

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘மதராஸ் மாகாண’மாக இருந்தது தமிழ்நாடு. அதன் தலைநகரான சென்னைக்கு, இதயம்போல் இயங்கிய பகுதிகள் பல. அவற்றில் மவுண்ட் ரோடு (அண்ணா சாலை), திருவல்லிக்கேணி, பிராட்வே, ஹைகோர்ட், ஜார்ஜ் டவுன், மயிலாப்பூர் ஆகியவற்றில் நகர வாழ்க்கை செழித்து வளர்ந்திருந்தது.
குறிப்பாக, அன்றைய மதராஸ்வாசிகளின் பொழுதுபோக்கை உற்சாகம் மிகுந்த ஒன்றாக மாற்றிவிட்டிருந்த 17 திரையரங்குகள், மவுண்ட் ரோடு, பிராட்வே, ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டவை. இந்தப் பகுதிகளில் திரையரங்குகளைப் போலவே, நாடகக் கொட்டகைகளும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆடிப் பாடிக் களித்த ‘பால் ரூம்’ அரங்குகளும் இயங்கின.
இப்பகுதிகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட நூறாண்டு கண்ட பல திரையரங்குகள் தற்போது இல்லை. மவுண்ட் ரோடு, வாலாஜா ரோடு, எல்லீஸ் ரோடு ஆகிய மூன்று சாலைகள் சந்தித்த பகுதி ‘மவுண்ட் ரோடு ரவுண்டானா’வாகப் புகழ்பெற்றிருந்தது. இப்பகுதியைச் சுற்றி முளைத்த திரையரங்குகளும் உணவகங்களும் ரொட்டிக் கடைகளும் அந்தப் பகுதியைச் சென்னையின் உல்லாசபுரிபோல் மாற்றியிருந்தன.
படச்சுருள் திரையிடல்: மவுண்ட் ரோடின் ரவுண்டான பகுதியைச் சுற்றிச் சுற்றி எலெக்ட்ரிக், எல்பின்ஸ்டன், நியூ எல்பின்ஸ்டன், கெயிட்டி, கேஸினோ, நியூ குளோப், வெலிங்டன், மிட்லேண்ட், ஓடியன், பிளாஸா, பாரகன், ஸ்டார் ஆகிய திரையரங்குகள் 1913இல் தொடங்கி 1936க்குள் திறக்கப்பட்டன. இந்தத் திரையரங்குகளில் தற்போது எஞ்சி நிற்பது கேஸினோ மட்டுமே. 1950களுக்குப் பிறகு எழுந்த இருபதுக்கும் அதிகமான ஒற்றைத் திரை கொண்ட திரையரங்குகள் வாழ்வை முடித்துக்கொண்டன.
அதேநேரம், ‘மல்டி பிளக்ஸ்’ திரையரங்கு வளாகங்கள் எழுந்தன. அவற்றில் சத்யம் சினிமாஸ், தேவி திரையரங்க வளாகம், அண்ணா சாலையின் வெகு அருகில் உள்ள ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் அமைந்துள்ள உட்லேண்ஸ் ஆகியன மட்டுமே தற்போது தப்பிப் பிழைத்திருக்கின்றன. அண்ணா திரையரங்கு ஒற்றைத் திரையாகத் தாக்குப் பிடித்துவரும் ‘மினி தியேட்டர்’ .
அதேபோல், இருபதுகளின் பிராட்வேயிலும் ஜார்ஜ் டவுனிலும் பிராட்வே, நேஷனல், ரீகல், ஸெலக்ட், கினிமா சென்ட்ரல் ஆகிய திரையரங்குகள் புகழ்பெற்றிருந்தன. இவற்றில் நேஷனல் பின்னர் மினர்வா எனப் பெயர் மாறித் தற்போது பாட்ஷா திரையரங்காகப் படச்சுருள் பிரதிகளைக் கொண்டு பழைய படங்களை மட்டும் திரையிட்டு நினைவுகளைக் கிளறிவிடும் அதிசயத்தை இப்போதும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
திரையரங்காக மாறிய சந்தை: சென்னையில் பேசும் படத்தைத் திரையிட்ட முதல் திரையரங்கு ‘கெயிட்டியா? அல்லது ‘கினிமா செண்ட்ர’லா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. கல்கத்தா, புனே, மும்பை, மைசூர் ஆகிய நகரங்களில் திரையரங்குகளைக் கட்டி நடத்தி வந்த வட இந்தியரான ஜே.எஃப்.மதன் என்பவரால் மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதியில் ‘எல்பின்ஸ்டன்’ திரையரங்கு 1915இல் கட்டப்பட்டது.
