

‘அ
றம்’ படத்தில் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் கலெக்டர் நயன்தாராவை ‘நடிப்புடா’ என்று கொண்டாடினார்கள் நம் ரசிகர்கள். அதே நயன்தாராவை ‘டோரா’விலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் ‘அழகுடா’ என்று ஆராதித்தார்கள். அழகையும் நடிப்பையும் ஒரே கதாபாத்திரத்தில் வெளிப்படுத்த முடியும் என்று ‘திருட்டுப் பயலே -2’ படத்தில் காட்டிய அமலா பால் இன்னும் ரன் அவுட் ஆகாமல் ரசிகர்களின் ஆதரவில் தொடர்கிறார். இந்த சீனியர் கதாநாயகிகளுக்கு நடுவில் நின்று ‘கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் நடனம்’ என்று கமர்ஷியல் கதாநாயகியாகத் தொடரும் கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கவே செய்கிறது.
ஆனால் தமிழ் சினிமாவில் 1990-களில் குஷ்புவில் ஆரம்பித்து சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா என்று இடைவிடாமல் தொடர்ந்துகொண்டிருந்த ‘கனவுக்கன்னி’ சங்கிலி சட்டென்று அறுந்துபோய், கடந்த 10 ஆண்டுகளில் ரசிகர்களை எல்லா வகையிலும் ஆக்கிரமித்துக்கொண்ட கனவுக்கன்னி என்று ஒருவர் உருவாகவே இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால், ஆன்ட்ரியா, அஞ்சலி, எமி ஜாக்சன் என்று பத்தாண்டுகளைக் கடந்து கதாநாயகியாகத் தாக்குப்பிடிக்க முடிந்தவர்களால் ‘கனவுக் கன்னி’ எனும் நிலையை எட்டமுடியவில்லை.
தினம் தினம் புதிய கதாநாயகிகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் மீது கனவுக் கன்னிக்கான பெரு வெளிச்சம் விழப்போகிறது என்று எதிர்பார்க்கும்போதெல்லாம் அடுத்த ஏதோ ஒரு கணத்தில் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, பிந்து மாதவி, லட்சுமி மேனன், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய கதாநாயகிகளுக்குப் பக்கத்தில் கனவுக்கன்னி எனும் வெளிச்சம் கடந்துசெல்லும் அந்திப் பொன்நிறமாய் மின்னி மறைந்தது. இவர்கள் அனைவருமே முன்னணிக் கதாநாயர்களால் திரைப்படங்களில் துரத்தித் துரத்திக் காதலிக்கப்பட்டவர்கள்தான். தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமான தாவணியிலும் சுடிதாரிலும் வளையவந்து பாங்காக் நகர வீதிகளில் டூயட் பாடியவர்கள்தான். ஒருசிலரைத் தவிரத் தமிழில் தாங்களே குரல்கொடுத்து நடிக்க முடியாமல் பெரும்பாலான கதாநாயகிகள் தடுமாறியதும் கமர்ஷியல் கதாநாயகிகளாக, நாயகர்களின் ‘காதல் படலத்துக்கு’ அலங்காரப் பூக்களாய் ஆனவர்கள்.
கனவுக்கன்னி எனும் அபூர்வ அந்தஸ்து அழகிலிருந்து மட்டும் உருவாவதில்லை. நடிப்பில் அற்புதமான முகபாவங்களை வெளிப்படுத்துவதாலும், ஆபாசமற்ற நடன அசைவுகளில் வெளிப்படுத்தும் அசலான நளினம் உருவாக்கும் ஈர்ப்பினாலும் இது உருவாகிறது. மேலும் கதாநாயகனின் ‘லவ் இன்ட்ரஸ்ட்’ என்ற கறிவேப்பிலை வேடங்களை அதிகம் ஏற்காமலிருப்பது, அவனது லட்சியத்தில் பங்கெடுக்கும் கதாபாத்திரமாகவும் மாறுவது என்ற இன்னும் சில அம்சங்களும் ஒருங்கே அமையும்போதுதான் ஒரு நாயகிக்குக் கனவுக்கன்னிக்கான அரியாசனத்தை ரசிகர்கள் தம் மனதில் உருவாக்குகிறார்கள். இவற்றைத் தாண்டி சிறியவர் முதல் பெரியவர் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவராலும் ரசிக்க இயலும் ஏதோ ஒரு அரிய, அபூர்வமான அம்சம் தேவைப்படுகிறது.
இன்று ரசிகர்களின் ஆதரவைப் பெற்று ஐந்து படங்களைக் கடந்து நடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, சாய் பல்லவி ஆகிய அனைவரிடமும் அழகு, நடிப்பு இரண்டும் ஒருங்கே அமைந்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும், அவை வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும். இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள் வெளியாக வேண்டும்.
பல மொழிப் படங்களில் கவனம் செலுத்தாமல், ஒரே மொழியில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று பல பிரயத்தனங்களை அவர்கள் செய்தாக வேண்டியிருக்கிறது. இன்று சினிமா இருக்கும் நிலையில், கதாநாயகனுக்கு இணையான சமத்துவமும் ஊதியமும் தரப்படாத உலகில் கனவுக்கன்னி அந்தஸ்து கதாநாயகிகளுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் கனவுதான்.