Published : 26 Jan 2024 06:10 AM
Last Updated : 26 Jan 2024 06:10 AM

இயக்குநரின் குரல்: தீர்ப்பால் திரும்பக் கிடைத்த பள்ளி வாழ்க்கை!

‘ஆட்டோகிராஃப்’, தொடங்கி ‘96’ வரை பள்ளிக் காலத்தின் நினைவுகளை மீட்டுத் தரும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பைக் கதைக் களமாகக் கொண்ட படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்தப் படங்கள் தந்த உணர்வை நினைவூட்டுகிறது வெளியான வேகத்தில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ட்ரைலர். இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இராகோ. யோகேந்திரனுடன் உரையாடினோம்..

படத்தின் ட்ரைலரில், பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதப் படிப்பதுபோல் காட்சி இடம்பெற்றுள்ளதே..! - பொதுவாக முன்னாள் மாணவர்களின் ‘ரீயூனியன்’ கதைகளில் காதலும் தோழ மையும் நினைவுகூரப்படும் ‘டிராமா’ இருக்கும். அல்லது, தாங்கள் படித்த பள்ளிக்கூடத்தின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அதை முன்னேற்றத் திட்டமிட்டுச் செயல்படுத்துவார்கள். ஆனால், இந்தக் கதையில் நடக்கும் ‘ரீயூனியன்’ முற்றிலும் மாறுபட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உதவிபெறும் ஒரு பள்ளி மீது, அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார்ப் பள்ளி 2008இல் ஒரு வழக்கைத் தொடுக்கிறது. 2 அரசுத் தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளி ரிசல்ட் கொடுப்பதற்காக காப்பி அடித்து எழுதும் வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதுதான் வழக்கு. அந்த வழக்கிற்கு 10 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வருகிறது.

2008இல் 2 தேர்வெழுதிய அத்தனை மாணவர்களும் இப்போது 28 வயதில் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் பள்ளிக்கு வந்து 3 மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டபின் தேர்வெழுத வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. தீர்ப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடுங்கோபத்துடன் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகான அவர்களின் சந்திப்பு அவர்களை எப்படி மாற்றுகிறது, அந்த 3 மாதத்தில் அவர்கள் எதையெல்லாம் கண்டடைந்தார்கள், எதையெல்லாம் மீட்டுக்கொண்டார்கள் என்பதுதான் திரைக்கதை.

யோகேந்திரன்

தேர்வு முறையில் இருக்கும் சிக்கல்கள், பலவீனங்கள், மதிப்பெண் குறித்த விமர்சனம் என்றெல்லாம் படத்தில் இருக்கிறதா? - இல்லை. வேலையில் இருப்பவர்கள், செய்த வேலை பிடிக்காமல் அதை விட்டுவிட்டுத் துறை மாறியவர்கள், ஊதிய உயர்வையும் பதவி உயர்வையும் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள், திருமணத்துக்குத் தயாராகிக்கொண்டி ருந்தவர்கள், ‘ஆன்சைட்’டில் உற்சாகமாகப் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் என்று, அனைவரும் வாழ்க்கை விசிறியடித்த 28ஆம் வயதில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு மீண்டும் 3 மாத காலம் பள்ளி மாணவர்கள் ஆகும் வாய்ப்பு வரும்போது அங்கே நடப்பது என்ன என்பதுதான் கதைக் களம். அவர்கள் அசைபோட்டவை காதலும் நட்பும் மட்டுமே அல்ல என்பதுதான் படத்தின் ஸ்பெஷல். இதிலொரு ஃபாண்டஸி அம்சமும் நகைச்சுவையும் போதிய அளவுக்குக் கலந்திருக்கிறேன்.

உதாரணத்துக்குப் பேனா பிடித்து எழுதுவதையே மறந்து போனவர்கள் மீண்டும் பேனா பிடித்துத் தேர்வெழுத வேண்டிய நிலை வரும்போது எதிர்பாராத வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவை ரசிக்கும்படியாக இருக்கும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித் தால்' புகழ் ரக் ஷன் நாயகனாகவும், மலினா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் வழியாகப் புகழ்பெற்ற தீனா அவரது நண்பராக வருகிறார். இவர்களுடன் பிராங்ஸ்டர் ராகுல் , ஸ்வேதா வேணுகோபால் என இருபதுக்கும் அதிகமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் ‘ஃபீல் குட்’ படங்களுக்கு அதிகமும் இசையமைத்து வரும் சச்சின் வாரியார் இசையமைத்திருக்கிறார்.

- jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x