

ஆதி நடித்த, ‘ஈரம்’ படத்தின் மூலம் 2009 இல் இயக்குநராக அறிமுக மானார் அறிவழகன். ஹாரர் வகை சினிமாவுக்கு முற்றிலும் புதிய சித்தரிப்பை வழங்கியிருந்தது அந்தப் படம். தற்போது ‘சப்தம்’ படத்தின் மூலம் மீண்டும் ஆதி - அறிவழகன் கூட்டணி இணைந் துள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து பின்னணி இசை சேர்ப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இயக்குநர் அறிவழகனைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆதியுடன் இணைந்திருக்கிறீர்கள். இதுவும் ஹாரர் படமா? - ஆமாம்! காதல் படம், விளையாட்டுப் படம், க்ரைம் த்ரில்லர் என எல்லா வகையிலும் படம் செய்ய வேண்டும் என்கிற எனது ஆவல்தான் அறிமுகப் படத்துக்குப் பிறகு நான் மீண்டும் ‘ஹாரர்’ எடுக்காமல் இருந்ததற்குக் காரணம். மீண்டும் ஹாரர் எடுத்தால், அது ‘ஈரம்’ படத்தை ‘பீட்’ செய்யும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப. இந்தச் ‘சப்தம்’ படத்துக்கான ஒருவரிக் கதை கிடைத்தது. இதை நானும் ஆதியும் 3 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து விவாதித்தோம். அப்போது, சரியான தயாரிப்பாளர் அமைய வேண்டுமே என்று காத்திருந்தோம். எனது ‘குற்றம் 23’ படத்தை வாங்கி வெளியிட்ட 7ஜி பிலிம்ஸ் சிவா என்னை நம்பி வந்தார். நான் ஆல்பா பிரேம்ஸ் புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி ‘முதல் பிரதி’ அடிப்படையில் படத்தைத் தயாரிக்கிறேன்.
‘ஈரம்’ படத்தில் தண்ணீர் உருவத்தில் ஆவி வருவதுபோல் திரைக்கதை அமைத்தீர்கள். இதில் ‘ஒலி’யின் வடிவில் ஆவி வருகிறதா? - ஆமாம்! ஆனால், அதுவே மிகச் சவாலாகப் படத்தில் இருக்கிறது. ‘ஈரம் படத்துக்கு இசையமைத்திருந்த தமன்தான் இதற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு ஒலி வடிவமைப்பாளராக ’விக்ரம்’ உள்படப் பல படங்களுக்குப் பணியாற்றியிருக்கும் சச்சினை அமர்த்திக்கொண்டிருக்கிறேன். விதவிதமான சப்தங்களின் வழியாக எப்படி ஆவி வருகிறது என்பதைக் காட்டவிருக்கிறோம்.
நாயகன் ஆதியின் கதாபாத்திரம் என்ன? - ஒரு ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ ஆக வருகிறார். ஆவி, பேயை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான ஹாரர் படங்களில் பேயை அடக்க வருபவர்கள் விதவிதமான கெட் -அப் களில் வருவதைப் பார்த்திருப்போம். அவர்கள் அனைவரும் மந்திரம் - தந்திரம் என்று எதையாவது ஒன்றை வேடிக்கையாகச் செய்துகொண்டிருப்பார்கள். ஹாலிவுட் படங்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஆனால், ‘சப்தம்’ படத்தில் வரும் ‘கோஸ்ட்’ இன்வெஸ்டிகேட்டர் அப்படியல்ல; அவர் மும்பை ‘பேரா நார்மல் சொசைட்டி’யில் உறுப்பினராக இருப்பவர். ‘சயிண்டிபிக்’ ஆக ஆவியைப் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பவர். அவர் எல்லாரையும்போல்தான் இருப்பார். அறிவியல்தான் அவரது ஆயுதம். அவர் ஏன் ‘கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்’ ஆனார் என்பதற்கான காரணம் அழுத்தமாக இருக்கும். அதேபோல், குடும்ப உறவுகளால் பின்னிப் பிணைந்த உணர்வுபூர்வமான பின்கதை திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கும்.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - இதில் ஆதியுடன் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி எம்.எஸ்.பாஸ்கர். ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகாமுனி படத்தின் ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 56 நாள்களில் படப்பிடிப்பை முடித்துள்ளேன். படத்தின் எடிட்டிங் முடிந்துவிட்டது.