(‘நியூ’ எல்பின்ஸ்டன் அதே பகுதியில் 1932இல் கட்டப்பட்ட அதே பெயர்கொண்ட மற்றொரு திரையரங்கு) ‘எல்பின்ஸ்டன்’ திரையரங்கு எழுந்த இடத்தில் அதற்கு முன்னர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் 150 பேர் அமரக்கூடிய ‘எம்பயர்’ என்கிற சொகுசுத் திரையரங்கு ஒன்று இயங்கி வந்துள்ளது. அக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர், அதை வாங்கிய ஜே.எஃப்.மதன், பால்கனியுடன் கூடிய பிரம்மாண்டத் திரையரங்கை அங்கே கட்டினார்.
அதே காலகட்டத்தில் வடசென்னையின் (பிளாக் டவுனாக இருந்து மக்கள் போராட்டத்துக்குப் பின் ‘ஜார்ஜ் டவுன்’ எனப் பெயர் மாற்றப்பட்ட பகுதி) ஏழு கிணறு பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் பலசரக்கு, பால், நெய், காய்கனி வியாபாரம் என அங்காடி ஒன்றைச் சொந்தமாக நடத்திவந்தார், பொன்னேரியின் ஜமீன்தாரான வி.முருகேசன்.
தொழில்போட்டி காரணமாக அங்காடியைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட, அதை 1910இல் நாடக அரங்காக மாற்றி அதற்கு ‘மெஜஸ்டிக் தியேட்டர்’ என்று பெயர் சூட்டினார். அதில் ஜார்ஜ் டவுன் தொழிலாளர்கள் நான்கு அணாக்களை டிக்கெட் கட்டணமாகக் கொடுத்து, காளி என்.ரத்னம், எஸ்.ஜி.கிட்டப்பா உள்ளிட்ட அந்நாளின் புகழ்பெற்ற கலைஞர்களது நாடகங்களைப் பார்த்த காலம் ஒன்றிருந்தது.
காந்தி அமர்ந்த இருக்கை: 1897இல் எம்.எட்வர்டு என்பவர் ரிப்பன் மாளிகை அருகில் உள்ள, தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுவரும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதன்முதலில் சலனத் துண்டுப் படங்களைத் திரையிட்டார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு சினிமா அறிமுகமானது.
அதன் பின்னர், சென்னையில் பல இடங்களில் செல்வந்தர்கள் மட்டுமே காணும் வகையில் துண்டுப்பட திரையிடல்கள் நடத்தப்பட்டன. பின்னர் 1911இல் கிளெக் என்கிற பிரிட்டிஷ் பெண்மணியால் ‘பயாஸ்கோப்’ என விளம்பரம் செய்யப்பட்டு, பிராட்வேயில் இருந்த ஒரு கட்டிடத்தின் விசாலமான அறையில் சலனத் துண்டுப் படங்கள் டிக்கெட் முறையில் திரையிடப்பட்டன. சில மாதங்களில் அத்திரையிடல் நிறுத்தப்பட்டது.
அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட முருகேசன், மும்பை சென்று திரையிடல் கருவிகளை வாங்கி வந்து தனது ‘மெஜஸ்டிக்’ நாடக அரங்கில் பொருத்தி 1912இல் சலனக் குறும்படங்களை (Silent short films) திரையிட்டார். அதன் பின்னர் அதில் முழுநீளச் சலனப் படங்களைத் திரையிட்டார்.
