

மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிப் பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நரேன். மிஷ்கின் இயக்குநராகவும் நரேன் நாயகனாகவும் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்குப் பிறகு நாயகன், எதிர்மறை நாயகன், வில்லன், குணச்சித்திரம் என அமையும் களத்தில் அழுத்தமான நடிப்பைத் தந்துவிடும் ஆற்றல் கொண்டவர். ‘அஞ்சாதே’ தொடங்கிக் கடந்த ஆண்டு வெளியான
‘இறைவன்’ வரை காவல் அதிகாரி கதாபாத்திரங்களில் அதிகமும் ‘டைப் காஸ்ட்’ செய்யப்பட்டாலும் அவற்றிலும் கவனிக்க வைப்பவர். தற்போது பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆத்மா’ என்கிற தமிழ்ப் படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அது குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
காவல் அதிகாரி கதாபாத்திரங்களி லிருந்து தம்பிக்கும் எண்ணம் இல்லையா? - அதற்கான முயற்சிதான் ‘ஆத்மா’. மலையாளத்தில் மீரா ஜாஸ்மினுடன் நான் இணைந்து நடித்து, டிசம்பர் இறுதியில் வெளியான ‘குயின் எலிசபெத்’ ஒரு ரொமாண்டிக் காமெடி. படம் ஹிட். எனக்கு முழுநீள காமெடி லீட் கேரக்டர். அதைப்போல் தமிழில் ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும், எனக்கு போலீஸ் கேரக்டர் கொடுக்க முன்வர மாட்டார்கள். ‘ஆத்மா’ படம் அதை மாற்றும் என்று நம்புகிறேன்.
‘ஆத்மா’வில் எப்படி என்ன ஸ்பெஷல்? - இதுவரை ஹீரோவாக நடித்த வற்றில் இது எனக்குச் சவாலாக அமைந்த கதாபாத்திரம். ஆட்டிசம் குறைபாடு கொண்ட வைத்தி என்கிற வைத்தியநாதனாக நடித்திருக்கிறேன். பொதுவாக ஆட்டிசம் பாதித்த சிறார்களை வெளியிடங்களில் பார்த்திருப்போம். ஆனால், அவர்கள் 25 வயதைக் கடந்த பிறகு பெரும்பாலும் வீட்டுக்குள் அல்லது காப்பகங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலை குடும்பத்தினருக்கு உருவாகிவிடும்.
அதற்குக் காரணம், மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் திறன், புரிந்துகொள்ளும் திறன் அவர்களுக்குக் குறைவாக இருப்பதுதான். இந்தச் சிக்கலின் அளவு தீவிரமாக உள்ளதா, மிதமானதா என்பதை, ‘ஸ்பெக்ட்ரம்’ என்கிற அளவைக் கொண்டு வகைப்படுத்துகிறார்கள்.
இவருக்கு ஆட்டிசம் இருப்பதுபோலவே தெரிய வில்லையே என்று கூறும் அளவுக்கு வைத்திக்குக் குறைபாட்டின் அளவு சிறியது. அதைப் பொருட்படுத்தாமல், அவனது குடும்பத்துக்கு வேண்டிய ஒருவர் துபாயில் உள்ள தனது நிறுவனத்தில் வைத்திக்கு வேலை கொடுக்கிறார். கதை முழுவதுமே துபாயில் நடப்பதால், படம் முழுவதையும் அங்கேயே எடுத்து முடித்திருக்கிறோம்.
துபாயில் வைத்திக்கு என்ன நடக்கிறது? - அதுதான் கதையே. வைத்தி முதலில் தங்கும் அறையில் இருப்பவர்கள், அவரது சிக்கல் பற்றித் தெரிந்துகொண்டதும் வெளியே துரத்திவிடுகிறார்கள். அப்போது தனது அறையில் இடம் தருகிறார் பால சரவணன். அந்த அறையில் வைத்தி தனியாக இருக்கும்போதெல்லாம் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. அதை பால சரவணனிடம் சொல்கிறார்.
பிறகு தனது முதலாளி காளி வெங்கட்டுக்குச் சொல்கிறார். ஆனால், அவர்கள் நம்பாமல், இது ஆட்டிசத்தின் ‘எஃபெக்ட்’ ஆக இருக்கும் என்று அலட்சியம் செய்கிறார்கள். இச்சமயத்தில் பக்கத்து அறையில் வந்து குடியேறும் தமிழ்ப் பெண்ணான ஷ்ரத்தா சிவதாஸிடம் தான் கேட்கும் குரலைப் பற்றி வைத்தி சொல்ல, அவரும் அந்தக் குரலைக் கேட்டு உறுதிப்படுத்துகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வேலைக்காக வந்து, அங்கே கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணுடைய ஆவியின் குரல் அது என்பதை இருவரும் தெரிந்து கொள்கிறார்கள். அறை நண்பன் பால சரவணனை நம்பவைக்க, வைத்தி செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். இதன்பின்னர் இவர்கள் மூவரும் சேர்ந்து கொலையாளியையும், கொலைக்கான காரணத்தையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று திரைக்கதை செல்லும்.
