

கமல்ஹாசனிடம் ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவருடைய உதவியாளராகப் பணிபுரிந்தவர் சி.எஸ்.கார்த்திகேயன். அவர் ‘சபா நாயகன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள அப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘வேழம்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘போர்த்தொழில்’ என அசோக் செல்வன் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். அவரை இதில் கமர்ஷியல் நாயகன் ஆக்கியிருக்கிறீர்களா?
ஆமாம்! இதுவரை அவர் முழு நீள கமர்ஷியல் ஹீரோவாக எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அவர் இதுவரை பயணித்து வந்திருக்கும் பாதைதான் இத்தனை முழுமையான கமர்ஷியல் படத்துக்கு அவரைத் தகுதியாக்கியிருக்கிறது. இதில் பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், காதல், நட்பு என அத்தனை ‘எமோஷன்’களும் கொண்ட கதையில் நடித்திருக்கிறார். இதில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், நகைச்சுவை, சென்டிமென்ட் என எல்லாம் உண்டு.
என்ன கதை, அதில் அசோக் செல்வனுக்குச் சவாலாக அமைந்த பகுதி எது?
30 வயதுக்குள் ஒரு தமிழ் இளைஞன் எதிர்கொள்ளும் தற்காலத்தின் வாழ்க்கைதான் கதை. பள்ளிக் காலம் தொடங்கி அவனது பணி வாழ்க்கை வரையிலான ‘எமோஷனல்’ ரைடு என்று எடுத்துக்கொள்ளலாம். நாயகனின் பெயர் சபா. அவனது வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் ரசிகர்கள் அப்படியே தங்களுடையதாக உணர முடியும். அந்த அளவுக்கு இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் யதார்த்த நிகழ்வுகளையே காட்சிகளாக வைத்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு காட்சியும் கதையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்வதாக இருக்கும். எவ்வித நெருடலும் இல்லாமல் குடும்பத்துடன் ஜாலியாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் முழுமையான பொழுதுபோக்குப் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன். அசோக் செல்வனுக்குச் சவால் என்றால், இதில் 2 பையனாக நடிப்பதற்காக 4 வாரத்தில் 10 கிலோ எடையைக் குறைத்து சின்னப் பையனாக மாறி நடித்தார். அதேபோல் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற வகையில், காதல், நகைச்சுவை, நட்பு எல்லாவற்றிலும் நடிப்பின் மாறுபாட்டை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
கமர்ஷியல் படங்களில் மட்டும்தான் இன்று பாடல்களுக்கான இடம் என்று ஆகிவிட்டது?
ஏனென்றால் அதில்தான் பாடல்கள் வழியே கதை சொல்லமுடியும். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பாடல்களில் ஒன்றை வெளியே எடுத்தாலும் கதையின் ஓட்டமும் தொடர்ச்சியும் தடைப்படும். லியோன் ஜேம்ஸ் இசையால் உணர்வுகளை மீட்டிக்கொடுத்திருக்கிறார்.
மற்ற நடிகர்கள், படக்குழு பற்றிக் கூறுங்கள்..
மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, விவியா என பெரிய இளமைப் பட்டாளம் படத்தில் இருக்கிறது. பலர் யூடியூபில் ஏற்கெனவே நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். கிளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா, கேப்டன் மேகா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர்கள் தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள். நான் உட்பட பெரும்பாலும் புதிய திறமையாளர்கள் ஒன்று சேர்ந்து உழைப்பையும் கற்பனையையும் கொட்டிச் செதுக்கியிருக்கிறோம். இந்தப் படம் குடும்பப் பார்வையாளர்களுக்கு தீங்கு செய்யாத படம் என்கிற உறுதியை என்னால் கொடுக்க முடியும்.