

அ
ருள்நிதி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் மு.மாறன். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
முதல்ல நான் ஒரு பத்திரிகையாளன். ஆனந்த விகடன், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் பத்து வருடங்கள் நிருபராகவும் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்தே சினிமாமேல அலாதியான ப்ரியம். கிரேஸி மோகன் மூலமாதான் அந்தக் கனவு நிறைவேறி இருக்கு. அவர்தான் என்னை சுரேஷ் கிருஷ்ணா கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துவிட்டார். அவர்கிட்ட மூன்று படங்களில் வேலை செய்தேன்.
பிறகு கே.வி. ஆனந்த், லாரன்ஸ் மாஸ்டர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். இதுல ஒரு பத்து வருடங்கள் ஓடிப்போச்சு. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ கதையை எழுதிட்டு பல தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். அப்படித்தான் ‘மரகத நாணயம்’ படத்தைத் தயாரிச்ச டில்லிபாபுட்ட சொன்னப்போ அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்து. முதல் வாய்ப்பைக் கொடுத்துட்டார். அவருக்கு என்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
நிறையன்னு சொல்லணும். சினிமாவுல பல தரப்பு மக்கள் இருக்காங்க. அவங்களை எளிதில் சந்திக்க பத்திரிகைத் துறை ஒரு பாலமா இருந்திருக்கு. அதுவுமில்லாம அன்றாட நிகழ்வுகள், நாட்டு நடப்புகளை நுட்பமா புரிஞ்சுக்கிறதுக்கும் நம்மளை உடனுக்குடன் அப்டேட் செஞ்சுக்கவும் பத்திரிகையிலதான் கூடுதல் வாய்ப்பு அமைஞ்சது. மக்கள் மனசை நெருக்கமா புரிஞ்சுக்க பத்திரிகைத் துறை அடித்தளம் அமைச்சுக் கொடுக்குது.
மக்கள் மத்தியிலேர்ந்து கதாபாத்திரத்தை எழுத இந்த அனுபவம்தான் கைகொடுக்கும். இந்த அனுபவங்கள் எல்லாம்தான் எனக்கு இந்தக் கதைக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. இது மட்டுமில்லாம, அடுத்தடுத்து பண்ணப் போற எல்லாக் கதைகளுக்கும் பத்திரிகைத் துறை அனுபவம் கை கொடுக்கும்ன்னு நம்புறேன்.
இரவுக்கும் மர்மத்துக்கும் எப்பவுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு. இந்தக் கதைக்கு இரவு ரொம்பவே தேவைப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளை இரவுகள்லதான் ஷூட் பண்ணியிருக்கோம். பகல்ல க்ரைம் செஞ்சுட்டு கதாபாத்திரங்கள் ஈஸியா மறைச்சி தப்பிச்சிடலாம். ஆனா, இரவுல சின்ன குற்றம் பண்ணினாகூட ஏதாவது ஒரு தடயத்தை மிஸ் பண்ண வாய்ப்பிருக்கு.
அதுமட்டுமில்ல, இரவில் மட்டும்தான் யாரோட கண்களாவது நம்மைக் கூர்ந்து கவனிச்சிக்கிட்டே இருக்கும்ங்கிற உண்மைதான் இந்தப் படம். இந்த அடிப்படையிலதான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற தலைப்பு இந்தப் படத்துக்கு அமைஞ்சது. படம் பார்த்து முடிச்சதும் இதைவிடச் சிறந்த தலைப்பு இந்தப் படத்துக்கு வைக்க முடியாதுன்னு தோணும்.
இதுவும் சென்னையைக் கதைக் களமா கொண்ட படம்தான். மர்மமும் மழையும் கலந்த சென்னையை இந்தப் படத்தில் நீங்க பார்க்கலாம். ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை ‘நான் – லீனியர்’ திரைக்கதையில சொல்லியிருக்கேன். அருள்நிதி கதாபாத்திரம் ஒரு கால் டாக்ஸி டிரைவர்.
இன்றைய வாழ்க்கையை அதன் போக்குல வாழுற ஒரு சாதாரண இளைஞன். அவனுக்கு ஒரு அழகான காதல். அவன் எதிர்பாராத விதமா ஒரு பிரச்சினையால பாதிக்கப்படுறான். அதுலேர்ந்து அவன் எப்படி மீண்டு வந்தாங்கிறதைப் பரபரன்னு சொல்லியிருக்கோம்.
கதைதான் தேர்வு செஞ்சது. தான் பண்ற கதைகள் எல்லாமே தனக்குப் பொருத்தமா இருக்குமான்னு பார்த்துத்தான் அவர் ‘செலக்ட்’ பண்ணுவாரு. இந்தக் கதையையும் அப்படித்தான் ஒத்துக்கிட்டாரு. சக நடிகர்களுக்கு ‘ஸ்பேஸ்’ கொடுக்கிற ஒரு ஆக்டர். ‘மௌனகுரு’, ‘டிமான்ட்டி காலனி’. படங்கள்ல பார்த்த அருள்நிதியை இந்தப் படத்துலயும் நிச்சயம் பார்க்கலாம். திரைக்கதையின் வேகத்துக்கு அவரின் யதார்த்த நடிப்பு பலமா அமைஞ்சிருக்கு.
தயாரிப்பாளர் டில்லிபாபு சார் எனக்கு ஒரு நல்ல குழுவை அமைச்சிக் கொடுத்திருக்கார். என்னோட ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். ‘டிமான்ட்டி காலனி’, ‘ஆறாது சினம்’ போன்ற படங்களுக்குப் பணிபுரிந்தவர். ஒளிப்பதிவு இந்தப் படத்தோட இன்னொரு முக்கியமான கேரக்டராக மாறியிருக்கு. சாம் சி.எஸ். இசை. ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு அவரோட பின்னணி இசை இந்தப் படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் தந்திருக்கும் தீம் மியூசிக் பேசப்படும். படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். திரைக்கதையோட தன்மையை அப்படியே உள் வாங்கி அதோட சுவாரசியம் கெடாமல் எடிட்டிங்குல படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கார்.