வைத்தி கதாபாத்திரத்துக்கு எப்படித் தயாரித்துக்கொண்டீர்கள்? - கதையைக் கேட்டபோது ஆட்டிசம் குறைபாட்டை மீறி, அந்த ஆவியுடன் வைத்தி உரையாடும் காட்சிகள் என்னைக் கவர்ந்துவிட்டன. கதையைக் கேட்கக் கேட்க எனது கதாபாத்திரம் மனதில் உருவம் பெற்றுக்கொண்டே வந்தது. வைத்திக்கும் ஆவிக்குமான ‘அண்டர்ஸ்டாண்டிங்’ எப்படிச் சாத்தியமானது என்பதில் நகைச்சுவையும் சென்டிமென்டும் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
அதேநேரம், இதில் வரும் ஹாரர், த்ரில்லர் அனுபவம் தற்கால மலையாள சினிமாவின் நேர்த்தியுடன் இருக்கும். வைத்தியின் மீதும் இறந்த பெண்ணின் மீதும் ‘அய்யோ பாவம்!’ என உணர வைக்கும். இவ்வளவு சிறப்பான கேரக்டரை எப்படி வெளிப்படுத்தப்போகிறோம் என்று தொடக்கத்தில் திகைத்தேன். இயக்குநர் சுகீத், “நகைச்சுவை இருப்பதால் இதை ஒரு ‘க்யூட்’டான கேரக்டராக வெளிப்படுத்துங்கள்” என்றார்.
அந்த யோசனை பிடித்திருந்தது. 1988இல் வெளியான ‘ரெயின் மேன்’ படத்தை எனது கல்லூரிக் காலத்தில் ரசித்துப் பார்த்திருக்கிறேன். அதில், ஆட்டிசம் குறைபாடு கொண்ட கதாபாத்திரத்தில் டஸ்டின் ஹாஃப்மேன் கொடுத்திருந்த அண்டர்பிளே நடிப்பு நினைவில் இருந்தது. அதுவும், ‘சிப்பிக் குள் முத்து’ படத்தில் கமல் சாரின் நடிப்பும் மனதுக்குள் எட்டிப் பார்த்தன. எனது உடல் எடையைக் கூட்டி னேன். இவர் நரேன்தானா என அடையாளம் கண்டறிய முடியாதபடி தோற்றத்தை மாற்றினேன். வைத்தி கிடைத்துவிட்டான்.
உங்கள் மனைவி மஞ்சு ஹரிதாஸ் ஒரு பின்னணிப் பாடகியாக இருந்தும் தொடர்ந்து அவர் பாடவில்லையே ஏன்? - நான் அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படம் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் காதலித்துக்கொண்டிருந்தோம். அந்தப் படத்துக்கு கம்போஸிங் நடந்தபோது என்னைப் பார்க்க வந்த மஞ்சுவை, ‘மச்சான் இந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணப்போறேன். இவள் நல்ல பாடகி’ என்று மிஷ்கினுக்கு அறிமுகப்படுத்தினேன்.
உடனே மிஷ்கின், ‘ஒரு டிராக் பாடிவிட்டுப் போ’ என்றார். பிறகு குரலைக் கேட்டு மஞ்சுவின் குரலையே படத்துக்கும் ஓகே செய்தார் மிஷ்கின். அந்தப் பாடல்தான் மஞ்சுவை அறிமுகப்படுத்திய ‘இது என்ன புதுக் கனவோ’ பாடல். பிறகு பல பாடல்கள் பாடினாலும் ஏனோ பின்னர் அதில் அவருக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
உங்களுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்குமான நட்பு எப்படிப்பட்டது? - எப்போதும் மாறாது. என்றைக்கும் தேயாது. எங்களைப் பிரிக்கவும் முடியாது. ஒரு படைப்பாளியாக மிஷ்கின் பற்றிய எனது புரிதலே வேறு. அவரைப் போல் மாற்றுச் சிந்தனை கொண்ட படைப்பாளி அரிது. மிஷ்கின் உடனான நட்பு எனக்கு பலம்தான். மிஷ்கின் இயக்கத்தில், தாணு சார் தயாரிப்பில், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘ட்ரெய்ன்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை என்னைக் கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.
- jesudoss.c@hindutamil.co.in