

எப்போதாவது குறிஞ்சி மலர் போல் திரையுலகிலிருந்து ஒரு சில புத்தகங்கள் எழுதப்பட்டு அச்சுக்கு வந்துவிடும். அப்படியொரு அபூர்வமான அனுபவப் பகிர்வுதான், இயக்குநர் மணிவண்ணன் என்கிற ஆளுமையை அருகிலிருந்து பார்த்த, பழகிய, அவரிடம் பணியாற்றிய கவிஞர், எழுத்தாளர் ஜீவபாரதியின் இந்தப் பதிவுகள்.
90களுக்குப் பிறகான தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் மணிவண்ணனும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனும் பொதுவுடைமை, தமிழ் தேசியக் கருத்தியல் ஆகியவற்றைத் தங்களுடைய திரைப்படங்களின் வழியாக முன்னெடுத்தவர்கள்.
குறிப்பாக மணிவண்ணன் இளைஞராக இருந்தபோது நக்சல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்து பிறகு அதிலிருந்து விலகியவர் என்பதையும் பொதுவுடைமை இயக்கத்தில் சில காலம் பங்குபெற்று விலைவாசி உயர்வு போராட்டத்தில் கைதாகி தா.பாண்டியனுடன் 90 நாள்கள் சிறைப்பட்டவர் என்பதை இந்த நூலின் வழியாக அறியும்போது மணிவண்ணன் என்கிற ஆளுமையின் வெளித்தெரியாத மற்றொரு பக்கம் புலப்படுகிறது.
அரசியல் நையாண்டியை அசலான தன்மையுடன் தனது படங்களின் முன்னெடுத்த மணிவண்ணன், 300க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என ஒரு நடிகராகவும் மக்களை மகிழ்வித்த கலைஞர். ஓர் இயக்குநராக அவரது ஒவ்வொரு படங்களுக்குப் பின்னாலும் நடந்த நிகழ்வுகளையும் அவருடன் நட்பில் இருந்தவர்களையும் பற்றிய ஏராளமான தகவல்களை மணிவண்ணனின் அருகிலிருந்து கண்ட நேரடிச் சாட்சியாக ஜீவபாரதி இப்புத்தகத்தில் பெரும் புதையலாகக் கொடுத்திருக்கிறார்.
அடிப்படையில் ஒரு எழுத்தாளர், கவிஞர் திரைப்படத் துறையில் ஒரு சிறந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதில் விளையும் அற்புதங்கள் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை இந்நூலின் வழி அறியலாம். கூடவே மணிவண்ணனின் தன்வரலாற்றின் ஒரு பெரும்பகுதியையும்தான்!