

திரை அனுபவத்துக்குக் குறைவில்லாமல், அதேநேரம் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலைப் பேசும் படங்களைத் தொடர்ந்து தயாரித்தும் வெளியிட்டும் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜெயக்குமார் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘புளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
கிரிக்கெட்டை மையமாக வைத்து, தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்துவிட்டன. இந்தப் படம் எந்த வகையில் வேறுபடுகிறது?
ஒரு சிறு நகரத்தின் வாழ்க் கையில் கிரிக்கெட் எவ்வாறு ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது என்பதை கொண்டாட்டமும் வலியும் கலந்து பேசும் படமாக இது இருக்கும். கிராமம் முதல் நகரம் வரை இன்றைக்கு கிரிக்கெட் இல்லாமல் இந்தியா இல்லை. நான் 90களின் காலகட்டத்தில் அனுபவித்த சொந்த வாழ்க்கையிலிருந்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் நேசிக்கும் கிரிக்கெட், அதில் படிந்திருக்கும் வர்க்க அரசியல், புறக்கணிப்பு, நிரா கரிப்பு, இருட்டடிப்பு என வட்டார வாழ்க்கையில் மலிந்திருக்கும் சமூக நிலையுடன், அவர்களின் காதல், நட்பையும் கலந்து ஒரு கொண்டாட்டமாகப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
90களின் காலகட்டத்தைக் கொண்டு வருவதில் சவால் இருந்ததா?
கதையும் அதிலுள்ள சம்பவங் களுமே அந்தச் சவாலைக் கடந்து வரப் பாதியளவுக்கு கைகொடுத்தன. அசோக் செல்வன், சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண்பாலாஜி எனப் படத்தில் நடித்த எல்லாரும் தோற்றத்துக்காக அவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறார்கள். இவர்களில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன் ஆகிய மூவரும் ஏற்கெனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடிய ‘பிளேயர்’களாக இருந்ததால், படத்தில் இடம்பெறும் ‘கிரிக்கெட் மேட்ச்’ காட்சிகளை சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் படமாக்க முடிந்தது. அரக்கோணம் வாழ் இளைஞர்களையும் மக்களை யுமே துணை நடிகர்களாக நடிக்கவைத்திருக்கிறேன். அதேபோல் காலகட்டத்தைக் கலை இயக்கம் வழியாக உரு வாக்குவதில் ஜெய்ரகுவின் பங்களிப்பு மிக முக்கியமானது. சண்டைக் காட்சியிலும் ‘பீரியட்’ உணர்வைக் கொண்டு வரமுடியும் என்று காட்டினார் ஸ்டன்னர் சாம். படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றியே கதை நகர்வதால் ஒளிப்பதிவில் சிற்றூரின் வாழ்க்கையை உணரவைப்பதில் மெனக்கெட்டிருக்கிறார். இவர்கள்எல்லோரோடும் போட்டி போடும் விதமாக இசையையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
இயக்குநர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் எப்படிப்பட்டது? படத்தில் அசோக் செல்வன் கதாபாத்திரத்துக்கு ரஞ்சித் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே?
வாசிப்புதான் என்னை இயக்குநர் ரஞ்சித்திடம் கொண்டு வந்து சேர்த்தது. பள்ளிக் காலத்தில் தொடங்கி வாசித்த ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியம் விரித்த கதையுலகமும் கதை மாந்தர்களும் என்னைக் கதை எழுதும்படி செய்தது. குறிப்பாக பியதோர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் என்னைச் சென்னைக்கு இழுத்து வந்தது. சென்னையில் எனக்குக் கிடைத்த ‘மெண்டார்’தான் ரஞ்சித். திரைப்படக் கலையை அவர் அணுகும் விதம் என்னை வெகுவாகப் பாதித்தது. அவர் இந்தப் படத்தை வெளியிடுவது எங்கள் குழுவுக்கு இன்னும் பலம்.