Published : 08 Sep 2023 06:12 AM
Last Updated : 08 Sep 2023 06:12 AM

கோலிவுட் ஜங்சன்: தமிழில் சூப்பர் ஹியூமன்ஸ் கதை!

சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சஸ்பென்ஸ் - ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'வெப்பன்'. மில்லியன் ஸ்டுடியோ சார்பில் மன்சூர், அஜீஸ், அப்துல் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கும் பான் இந்தியத் திரைப்படம் இது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பை முதல் கட்டமாக ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடத்தித் திரும்பியிருக்கிறது படக்குழு.

படம் குறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறும்போது: “தென்னிந்தியாவில் டி.சி. காமிக்ஸ், மார்வெல் போல் ஒரு சூப்பர் ஹியூமன் யுனிவர்ஸை கதைக் களமாகக் கொண்டு ஒரு தமிழ்த் திரைப்படம் உருவாகியிருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் தனது காட்சிமொழியை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு ‘கான்செப்ட்’டை தமிழ் சினிமாவிலும் எடுக்க முடியும் என நினைத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். இதில் எனக்கும் முக்கியமான வில்லன் கதாபாத்திரம். சத்யராஜ் சார் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாக செய்துள்ளார். அவர் நடித்த ஆக் ஷன் காட்சிகளைப் பார்த்து எனக்கே பயமாக இருந்தது” என்றார்.

மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாரா!

‘தனி ஒருவன்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ‘இறைவன்’. ‘என்றென்றும் புன்னகை', ‘மனிதன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அகமது இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேரக் கிடைத்து வருகின்றன. இப்படத்தில் 12 கொலைகளைச் செய்திருக்கும் சைக்கோவாக பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் நடித்திருக்கிறார்.

‘கொடூரக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தரும் வரைக் காத்திருக்க முடியாது’ என்று கூறி அவர்களை ‘என்கவுண்டர்’ என்கிற பெயரில் தீர்த்துக் கட்டும் மன அழுத்தம் கொண்ட காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் - ஜெயராம் தயாரித்துள்ள 'இறைவன்' இம்மாத இறுதியில் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

சச்சின் வெளியிட்ட ‘800’ ட்ரைலர்! - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை கிரிக்கெட் அணிக்கு வலிமை சேர்த்த வீரர், தமிழரான முத்தையா முரளிதரன். ‘800’ என்கிற தலைப்பில் உருவாகி வந்த அவரது பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் நடிக்கக் கூடாது என சர்ச்சையானதைத் தொடர்ந்து படத்திலிருந்து அவர் விலகினார். அவரது இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற மதூர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்து முடித்துள்ளார்.

இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகர். தொலைக்காட்சி நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் புகழ்பெற்று அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். ‘800’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டு ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார். சென்னையிலிருந்து இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டு படத்தின் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதியை வாழ்த்தித் திரும்பியிருக்கிறார்கள்.

சொல்லியடித்த கோபி - சுதாகர்! - வடிவேலு, கவுண்டமணி அளவுக்கு இல்லாவிட்டாலும் மீம்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் அளவுக்கு 50 லட்சம் பார்வையாளர்களின் மனங்களை வென்றுள்ளனர் யூடியூப் நட்சத்திர இணையான ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி - சுதாகர். நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களான இவர்கள் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கும் தலைப்பு சூட்டப்படாத படத்தை விஷ்ணு விஜயன் இயக்கி முடித்திருக்கிறார்.

கோபி - சுதாகருடன் விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதைக் காணொளி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர். கல்லூரி வாழ்க்கையின் நகைச்சுவைக் கொண்டாட்டமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அறிவித்தபடி ஜனவரியில் தொடங்கி ஆகஸ்டில் படத்தை முடித்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x