Last Updated : 23 Sep, 2023 04:15 PM

3  

Published : 23 Sep 2023 04:15 PM
Last Updated : 23 Sep 2023 04:15 PM

அசோக் செல்வனின் ‘அழகான’ பதிலடி!

ஆடம்பரமான திரையுலகத் திருமணங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட தமிழ் ரசிகர்களுக்கு, அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் இருந்த எளிமை வியப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால், கீர்த்தி பாண்டியனின் தந்தையான அருண்பாண்டியன், தனது சொந்த விவசாயப் பண்ணையில், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் நண்பர்களும் உறவினர்களும் சூழ திருமணத்தை நடத்தினார். அப்பா அழைக்கும்போதெல்லாம் தங்களது விவசாயப் பண்ணைக்குச் சென்று, நாற்று நடுவது, களை பறிப்பது, சுத்தம் செய்வது உட்படப் பண்ணை வேலைகளைச் செய்து பழக்கப்பட்டவர்கள் அருண்பாண்டியனின் மகள்கள். தங்கத் தட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உடல் உழைப்பைத் தனது மகள்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார் அருண் பாண்டியன்.

அதேபோல், தமிழ் சினிமாவில் மிக இயல்பான நடிப்பின் மூலம் ஏற்கும் கதாபாத்திரமாகத் தன்னை உணர வைக்கும் ஆற்றல் மிக்க திரைக் கலைஞனாகத் தன்னை தொடர்ந்து நிரூபித்து வருபவர் அசோக்செல்வன். குறிப்பாகக் காதல் கிசுகிசு எதிலும் சிக்காமலும் மது, புகை உள்ளிட்ட தீயப் பழக்கங்கள் இல்லாதவராகவும் இயக்குநர்களின் நடிகர் எனப் பெயர் பெற்றிருக்கும் அசோக் செல்வனின் கலையாளுமைக்கு எடுத்துக்காட்டக் கொள்ள, அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘வேளம்’, ‘போர்த்தொழில்’ ஆகிய இரண்டு படங்கள் போதும்.

அசோக் செல்வன் - கீர்த்தி

இத்தனை சிறந்த நடிகரான அசோக் செல்வனும், தமிழ் சினிமாவில் இதுவரை எந்தச் சர்ச்சையிலும் சிக்காத மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் இளைய மகள் கீர்த்தியும் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ‘புளூ ஸ்டார்’ என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு, அதைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டபின்னர், அதை முறைப்படி தங்கள் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி, அவர்களது இசைவுடன் திருமணம் முடித்தனர். இந்தத் திருமணத்தைத் திரையுலகினரும் அசோக்செல்வன், அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ரசிகர்களும் வாழ்த்திக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஆனால், எல்லாவற்றையுமே வெளிப்பூச்சுடனும் பொறாமையுடனும் நோக்கும் ஒரு கூட்டம், எப்போதும் இருக்கவே செய்யும் அல்லவா? அவர்கள் செய்த செயல்தான் பொறுமையும் சிரித்த முகத்தோடும் வலம் வரும் அசோக் செல்வனையே சீற்றம் கொள்ள வைத்திருக்கிறது. அசோக் செல்வனுடைய சமூக வலைத்தளப் பக்கத்துக்குச் சென்ற இந்தக் கூட்டம், கீர்த்தி பாண்டியனின் தோற்றம் குறித்து தரம் தாழ்ந்த பதிவுகளைப் போட்டது. சில நாள் பொறுமை காத்த அசோக் செல்வன், திருமணத்துக்குப் பிறகு மனைவி கீர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வசீகரமான 3 ஒளிப்படங்களைப் பகிர்ந்து “ உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் இருக்கிறேன்” (With the most beautiful woman in the world) என்று கோணல் மனது கொண்டவர்களை தன் பதிலால் ஓங்கி மிதித்து பதிலடி கொடுத்திருக்கிறார். இதன்பின்னர், அந்தக் கூட்டம் வாயை மூடிக்கொண்டு போய்விட்டது.

அழகு என்றால் என்ன என்பது பற்றி, திரைப்படங்கள் உருவாக்கி வந்துள்ள கற்பனைகளாலும் அழகுச் சாதனச் சந்தை விளம்பரங்கள் வழியே திணிக்கப்பட்டக் கற்பிதங்களும் தான் இதுபோன்ற அக்கப்போர்களுக்குக் காரணம். உண்மையில் அறிவின், அகத்தின், ஆரோக்கிய உடலின் அழகுதான் உண்மை அழகு.

பரந்த சிந்தனைகள், எல்லாத்தரப்பினரையும் ஏற்றுக்கொள்ளும் உண்மையான அன்பு, இயற்கையோடு இணைந்த உணவு, இயற்கையாக மலரும் புன்னகை ஆகியவற்றை உடலுக்கு அணிகலனாய் அணிந்துகொண்டாலே ஆண் - பெண் ஆகிய இருபாலரது தோற்றப் பொலிவுக்கு ஒருபோதும் குறைவிருக்காது, அறிவு சார்ந்தோ, உடலியல் திறன்கள் சார்ந்தோ வெற்றிபெற்ற ஆண்களும் பெண்களும் நீண்ட காலம் அனைவராலும் போற்றப்படுவதுடன் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகிறார்கள். உண்மையில் மிக அழகானவர்கள் இவர்களே.

அறிவும் அதன்வழி பெற்ற ஆற்றலும்தான் மனதுக்குத் தன்னம்பிக்கையையும் உலகத்துக்கு பயனையும் கொடுக்கிறது. வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான தன்னம்பிக்கை, சுயமரியாதை, ஒழுக்கம் ஆகியவற்றுடன் இனிய அணுகுமுறையும் சேர்ந்து இருப்பதுதான் அழகு. பார்வை, நடை, உடை, கம்பீரம், விவேகம், அறிவு, திறமை, பண்பு எல்லாம் சேர்ந்து இருப்பதுதான் அழகு. அழகையும் ஆரோக்கியத்தையும் தனித்தனியே பிரிக்கத் தேவையில்லை. அகத்தின் அழகு முகத்தின் தெரியும் என்று நம் முன்னோர் உணர்ந்து சொன்னது இதைத்தான், ஆண்- பெண்ணிடம் நிலையாக இருக்கும் அழகு, அக அழகுதானே தவிர, சாதனை புரிவதற்கு புற அழகு ஒருபோதும் ஒரு பொருட்டல்ல. இந்தப் புரிதல் ஏற்படும்போது, அடுத்தவர்களைக் குறை சொல்லி இன்பம் காணும் கூட்டம் ஒழிந்துபோய்விடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x