Last Updated : 09 Feb, 2024 04:25 AM

 

Published : 09 Feb 2024 04:25 AM
Last Updated : 09 Feb 2024 04:25 AM

திரைப் பார்வை - ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ | பிரெஞ்சு தேசத்தின் ‘உதிரிப் பூக்கள்’

காட்சி முடிந்த பின்னரும் கதை மாந்தர்கள் பற்றிய எண்ணங்களும் அவர்கள் பேசிய வார்த்தைகளும் நம்மோடு பயணிப்பதே ஒரு சிறந்த திரைப்படத்தின் அடையாளம். நீதிமன்றத்தில் சூழ்நிலைக் கைதியாக நிற்கும் சான்ட்ரா அப்படி ஒரு தன்னிலை விளக்க வாக்கியம் சொல்கிறாள். “குடும்பம் என்பது ஒழுங்கற்ற அமைப்பில் தொலைந்து போவது. இதனுள்ளே போரிடுதல் என்பது, சேர்ந்தோ தனித்தனியாகவோ ஒருவருக்கெதிராக ஒருவர் இடம் மாற்றிக்கொள்வது.”

திருமணமென்பது எல்லாரும் கடந்து வரும் நுட்பமானதொரு ஒரு வழி நூல் பாலம். அத்தகைய திருமண வாழ்வின் உளவியல் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கையாண்ட படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ என்கிற பிரெஞ்சு மொழித் திரைப்படம் மண வாழ்வின் அகச்சிக்கல்களைப் பல்வேறு படிநிலைகளில் நின்று தீர அலசுகிறது.

பிரான்ஸ் நாட்டின் பனிப்பிரதேசம் ஒன்றில், தனிமையானதொரு வீட்டின் மாடியிலிருந்து விழுந்து இறக்கும் ஓர் ஆணுடைய மரணத்திலிருந்து கதை தொடங்குகிறது. அவருடைய எழுத்தாளர் மனைவியும் பார்வையற்ற பதின்ம வயது மகனும் தனியாக விடப்படுகின்றனர். மரணம் ஏற்படுத்தும் சிக்கல்களும் அதன் பின்னர் விரியும் சொல்லப்படாத சம்பவங்களும்தாம் திரைப்படம்.

இத்தனைக்கும் ‘Macguffin’ என்று சொல்லப்படும் கதையின் கருப்பொருள், திசை மாற்று உத்தியைத் திரைப்படம் பின்பற்றுகிறது. கதையின் மேற்பரப்பில் , சாதாரணமாக ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கதை போலத் தொடங்குகிறது. ஆனால், படிப்படியாக அது வெறுமனே ஒருவர் விழுந்ததைப் பற்றிப் பேசாமல் ஒரு மணவாழ்வு, குடும்பம், அதன் கனவுகள், நிறைவேறாத லட்சியங்கள் இப்படிப் பலவற்றின் வீழ்ச்சியைச் சொல்லி நிறைய விவரிக்கிறது.

வழக்கமான கதைசொல்லல் பாதையில் இப்படம் பயணிக்கவில்லை. மேலோட்டமாக, இது விவாகரத்து பற்றிய படமாக நின்றுவிடாமல் இருவேறு மொழிகள் பேசும் கணவன் - மனைவியின் வாழ்நிலை, அவர்களது கனவுகள், அவர்களுக்குள் நிகழ்ந்த பல நிகழ்வுகள், ஒரு விபத்தால் பறிபோகும் மகனின் கண்பார்வை என்று பல கோணங்களில் ஒரு நீரோடைபோல் பயணிக்கிறது.

முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஏதும் இல்லாமல், ரோஷமான், விருமாண்டி போல வசனங்களின் வழியாக என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை நமக்கு ஒரு ரகசியப் புதிர் அவிழ்ப்பதுபோல், மெல்ல மெல்லப் புரிய வைக்கிறது. எது சரி, எது தவறு என்கிற சார்பு நிலையைக் கடந்து, ஒரு கட்டத்துக்குப் பிறகு, அந்த மரணம் எப்படி நிகழ்ந்திருந்தாலும் அது நமக்கு தேவையற்றதாகி விடுகிறது. அதையும் தாண்டி திரைப்படம் வலியுறுத்தும் பேசுபொருள், இன்னமும் ஆழமாக நம்முள் பதிந்து விடுகிறது.

பிரெஞ்சு இயக்குநர் ஜஸ்டின் ட்ரியே, அவர் கணவர் ஆர்தர் ஹராரியுடன் இணைந்து எழுதி, அவரே இயக்கியிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையும் படத்தொகுப்பும் திரைப்படத்தின் பிரதானக் கதாபாத்திரமான சான்ட்ராவாக நடித்துள்ள சான்ட்ரா ஹியூலெரின் நடிப்பும் மிகக் குறைந்த பின்னணி இசையும் முக்கிய அம்சங்கள்.

‘உதிரிப் பூக்க’ளில் சரத்பாபுவுக்கும் விஜயனுக்குமிடையே நிகழும் சண்டையை, சுழித்தோடும் அமைதி யான நதி நீரையும் நீண்ட மௌனங்களையும் காட்டி இயக்குநர் மகேந்திரன் செய்த உணர்வுகளின் ஜாலத்தை தான் இந்தத் திரைப்படம் புதிய முறையில் செய்திருக்கிறது

ஒரு மலினமான கொலையாளியைக் கண்டுபிடிக்கும் கதையாக மட்டும் போகாமல், பார்வையாளர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் இடம் கொடுத்துப் பங்கேற்கச் செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இவ்வளவு சிக்கலான ஒரு பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சாண்ட்ராவிற்கும் இயக்குநருக்கும் விருதுகள் குவியப் போவது உறுதி.

உலகமெங்கும் திரையிடப்பட்டுக் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதில் கோல்டன் குளோப், ஆஸ்கர் பரிந்துரைகளும் அடக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x