இதையே பின்னர் இடித்துவிட்டுப் பெரிய திரையரங்காக 1917இல் கட்டியெழுப்பினார். ‘மெஜஸ்டிக்’ திரையரங்கை 1931இல் ‘கினிமா செண்ட்ரல்’ எனப் பெயர் மாற்றியதுடன், இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’வைத் திரையிட்டார்.
பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் 31ஆம் தேதி பேசும்படப் பிதாமகர் ஹெச்.எம்.ரெட்டி உருவாக்கிய, தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் கதாபாத்திரங்கள் பேசிய ‘காளிதாஸ்’ என்கிற தென்னிந்தியாவின் முதல் பேசும்படத்தைத் திரையிட்டார். இந்தத் திரையரங்கு இன்னொரு விதத்திலும் சிறப்புப் பெற்றிருந்தது. 1932இல் காந்தி, ராஜாஜி, நேரு, காமராசர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட ‘ஹரிஜன மாநாடு’ இங்கேதான் நடைபெற்றது.
இத்திரையரங்கில் காந்தி அமர்ந்திருந்த இருக்கையை இன்றைக்கும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார் முருகேசனின் கொள்ளுப்பேரன் பாலசுப்ரமணியம். எம்.கே தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’ இங்கே 2 வருடங்கள் ஓடியது. முருகேசனின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக ‘கினிமா சென்ட்ரல்’ ஸ்ரீ முருகன் டாக்கீஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது.
நூற்றாண்டைத் தொட 6 ஆண்டுகளே எஞ்சியிருந்த நிலையில், 2011இல் முருகன் டாக்கீஸை இடித்து வணிக வளாகமாக மாற்றிவிட்டனர். முருகேசனின் திரையுலகத் தொடர்ச்சியை அவரது கொள்ளுப் பேத்தியான சாய்பிரியா தேவா முன்னெடுத்திருக்கிறார். அவர் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
சுற்றுலாத் தலமாக மாற்றலாம்: ‘கினிமா செண்ட்ர’லாக மாறிய மெஜஸ்டிக் தியேட்டருக்கு முன்பே கட்டப்பட்ட டாக்கீ திரையரங்கம் ‘கெயிட்டி’. ரகுபதி வெங்கையாவல் மவுண்ட் ரோடு ரவுண்டான பகுதியில் 1914இல் தொடங்கப்பட்ட ‘கெயிட்டி’யில் ஹாலிவுட்டின் முதல் பேசும்படமான ‘தி ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) 1930இல் ரிலீஸ் செய்யப்பட்டது. இதே திரையரங்கில்தான் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட கே.சுப்ரமணியத்தின் ‘தியாக பூமி’ (1939) இலவசமாகத் திரையிடப்பட்டபோது, கூட்டம் கட்டுக்கடங்காமல்போய், போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.
சென்னையில் முழு நீளச் சலனப் படங்களைத் திரையிட்ட முதல் திரையரங்கு என்கிற பெருமையைப் பெற்றது வார்விக் என்கிற ஆங்கிலேயர் 1913இல் மவுண்ட் ரோடு ரவுண்டானா பகுதியில் கட்டியெழுப்பிய ‘எலெக்ட்ரிக்’ தியேட்டர். இன்றைக்கும் சென்னை அண்ணாசாலையின் தலைமை அஞ்சலக வளாகத்தில் பாதுகாக்கப்படும் கட்டிடமாக ‘எலெக்ட்ரிக்’ தியேட்டர் இருப்பது காலத்தின் அதிசயம்தான். அரசு நினைத்தால் இதைச் சுற்றுலா தலமாக மாற்ற முடியும்.
நேஷனல் பின்னர் மினர்வா எனப் பெயர் மாறித் தற்போது பாட்சா திரையரங்காகப் படச்சுருள் பிரதிகளைக் கொண்டு பழைய படங்களை மட்டும் திரையிட்டு நினைவுகளைக் கிளறிவிடும் அதிசயத்தை இப்போதும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
- jesudoss.c@hindutamil.co.in