

படைப்பாக்கம், படத்தொகுப்பு இரண்டுக்காகவும் ஆறு முறை தேசிய விருது பெற்றவர் பி.லெனின். அவர், கதை, திரைக்கதை எழுதிப் படத்தொகுப்பும் செய்துள்ள படம் ‘கட்டில்’. அப்படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருப்பவர், நடிகர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு. இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
எடிட்டர் பி.லெனின் கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் பணி யாற்றுவதிலிருந்து விலகியிருந்தார். அவருடன் எப்படி இணைந்தீர்கள்? - அவருடைய அப்பா இயக்குநர் பீம்சிங் தமிழ் சினிமாவில் பொற்காலத்தைப் படைத்த இயக்குநர்களின் முதன்மையானவர். ஆனால், அப்பாவின் புகழைச் சிறிதுகூடப் பயன்படுத்திக்கொள்ளாமல், தன்னுடைய படைப்பாற்றலை மட்டுமே வைத்து தமிழ்த் திரையுலகில் ஒரு ஐகானாக மாறியவர்.
படச்சுருள் காலம், தற்போது டிஜிட்டல் சென்சார் காலம் என இரண்டிலும் அவருடைய ‘எடிட்டிங் டேபி’ளில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் படத்தொகுப்பு என்பது கதை சொல்லும் கலை என்பதைப் பாமர ரசிகனுக்கும் புரிய வைத்தன.
‘பாரதி’ படத்தில் நடித்ததிலிருந்து அவருடைய நட்பைப் பெற்றேன். அப்படிப்பட்டவர், தமிழ் சினிமாவின் கதை வறட்சியையும் காட்சி மொழியை நம்பாத போக்கையும் பார்த்தே விலகியிருந்தார். என்றாலும் மாணவர்களுக்குத் திரைப்படக் கலையை இலவசமாகக் கற்றுக்கொடுத்து வந்தார். அவரது படைப்பாளுமையை ஒரு திரைப்பட மாணவனாக, நடிகனாகப் பார்த்து வியந்தவன் நான்.
அவரை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற பேராவலோடு அவரை அணுகினேன். அப்போதுதான் தனது குடும்பத்துக்குச் சொந்தமான, பல தலைமுறைகளைக் கடந்து பயணிக்கும் பூர்விகமான மரக் கட்டிலை மையமாக வைத்து அவர் எழுதியிருந்த குடும்பக் கதையை என்னிடம் சொன்னார்.
அது நம் அனைவருடைய கதையாக இருந்தது. கதையைக் கேட்டதும் நெகிழ்ந்துபோய்விட்டேன். நீங்களே படத்தொகுப்பும் செய்து, பட உருவாக்கம் நெடுகிலும் பங்கேற்க வேண்டும் என்கிற அன்புக் கட்டளையை அவருக்குப் போட்டு, மீண்டும் திரையுலகுக்குள் அவரை அழைத்துக் கொண்டு வந்தேன். அவரது பங்களிப்பும் பலமும் ஆசீர்வாதமும் ‘கட்டில்’ படத்துக்குக் கிடைத்தது இந்தப் படத்தை உணர்வுகளின் தொகுப்பாக மாற்றிவிட்டது.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? - நான் நாயகனாகவும் சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடித்திருக்கிறோம். எனது சகோதரனாக விதார்த்தும் அம்மாவாக கே. பாலசந்தர் சாரின் மருமகள் கீதா கைலாசமும் நடித்திருக்கிறார்கள். கனிகா சினேகன், சம்பத் ராம், இந்திரா சௌந்தர்ராஜன், செம்மலர் அன்னம், ஓவியர் ஷ்யாம், ‘மெட்டி ஒலி’ சாந்தி, ‘காதல்’ கந்தாஸ் உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள்.
கீதா கைலாசத்தை ‘கட்டில்’ படத்துக்குத்தான் முதன் முதலாக அழைத்து நடிக்க வைத்தேன். இப்போது அவர் 15 படங்களைக் கடந்து பிஸியான நடிகராகியிருக்கிறார். சிறார் நடிகர் நிதிஷை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி யிருக்கிறேன். இப்போது அவன் மிகப் பிரபலமான சிறார் நட்சத்திரமாக மாறியிருக்கிறான். மிக முக்கியமாக லெனின் சார் முன்புபோலவே திரையுலகில் மீண்டும் பிஸியாகிவிட்டார்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, நீங்கள் இயக்கிய ‘கருவறை’ குறும்படத்துக்காகத் தேசிய விருது கிடைத்திருக்கிறதே… ‘கட்டில்’ வெளியீட்டுக்கு முன்னர், எங்கள் கூட்டணிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகவும் வெற்றியாகவும் இதைப் பார்க்கிறேன். வரும் 17ஆம் தேதி குடியரசுத் தலைவரின் கையால் விருதுபெற டெல்லிக்குச் செல்கிறோம்.
குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது, வறுமை யினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படும் சமூக அவலத்தைப் பற்றி ‘கருவறை’ குறும்படத்தில் பேசியி ருக்கிறோம். காந்த் தேவா மிகச்சிறந்த இசையமைப்பாளர். அவர் ‘கட்டில்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கும் ‘கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்’ என்கிற பாடல் இணையத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து, "கோயிலிலே
குடியிருந்தோம் நாங்கள்
அங்கே
குடியிருந்த
எல்லாரும் தெய்வங்கள்
சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண்கள் எல்லாம் புஷ்பங்கள்
வாழ்வே வழிபாடு"
என்று எழுதியப் பாடலை தமிழ் உட்பட சித்ஸ்ரீராம் 4 மொழிகளில் பாடியிருக்கிறார். இந்த ஒரு பாடல் தவிர மற்ற மூன்று மொழிகளுக்குத் தனித்தனி மெட்டுக்களைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது ‘கட்டில்’.
- jesudoss.c@hindutamil.co.in