

‘மரகத நாணயம்’, ‘புருஸ்லீ’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் ‘கன்னிமாடம்’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பெருமாள் வரதன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘நந்திவர்மன்’. ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி கவனம் ஈர்த்த சுரேஷ் ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படத்தின் கதை என்ன? - இது கற்பனையான வரலாற்றுக் கதை. நந்திவர்மன் என்கிற பல்லவ அரசன் செஞ்சியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறான். அவன் ஒரு சைவப் பேரரசன். அவனது ராஜ்ஜியத்தின் தலைநகராக செஞ்சி இருந்தாலும் அதற்கு அருகில் உள்ள அனுமந்தபுரம் என்கிற கிராமத்தில் சிவாலயம் ஒன்றை எழுப்பி அந்த ஊரிலேயே வசித்து வருகிறான். இதற்கிடையில் கோரஸ் என்பவன் தலைமையில் பல தலைமுறைகளாக மக்களைக் கொன்று வரும் கொள்ளைக் கூட்டம், பல ராஜ்ஜியங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது.
கோரஸ் அனுமந்தபுரம் சிவாலயம் பற்றியும் அங்குள்ள செல்வம் பற்றியும் கேள்விப்பட்டு அதைக் கொள்ளையிட வருகிறான். அப்போது அந்த ஆலயத்தில் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டிருக்கிறான் நந்திவர்மன். அவனது முதுகில் வாளைப் பாய்ச்சி தாக்குகிறான் கோரஸ். அப்போது தன்னிடமிருக்கும் ‘அரூப’ வாளால் கோரஸைக் கொன்றுவிட்டு நந்திவர்மனும் அங்கேயே இறந்து போகிறான்.
காலம் உருண்டோடுகிறது. அனுமந்தபுரம் மண்ணுக்குள் புதைந்துவிடுகிறது. அதை அகழாய்வு செய்யத் தொல்லியல் குழு ஒன்று அந்த ஊருக்கு வருகிறது. அதேநேரம் அந்த ஊரில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள் பற்றி புலன் விசாரணை செய்வதற்காக அங்கே வருகிறார் காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன். அதன் பின்னர் அகழாய்வு குழுவுக்கும் நாயகனுக்கும் இடையில் நடக்கும் மோதலும் முரண்களும்தான் கதை.
கற்பனையான கதை என்று சொன்னீர்கள். ஆனால், நிஜத்தில் நடந்தது போலவே இருக்கிறதே? - இது எங்களுக்கே ஆச்சரியமான ஒன்றுதான். முதலில் திரைக்கதை எழுதி முடித்து விட்டு செஞ்சிக்கோட்டைக்கு லொக்கேஷன் பார்க்கச் சென்றோம். எதிர்பாராத ஆச்சரியமாக அங்கே அனுமந்தபுரம் என்கிற ஊர் இருந்ததுடன் ‘வீரபத்திரர்’ ஆக அருள் பாலிக்கும் சிவனுக்கு அங்கே மிகப் பழமையான சிவாலயம் இருப்பதையும் பார்த்து நம்ப முடியாமல் திகைத்தோம்.
அதைவிட ஆச்சர்யம், எங்கள் கதையில் வருவதுபோலவே இப்போதும் செஞ்சிக் கோட்டைக்குக் கீழே அமானுஷ்ய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அந்த ஊரின் மக்கள் கதை கதையாகச் சொன்னார்கள். இதைத் தற்செயல் என்று நம்ப முடியவில்லை.
படக்குழு பற்றி - ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தப் படத்துக்குப் பிறகு நல்ல கதைக்காகக் காத்திருந்த சுரேஷ் ரவி இந்தக் கதையைக் கேட்டதும் பிரம்மித்துப்போய், “எனது காத்திருப்புக்கு உண்மையாகவே ஒரு அர்த்தம் கிடைத்துவிட்டது” என்று கூறி கடும் உழைப்பைக் கொட்டி நடித்துக்கொடுத்திருக்கிறார்.
இந்தக் கதையைக் கேட்டதுமே எனக்கு முன்பணம் கொடுத்து ‘இந்தக் கதையை நான் தான் தயாரிப்பேன்’ என்று பிரம்மாண்ட அகழாய்வுக் குழிகள் அமைக்கவும் கிராஃபிக்ஸ் தரத்துக்காகவும் பணத்தைக் கொட்டித் தயாரித்திருக்கிறார் அருண்குமார் தனசேகரன்.