதும் காட்டப்பட்டு ரசிகர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெற்றது.
அதைத் தமிழில் டப் செய்தபோது, அப்படத்தின் கதாநாயகன் டிம் ராபின்சனுக்கு எம்.எஸ்.பாஸ்கர்தான் குரல் கொடுத்தார். அந்தப் படத்துக்கு அவரது குரல்தான் உயிர் கொடுத்தது. இன்றைக்கும் ஆண்டுக்கு ஐந்து முறையாவது அப்படத்தின் தமிழ் டப்பிங்கை ஒளிபரப்புகிறார்கள்.
ஒரு நடிகனுக்கு அங்க அசைவுகள், முக பாவனைகள் ஆகியவற்றுடன் குரலின் வழியாக வெளிப்படுத்தும் நடிப்பும் கச்சிதமாகச் சேரும்போதுதான் அவன் மகா நடிகன் ஆகிறான்.
அப்படியொரு மகா நடிகர்தான் எங்கள் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். அவரை ஒரு துப்பறியும் கிரைம் சஸ்பென்ஸ் படத்தில் கதாநாயகனாகக் காட்ட வேண்டும்; அது அவருக் கான நடிப்பின் வேட்டைக்காடாக இருக்க வேண்டும் என்று நினைத்தே இக்கதையை எழுதினேன்.
என்ன கதை, எம்.எஸ்.பாஸ்கர் ஏற்றுள்ள கதாபாத்திரம் என்ன? - மதுரையில் கதை நடக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் ஒரு சாமானிய விவசாயி. அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறார். இன்னொருவர் மருத்துவராகும் லட்சியத்துடன் ‘நீட்’ பயிற்சி மையத்துக்குச் சென்று வருகிறார். தன்னைச் சுற்றியுள்ள உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானது எனக் கருதிக்கொண்டிருந்த அந்தக் கிராமத்து அப்பாவுக்கு ஆற்றமுடியாத அதிர்ச்சி.
அவருடைய மகள்கள் இருவரும் திட்டமிடப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை அவர்கள் வழியாகவே தெரிந்துகொள் கிறார். குற்றவாளிகள் யார் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியவில்லை. அதைப் பொதுவெளிக்குக் கொண்டு செல்லாமல், அந்தக் கயவர்கள் யார் என்பதைத் தனியொரு மனிதனாக ரகசியப் புலன் விசாரணையின் மூலம் எப்படிக் கண்டுபிடித்தார், அவர்களை என்ன செய்தார் என்பதுதான் கதை.
படத்தில் நகைச்சுவை, பாடல்கள் இரண்டுமே கிடையாது. மூன்று கதாபாத்திரங்களின் கோணத்தில் திரைக்கதையை எழுதியிருக்கிறேன். அதற்கு கமல் சாரின் ‘விருமாண்டி’ படத்தைத் தாக்கமாக எடுத்துக்கொண்டேன்.
மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்? - ‘கபாலி' விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் ஆகாஷ் பிரேம்குமார் உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இரண்டாவது முதுகெலும்பு ஒளிப்பதி வாளர் எம்.ஏ. ஆனந்த். ஹரி எஸ்.ஆர். பின்னணி இசை அமைக்க, மணிகண்டன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு சண்டைக் காட்சியும் உண்டு. சண்டைக் காட்சி இயக்குநராகச் சரவெடி சரவணன் பணியாற்றியிருக்கிறார். படத்தை மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.
- jesudoss.c@hindutamil.co.in