

ஆண் - பெண் இடையில் தோன்றுவதை ‘இயற்கையான காதல்’ என்று நம்புகிற சமூகம், ஆண் - ஆண், பெண் - பெண் இடையே உணரப்படும் காதலும் இயற்கையானதுதான் என்பதை ஏற்க மறுக்கிறது.
இன்று திருநர் சமூகம் குறித்து ஓரளவுக்குப் புரிதல் ஏற்பட்டிருப்பதுபோல், தன்பாலினத்தவரை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் காலம் ஒன்று வரும் என்கிற நம்பிக்கையைப் பார்வையாளர்களின் மனதில் விதைக்கிறது ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’என்கிற புதிய திரைப்படம். ‘ஷார்ட்ஃபிளிக்ஸ்’ (ShortFlix) ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் ஈர்ப்பான அம்சம், பாலியல் தேவைக்கான உறவைக் கடந்து, இரண்டு தன்பாலின ஈர்ப்பாளர்கள் காதலைச் சமூக விடுதலையின் ஓர் அங்கமாக உணரமுடியும் என்பதைக் காட்டியிருப்பதுதான்.
மத ரீதியாக இரண்டு வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் பிறந்து, வளர்ந்தவர்கள் ஷகிராவும் வினோதாவும். தானொரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை உணரும் வினோதா, அதை மனம் திறந்து பெற்றோரிடம் சொல்கிறார். அதனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறி ஆவணப்பட இயக்குநராகத் தனது தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். ஆவணப்படம் ஒன்றை எடுப்பதற்காக தரங்கம்பாடிக்கு வரும் அவர், அதற்கு உதவிசெய்யும் ஊர்ப் பெரியவர் கமால் அகமது வீட்டில் தங்குகிறார்.
பொதுவெளியில் தன்னம்பிக்கையும் சுதந்திரமும் மிக்க பெண்ணாக அங்குள்ள மக்களைப் பேட்டி கண்டு படமாக்கும் வினோதாவின் ஆளுமையைக் காணும் ஷகிரா, அவள் மீதான தன் காதலை உணர்கிறாள். அவளுக்கு முன்பே, தனது வாழ்க்கையை முழுமைப்படுத்தும் காதல் துணை ஷகிராதான் என்று வினோதாவும் கசிந்துருகுகிறாள். இவர்களது காதலை கமாலும் அந்த ஊரில் வாழும் மக்களும் எவ்வாறு அணுகினார்கள், வினோதாவும் ஷகிராவும் வாழ்வில் இணைந்தார்களா என்பது கதை.
90 நிமிடமே ஓடும் சற்றே பெரிய குறும்படமான இதன் திரைக்கதை, ஷகிராவுக்கும் இர்ஃபானுக்கும் ஏற்பாடு செய்யப்படும் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பெண்ணுக்கும் பெண்ணுக்குமான தன்பாலினக் காதலை, காமம் என்கிற களத்துக்குள் கொண்டுவந்து, இரண்டாம் தரமான பாலியல் காட்சிகளைக் காட்டி மலினப்படுத்திவிடாமல், அது உணர்வு சார்ந்த இயற்கையின் தேடல் என்பதை ஒரு நவீனக் கவிதைபோல் விரித்து வைக்கிறார் இயக்குநர் ஜெயராஜ் பழனி. வினோதா - ஷகிரா இடையிலான காதலைப் புனிதப்படுத்தாமல், அதேநேரம் அதன் இயல்பூக்கத்தை, அது மலரும் தருணங்களை, வெகுஜன சினிமாவுக்குரிய திரைமொழியில் சித்தரித்திருக்கிறார்.
அவருக்கு சதீஷ்குமாரின் திரைக்கதை, வசனம் பேரளவில் கைகொடுத்திருக்கிறது. ஒரு தன்பாலினக் காதலுக்கு நடுவில், ஷகிராவின் மீது பள்ளிக்காலம் தொடங்கிப் பொத்தி வைத்த இர்ஃபானின் காதலை, அதன் நீட்சியை ‘கிளிஷே’ ஆகாத வண்ணம் சித்தரித்திருப்பதற்கு இயக்குநருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் தனிப் பாராட்டு.
ஷகிராவாக நடித்துள்ள நிரஞ்சனா, வினோதாவாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி, இர்ஃபானாக நடித்துள்ள அர்ஷத் ஆகியோருடன் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களைக் கதாபாத்திரமாக உணரவைத்துவிடுகிறார்கள். தர்ஷன் குமாரின் இசை, காதலின் புதிய வண்ணத்தை நெருடல் இல்லாமல் இசைத்திருக்கிறது. குறைந்த செலவில் படமாக்கி, குறைந்த பார்வை நேரத்தில் நிறைவான திரை அனுபவத்தை வழங்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தைத் தயக்கமின்றி ஆதரிக்கலாம்.