உண்மையான ‘மாஸ்’ படம் எது? - பாபி பாலச்சந்திரன் நேர்காணல்
இந்திய அரசுக்கு சி.பி.ஐ. போல் அமெரிக்காவுக்கு எஃப்.பி.ஐ உளவு அமைப்பு. அது குற்றங்களின் வேர்களைக் கண்டறிய உதவுகிறது, கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கிளை பரப்பியிருக்கும் ‘எக்ஸ்டர்ரோ இண்டியா’ (exterro india) நிறுவனத்தின் பாதுகாப்பு மென்பொருள். எஃப்.பி.ஐ. மட்டுமல்ல’ ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருடைய தகவல்களையும் அந்தந்த நாட்டின் ‘பிரைவசி’ சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பாதுகாத்துக் கொடுக்கும் வேலையைச் செய்வதும் இந்த நிறுவனத்தின் மென்பொருள்தான். இந்நிறுவனத்தை நிறுவி, அதன் தலைவராகச் செயல்பட்டு வருபவர் பாபி பாலச்சந்திரன். தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு சிறு நகரமான நாசரேத்திலிருந்து கிளம்பி உலகை ஆளத் தொடங்கியிருக்கும் ஒரு தமிழர், தற்போது ‘பிடிஜி யுனிவர்சல்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படத் தயாரிப்புக்கு வந்திருக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015இல் வெளியாகி, மிரட்டலான ஹாரர் ப்ளாக்பஸ்டர் படமாக வெற்றிபெற்றது ‘டிமாண்டி காலனி’. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை, ‘டிமான்டி காலனி 2’ என்கிற பெயரில் தயாரித்துள்ள அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
மில்லியன்களில் விற்று வருமானம் ஈட்டும் ‘பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட்வேர்’ துறையிலிருந்து சூதாட்டம் போன்ற சினிமா தொழிலுக்குள் நுழைய வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? - மென்பொருள் துறைதான் பிரதானம். அதிலிருந்து விலகி வரப் போவதில்லை. ஏனென்றால் அத்துறை வளர்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. நிர்வாகம், வளர்ச்சி ஆகியவற்றை வழி நடத்திச் செல்லும் மிகப்பெரிய அணி என்னிடம் இருக்கிறது. மென்பொருள் தயாரிப்பு என்பது கல்லூரிப் படிப்புக்குப் பிறகு நான் வரித்துக்கொண்ட கனவு. ஆனால், ஊடகம் - பொழுதுபோக்குத் துறையில் நுழைய வேண்டும் என்பது எனது பள்ளிக் காலக் கனவு. இத்துறையில் இறங்க வேண்டும் என்பதற்காகவே திரைப்படங்களின் வெற்றி தோல்விகளை நீண்ட காலமாக ஆய்வு செய்து வந்தேன். திரைப்பட வணிகம், விநியோகம் இயங்கும் முறை, அதற்குள் ஒளிந்திருக்கும் ஆபத்தான பள்ளங்கள், தெளிவான திட்டமிடலும் இருந்தால் போட்ட முதலீட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு என அதற்குள் ஆழமாகச் சென்றுவிட்டேன். அதேபோல், படத்தின் உருவாக்கத்தில் உலகத் தரத்தைக் கொண்டு வருவதற்கு எனது மென்பொருள் நிறுவனம் பக்க பலமாக இருக்கிறது. அதனால், துணிந்து இத்துறைக்குள் வந்திருக்கிறேன்.
‘டிமாண்டி காலனி’ என்கிற ஏற்கெனவே வெற்றிபெற்ற ‘பிராண்’டை தேர்வு செய்துகொள்ளப் பாதுகாப்பு உணர்வுதான் காரணமா? - திரையுலகில் முதலீடு மீதான பயம் எனக்கோ எனது குழுவுக்கோ இல்லை. ஏனென்றால், மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் எதிர்பார்ப்பை விட ஒரு படி அதிகமாகக் கொடுத்தால், அதைத் தேடி வந்து கொண்டாடுவார்கள் என்பது, இத்துறையில் கடந்த 100 ஆண்டுகளாகப் பொய்த்துப் போகாத உண்மை. மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால், ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டுடியோவாக மாற வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இறங்கியுள்ளோம். மக்களுக்கு ஹாரர் படங்கள் எல்லாக் காலத்திலும் பிடிக்கிறது. அதனால்தான் எங்களது முதல் படமாக ‘டிமான்டி காலனி 2’ ஆக அமைந்தது.
அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணி என இறங்கியதில் காரணம் இருக்கிறதா? - அருள்நிதி - அஜய் ஞானமுத்து டீம் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அவர்கள் சராசரி படமாக இதைச் செய்யவில்லை. படத்தில் வரும் மையக் கதை அழுத்தமானது. கதைப்படி பாதிக்கப்படும் நாயகனும் நாயகியும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் திரையை விட்டு கண்களைத் திருப்ப முடியாதபடி இருப்பதையும், அந்தச் சம்பவங்கள் நடக்கக் காரணமாக இருக்கும் அமானுஷ்ய உலகைச் சேர்ந்த சக்திகளின் பின் இருக்கும் ஆச்சர்யமும் இரண்டரை மணிநேரம் இருக்கையிலிருந்து அசைய முடியாதபடி கட்டிப் போடும். கதையும் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ‘டெக்னிக்’கலாக, இதுவரை பார்த்திராத ‘சவுண்டிங்’, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், இரைச்சல் இல்லாத ஆனால் தரமான பின்னணி இசை ஆகியவற்றில் உலகத் தரத்தைக் கொண்டு வரும்போது அது உண்மையான பிராண்டாகவும் பிரம்மாண்டமாகவும் மாறிவிடுகிறது. இந்த இடத்தில்தான் இந்தக் கூட்டணியோடு நாங்கள் இணைந்து கொண்டோம். படத்தை முடித்துவிட்டுப் பார்த்தபோது எங்களுக்கே மிரட்சியாக இருந்தது. தற்போது ‘டிமாண்டி காலனி 2’ படத்துக்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை படம் 100 விழுக்காடு பூர்த்தி செய்யும்.
மாஸ் ஹீரோ படங்களைத் தயாரிப்பது அடுத்தகட்ட நகர்வாக இருக்குமா? - என்னளவில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மாஸ் நட்சத்திரங்கள்தான். தற்போது நாங்கள் வெவ்வேறு ஜானரில் நான்கு படங்கள் செய்து வருகிறோம். அவற்றில் ரஜினி, கமல், அஜித், விஜய் வரிசை நடிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இல்லாமலேயே மிரட்டலான மாஸ் படமாக ஒவ்வொன்றையும் உருவாக்குவோம். அந்த வரிசையில் எங்களின் முதல் மாஸ் அடையாளமாக ‘டிமான்டி காலனி 2’ இருக்கும்.
உங்களது மென்பொருள் மூலம் சினிமா பைரசியைத் தடுக்கும் திட்டம் உண்டா? - பைரசி என்பது இந்தியாவின் பிரச்சினை அல்ல; உலகத்தின் பிரச்சினை. சினிமா என்றல்ல; எல்லாத் துறையிலுமே பைரசி இருக்கிறது. குறிப்பாக சினிமாவில் இணையம் வழியான அதன் தாக்குதலை நாம் எதிர்கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் ‘டொமைன்’ கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. கிட்டத்தட்ட அது ‘டார்க் வெப்’ போலச் செயல்படுகிறது. அதை எதிர்கொள்ள வேண்டுமானால், பைரசியின் தரம், ஒருபோதும் அசலின் தரத்துடன் போட்டி போட முடியாத அளவுக்கு நமது படைப்பை மாற்றில்லாத ஒன்றாக உருவாக்க வேண்டும். ‘டிமாண்டி காலனி 2’யை திரையரங்கில் வந்து பார்த்தால்தான் அதன் திரை அனுபவத்தை முழுமையாகப் பெற முடியும். அதுதான் பைரசிக்கு நாங்கள் தரும் சவால். அதை எங்களது ஒவ்வொரு படைப்பும் அதே தரத்துடன் எதிர்கொள்ளும்.
