

மாஸ் கதாநாயகர்கள் எல்லாருடனும் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து வெற்றி கண்டவர் சதீஷ். இன்னொரு பக்கம், ‘ஓ மை கோஸ்ட்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றிகள் கொடுத்திருக்கிறார். அவற்றைத் தொடரும் விதமாக வெங்கி எழுதி இயக்கியிருக்கும் ‘வித்தைக்காரன்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள சதீஷ், இதில் ஆக்ஷன் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் சார்பில், கே.விஜய்பாண்டி தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தில் கதாநாயகன் செய்யவிருக்கும் வித்தை என்ன? - விமான நிலையத்துக்குள் புகுந்து நாயகன் கொள்ளையடிக்கச் செல்வதுதான் அந்த வித்தை. அதைத் தாண்டி படத்தில் ஒரு முக்கிய விவகாரம் இருக்கிறது. ‘வித்தைக்காரன்’ என்று கதாநாயகனைச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. மிகத் திறமையான ஆண்களைக் கிராமப்புறத்தில் ‘அவன் வித்தைக் காரன்பா’ என்று சொல்வார்கள்.
சூப்பரா பைக் ஓட்டுவான், சூப்பரா படிப்பான், சூப்பரா டான்ஸ் ஆடுவான், சூப்பரா எஸ்கேப்பும் ஆயிடுவான்’ என்று பல திறமைகள் கொண்ட கெட்டிக்காரத்தனத்தோடு இருக்கும் ஒருவனைத்தான் ‘வித்தைக்காரன்’ எனச் சுட்டிக்காட்டுவார்கள். இந்தக் கதையில் ஹீரோ பல திறமைகள் கொண்டவன். ஒரு ‘மெஜிசிய’னும் கூட. ‘மந்திரவாதி’ என்று சொல்வது ஒருவிதத்தில் கொச்சைபோல் ஆகிவிட்டது. அதனால், ‘வித்தைக்காரன்’ என்று வழக்குத் தமிழில் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.
விமான நிலையத்தைக் கதைக் களமாகத் தேர்வு செய்ய தனித்த காரணம் எதுவும் உண்டா? - வங்கி தொடங்கி பெட்ரோல் பங்க் வரை கதாநாயகனோ, வில்லனோ கொள்ளையடிக்கும் கதைக் களங்கள் நிறையவே சினிமாவில் வந்துவிட்டன. நாயகன் மாட்டிக்கொண்டால், அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாத இடம் எது என்று பார்த்த போது கதை விவாதத்தில் விமான நிலையம்தான் முதல் சாய்ஸாக இருந்தது.
ஏனென்றால், ஸ்கேனர் கருவி, சிசிடிவி கண்காணிப்பு தொடங்கி, பல அடுக்குப் பாதுகாப்பு, அதற்குத் துணை ராணுவத்தை அரசு பயன்படுத்துவது, 24 மணிநேரமும் விமானங்கள் வந்தபடி இருப்பது என இயற்கைப் பேரிடர் நிகழ்ந்தால் தவிர விமான நிலையத்துக்கு விடுமுறை கிடையாது.
மாட்டினால் தப்பிக்க முடியாது என்கிற நிலை இருக்கும் அப்படிப்பட்ட இடத்துக்குள் புகுந்து நாயகன் கொள்ளையடித்துவிட்டுத் திரும்பி வந்தானா, இல்லையா? எதற்காக, யாருக்காகக் கொள்ளை அடித்தான் என்று திரைக்கதை அமைப்பது சவாலாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று அதைச் சாதித்திருக்கிறோம்.
நகைச்சுவை கலந்த குணச் சித்திரத்தில் ஏற்கெனவே தனது திறமையை நிரூபணம் செய்தவர் சதீஷ். அவர் ஆக்ஷன் ஹீரோ எனும்போது, இதில் நகைச்சுவைக்கு இடமிருக்கிறதா? - கதைக் களத்தைப் பொறுத்து, ஹீரோ எந்த அளவுக்கு காமெடி பண்ண வேண்டும் என்று ஓர் எல்லை இருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோ, வளர்ந்து நிற்கும் ஹீரோ என யாராக இருந்தாலும் காமெடியன் அளவுக்கு ஹீரோக்கள் இறங்கி நகைச்சுவை பண்ணமாட்டார்கள்.
அவர்கள் பண்ணும் காமெடி கொஞ்சம் மேம்பட்ட தரத்தில் இருக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்து இதுதான் கோட்பாடாக இருக்கிறது. இதில் சதீஷ், தரம் தாழ்ந்த காமெடியிலிருந்து விலகி இருப்பார். அதேநேரம் தரமான ‘சிச்சுவேஷன் காமெடி’ இருக்கும். அது ‘அவல நகைச்சுவை’யாகவும் நிறம் காட்டும்.
- jesudoss.c@hindutamil.co.in